Published:Updated:

`ஒரு நிமிடத்தில் 154 கிக்குகள்!' - டேக்வாண்டோவில் கின்னஸ் சாதனை படைத்த மதுரைத் தம்பதி

ஸ்ருதி - நாராயணன்
ஸ்ருதி - நாராயணன்

`இந்தப் போட்டியில், நானும் என் மனைவி ஸ்ருதியும் 1 நிமிடத்தில் தலா 154 கிக்குகள் தொட்டு கின்னஸ் சாதனை படைத்தோம்'.

டேக்வாண்டோ விளையாட்டு, கொரியன் தற்காப்புக் கலையாகும். அவர்களின் ராணுவத்துறையில் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தக் கலை, ஒலிம்பிக்கில் விளையாட்டுப் போட்டியாக சேர்க்கப்பட்ட பின், உலகில் பல்வேறு நாடுகளில் பரவியது. தற்போது, கடந்த 2000-லிருந்து இந்தியாவிலும் இந்தக் கலை பலராலும் ஆர்வமாக கற்றுக்கொள்ளப்படுகிறது.

பயிற்சியின் போது
பயிற்சியின் போது

90% கால்களைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்தக் கலையில் 15 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார், மதுரையைச் சேர்ந்த நாராயணன். மேலும், அவரது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து செய்த கின்னஸ் சாதனை, வரலாறு படைத்துள்ளது.

இதுகுறித்து நாராயணனிடம் பேசினோம்.``சாஃப்ட்வேர் துறையில் இருந்த நான், டேக்வாண்டோ கற்க வேண்டும் என விளையாட்டாக நினைத்த விஷயம், தற்போது என்னை ஒரு பயிற்சியாளராக மாற்றியுள்ளது. வெறும் பயிற்சியாளராக இருந்து காலத்தைக் கழிக்க வேண்டாமே என நினைத்து, கின்னஸ் சாதனைகள் செய்ய முயற்சிகள் எடுத்தேன்.

நாராயணன்
நாராயணன்

`கின்னஸ் சாதனை செய்யப் போகிறாயா...' என்று கிண்டலடித்தவர்கள், என்னுடைய 15 கின்னஸ் சாதனைகளைப் பார்த்து வாயடைத்து நிற்கின்றனர்.

இந்த டேக்வாண்டோ, எனக்கு முதலில் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தது. அதைத் தற்போது என்னுடைய மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துவருகிறேன். என்னுடைய மனைவியும் டேக்வாண்டோ பயிற்சி எடுத்துவருகிறார். அவர், ஏற்கெனவே ஒரு கின்னஸ் ரெக்கார்டு செய்துள்ளார். நான், 14 ரெக்கார்டு முடித்திருந்தேன்.

விஜய் சேதுபதியிடம் வாழ்த்துப் பெற்ற போது.
விஜய் சேதுபதியிடம் வாழ்த்துப் பெற்ற போது.

இருவரும் சேர்ந்து ஒரு கின்னஸ் படைக்க வேண்டும் எனக் கடந்த ஓராண்டாக பயிற்சி எடுத்துவந்தோம். 2 முறை கின்னஸ் முயற்சி எடுத்து தோல்வியில் முடிந்தது. சளைக்காமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, கடந்த மாதம் 20-ம் தேதி, கின்னஸ் முடித்தோம்.

ஜனவரி 20, எங்கள் திருமண நாள் என்பது கூடுதல் சிறப்பு. இதனால் இருவரும் சேர்ந்து செய்த கின்னஸ் சாதனைச் சான்றிதழை கணவன் - மனைவி என்று குறிப்பிட்டு வழங்கியது, டேக்வாண்டோவில் புதிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

கின்னஸ் சாதனை
கின்னஸ் சாதனை

இந்தப் போட்டியில் நானும் என் மனைவி ஸ்ருதியும் 1 நிமிடத்தில் தலா 154 கிக்குகள் தொட்டு கின்னஸ் சாதனை படைத்தோம். இந்த சந்தோஷம் அளப்பரியது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு