Published:Updated:

அவனியாபுரத்தில் களைகட்டிய ஜல்லிக்கட்டு! - மாடுபிடி வீரர்கள் உற்சாகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ( ஈ.ஜெ.நந்தகுமார் )

தை முதல் நாளான இன்று ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. காலை 8 மணிக்கு போட்டி ஆரம்பித்து மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மற்ற மாவட்டங்களில் எப்படியோ, ஆனால் மதுரைக்கு பொங்கல் தான் `தீபாவளி’ம் கொண்டாட்டம். ஒரு மாதத்துக்கு முன்பே காளைகளும், மாடுபிடி வீரர்களும் பரபரப்பாக தயாராகி விடுவார்கள். விவசாயிகள், போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், உணவகங்கள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டாரங்கள், கிராமங்கள் என்று எல்லாருமே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்.

அவனியாபுரத்தில் உறுதியேற்பு
அவனியாபுரத்தில் உறுதியேற்பு

இதில், ஜல்லிக்கட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்த நாள்களில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டும். தை முதல் நாள் அவனியாபுரத்திலும், தை 2ம் நாள் பாலமேட்டிலும், 3ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

அதன்படி தை முதல் நாளான இன்று ஜனவரி 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. காலை 8 மணிக்கு போட்டி ஆரம்பித்து மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் நடத்தப்படுகிறது.

போட்டியில் பங்கேற்கூடிய காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்திய பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பதிவு செய்யப்பட்ட காளைகள் திருப்பரங்குன்றம் சாலையில் தலா 50காளைகள் வீதம் வரிசையாக நிறுத்திவைக்கப்படுவதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு காளைகள் ஒவ்வொன்றாக வரிசையில் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஒவ்வொரு 1 மணி நேர சுற்றுக்கும் 75 மாடுபிடி வீரர்களும் களம் காண்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு அவனியாபுரம்
ஜல்லிக்கட்டு அவனியாபுரம்

போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். போட்டிக்கு முன்னதாக, காளைகளைத் துன்புறுத்த மாட்டோம். திமிலைப் பிடிக்க மாட்டோம் உள்ளிட்ட உறுதிமொழிகளை மாடுபிடி வீரர்கள் ஏற்றனர். தற்போது முடிவுற்ற முதல் சுற்றில் 75 மாடுபிடி வீரர்களும் 70 மாடுகளும் களம் கண்டு முடித்தன. பின்னர் 2வது சுற்று துவங்கியுள்ளது. போட்டிகள் அனைத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. காவல்துறை பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் குடிநீர் ஏற்பாடு, கழிப்பறை வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி என அனைத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சுற்றில் 75 மாடுபிடி வீரர்களும் 139 காளைகளும் களம்கண்டன.

அடுத்த கட்டுரைக்கு