`பரந்த உலகம்; கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்!’- அரசுப் பள்ளி மாணவர்களின் முதல் விமானப் பயணம்

நேற்று (27.11.19) காலை 7.55 மணி அளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு மறுநாள் (28.11.19) காலை சொகுசுப் பேருந்தில் மதுரை வந்தடைந்து விடுவோம்
கனவுகளுக்கு மட்டும்தான் உலகில் எல்லை என்பது இல்லை. கனவு காண்பதற்கும் தடைகள் இல்லை! இன்று ஒருவரின் கனவு நாளை பெரிய சாதனையாக மாறும் அல்லது ஏதேனும் ஒரு பெரிய மாற்றத்துக்கு வித்திடும்.

`படிக்குற புள்ளைங்க எங்க நாலும் படிச்சுக்கும்'ன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அதுபோலதான் வலிமையான குறிக்கோள் உடையவர்கள் தன் இலக்கை அடைந்தே தீருவார்கள். இங்கு வாழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம் அதை பயன்படுத்திக்கொள்ளுதலும் மிக அவசியமான ஒன்று.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் நன்கு படிக்கக்கூடிய 10 ஏழை மாணவர்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார்கள் மதுரை மீனாட்சி ரோட்டரி கிளப்பைச் சேர்ந்தவர்கள். `இந்த பரந்த உலகத்தில் பல்வேறு வாய்ப்புகள் வெளியில் கொட்டிக் கிடக்கிறது’ என அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பயணம் என்கிறார்கள்.

இது குறித்து ரோட்டரி கிளப்பைச் சேர்ந்த ரங்கநாதன் நம்மிடம் பேசுகையில், ``அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் நன்றாக படிக்கும் 10 ஏழை மாணர்களைத் தேர்வுசெய்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ரோட்டரி கிளப்பின் உதவியோடு அவர்களுக்கான பல பொழுதுபோக்கு விளையாட்டுகள் நடத்தி, பின் இரவு சொகுசுப் பேருந்தில் அவர்களை அங்கிருந்து மீண்டும் மதுரைக்கு கூட்டிவருவதுதான் திட்டம்.
அவர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காகவும், அவர்களுக்கென பல்வேறு வாய்ப்புகள் வெளியில் உள்ளது, அதற்காக அவர்களைத் தயார்செய்துகொள்ள எங்களால் முடிந்த ஓர் உந்துகோல்தான் இந்தத் திட்டம். நேற்று (27.11.19) காலை 7.55 மணி அளவில் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு மறுநாள் (28.11.19) காலை சொகுசுப் பேருந்தில் மதுரை வந்தடைந்துவிடுவோம்" என்றார்.

மாணவர்களிடம் பேசியபோது, ``இது எங்களுக்கு ரொம்ப புது அனுபவமா இருந்துச்சு, வானத்துல போற ஏரோபிலேன அதிசயமா பாப்போம், இப்போ அதுலயே நாங்க பறந்திருக்கிறோம். ஏரோபிலேன்-ல போவோம்ன்னு நெனச்சதே இல்லை, ரொம்ப சந்தோஷமா இருக்கோம்" என்று நெகிழ்கிறார்கள் மாணவர்கள்.