Published:Updated:

நெல்லை: சிறையில் கொலையான முத்து மனோ; 70 நாள்களாக வாங்கப்படாத உடல்; - நீதிமன்றம் புதிய உத்தரவு!

சிறையில் கொலையான முத்து மனோ
சிறையில் கொலையான முத்து மனோ

இதுவரை 100 பேருக்கும் அதிகமானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடதியிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறையின் ஜெயிலர், சிறைக் காவலர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்தவர், முத்து மனோ. 26 வயது இளைஞரான இவர் சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் இளைஞர் ஒருவரைக் கொலை செய்ய முயன்றதாக அவரை போலீஸார் கைது செய்தார்கள்.

நெல்லை: நண்பனின் தாயிடம் தவறாக நடந்த ரெளடி; 5 வருடங்கள் கழித்துக் கொலை செய்த இளைஞர்கள்!

ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்து மனோ, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்குள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல அங்கிருந்த கைதிகளால் முத்து மனோ தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 100 பேருக்கும் அதிகமானவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடதியிருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சிறைத்துறையின் ஜெயிலர், சிறைக் காவலர்கள் என ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, முத்து மனோவைத் தாக்கிய ஏழு சிறைக்கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முத்து மனோ தந்தை பாபநாசம்
முத்து மனோ தந்தை பாபநாசம்

முத்து மனோ கொலை சம்பவத்துக்கு உடந்தையாக சிறைத்துறையினர் இருந்ததாக அவரது தந்தை பாபநாசம் குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், ரூ 2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை முத்து மனோ உடலை வாங்க மாட்டோம் என மறுப்புத் தெரிவித்துவரும் பெற்றோரும் உறவினர்களும் சொந்த ஊரான வாகைக்குளத்தில் உள்ளிருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

உறவினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
உறவினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

இந்த நிலையில்,முத்து மனோ உடலை நாளைக்குள் (ஜூலை 2-ம் தேதி) பெற்றோர் வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அப்படி வாங்காவிட்டால் அவரது உடலை மாவட்ட நிர்வாகமே அடக்கம் செய்து அது பற்றிய தகவலை 5-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதனால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, முத்து மனோ விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்த சம்பவம் பற்றி மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப்பிரிவு முழுமையாக விசாரித்து அறிக்கை தக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு