மதுரை: `விருதுக்காகச் செய்யவில்லை!’ - யாசகம் பெற்று கொரோனா நிவாரண நிதி கொடுக்கும் பாண்டியன்

மக்களிடம் யாசகம் பெற்று கொரோனா நிவாரண நிதி கொடுத்துவரும் பெரியவர் பாண்டியனுக்கு, சிறந்த சமூக சேவைக்கான விருது கொடுத்து இன்று கெளரவிக்கப்பட்டது.
காவி உடை, தோளில் துணி மூட்டை, நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச மாலை, தலையில் காவித் துண்டு, கையில் தட்டு அதில் கட்டுக்கட்டாகப் பணம் - மதுரை கலெக்டர் அலுவலக அலுவலர்களுக்கும் அங்கு வரும் மக்களுக்கும், நன்கு அறிமுகமானவர் பெரியவர் பாண்டியன். மதுரை நகரில் மக்களிடம் யாசகம் பெற்று, தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திவருபவர் பாண்டியன்.

கொரோனா காலம் ஆரம்பித்தது முதல், கொரோனா நிவாரண நிதி அளித்து வருகிறார். அதுவும், ஆயிரம், இரண்டாயிரம் இல்லை. ரூ 10,000 வீதம் 8 முறை, மதுரை கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளார் பாண்டியன்.
கடந்த சுதந்திர தினத்தன்று, பெரியவர் பாண்டியனை கெளரவிக்க எண்ணிய மதுரை மாவட்ட நிர்வாகம், அவருக்கு சிறந்த சமூக சேவைக்கான விருது கொடுக்கத் திட்டமிட்டது. அதற்காக, பாண்டியனைத் தேடியது.

ஆனால், பாண்டியனிடம் செல்போன் இல்லை. தொடர்பு முகவரியும் இல்லை. அதனால், பாண்டியனைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்பட்டனர் மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரிகள். சுதந்திர தின விழாவும் முடிந்தது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல, தான் பெற்ற யாசகப் பணம் ரூ.10,000-த்தை எடுத்துக்கொண்டு, 9-வது முறையாக, மாவட்ட கலெக்டரை சந்திக்க வந்தார் பாண்டியன். அவரை, தனது அறைக்கு அழைத்த மாவட்ட கலெக்டர் வினய், சுதந்திரதின விழாவில் கொடுக்க வைத்திருந்த சிறந்த சமூக சேவைக்கான விருதைப் பாண்டியனிடம் அளித்துப் பாராட்டினார்.

நம்மிடம் பேசிய பெரியவர் பாண்டியன், ``கோயில், பொது இடம் என மக்களிடம் யாசகம் பெற்றுதான் கொரோனா நிவாரண நிதிக்கு பணம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். விருது கொடுப்பார்கள் என நினைத்து இதைச் செய்யவில்லை. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். அவ்வளவுதான்” என்றார் எளிமையாக.
இதுவரை 90,000 ரூபாயை கொரோனா நிவாரண நிதியாகக் கொடுத்துள்ள பாண்டியன், தனக்கென ஒரு செல்போன் வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்குத் தங்குவதற்கு வீடும் இல்லை.