Published:Updated:

`அந்த துயரை என்னால் உணரமுடிகிறது!' - விரல் துண்டிக்கப்பட்ட குழந்தைக்கு நிவாரணம்; உத்தரவிட்ட நீதிபதி

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

வழக்கு விசாரணைக்கு வந்த தினத்திலேயே இடைக்கால நிவாரணத் தொகையினை வழங்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.75,000 வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ``என்னைப் போன்ற ஏழைப் பெற்றோர் எதிர்காலத்தில் இது போல் பாதிக்கப்படக்கூடாது. அதற்கான முன்னோட்டமாகவே நீதிமன்ற உத்தரவை பார்க்கிறேன்" என்று இந்த உத்தரவு குறித்து குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவமனை
தஞ்சை அரசு மருத்துவமனை

தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் காட்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியான கணேசனின் மனைவி பிரியதர்ஷினி, கடந்த மே மாதம் 25-ம் தேதி தனது முதல் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் வீட்டுக்கு மகாலட்சுமியே வந்து விட்டதாக தம்பதியும், அவர்களின் குடும்பத்தினரும் மனம் மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைக்குச் சத்துக் குறைபாடு இருப்பதாகக் கூறி, இடது கையில் வென்ஃப்ளான் மூலம் குளுக்கோஸ் ஏற்றி வந்தனர் மருத்துவமனை ஊழியர்கள். குழந்தை உடல்நிலை தேறியதை அடுத்து தாயையும் சேயையும் டிஸ்சார்ஜ் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே, குழந்தையின் கையில் வென்ஃப்ளானை அகற்ற, கையைச் சுற்றி ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியை, கத்திரிக்கோலால் பணியிலிருந்த செவிலியர் அகற்றினார். அப்போது செவிலியர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் பிளாஸ்திரிக்கு பதிலாக குழந்தையின் இடது கை கட்டை விரலை வெட்டிவிட்ட அசம்பாவிதம் நடந்துவிட்டது. இதில் குழந்தையின் விரல் பாதியோடு துண்டானது.

தஞ்சை அரசு மருத்துவமனை
தஞ்சை அரசு மருத்துவமனை

குழந்தையின் பெற்றோரான கணேசனும், பிரியதர்ஷினியும் துடிதுடித்தனர். மருத்துவமனை நிர்வாகம்,`விரல் துண்டாகவில்லை, சதைப் பகுதிதான் வெட்டுப்பட்டுள்ளது' என்று சொல்லி சமாளித்தது. பின்னர், துண்டான பகுதியை இணைத்து வைத்து தையல் போடப்பட்டது. இது குறித்து கடந்த 8-ம் தேதி விகடன் தளத்தில், `செவிலியரின் கவனக்குறைவால் துண்டான குழந்தையின் விரல், அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததுடன், இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு மருத்துவக் கல்லுாரித் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. குழந்தையின் விரல் துண்டான விவகாரத்தில் பலரும் அதிர்ச்சியடைந்ததுடன் அரசு மருத்துவமனைக்கு எதிரான கண்டங்களையும் பதிவு செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனை
தஞ்சை அரசு மருத்துவமனை

இந்நிலையில் கணேசன் - பிரியதர்ஷினி தம்பதிக்கு நீதி கேட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில் மதுரையைச் சேர்ந்த சுகாதார உரிமை ஆர்வலர்களான ஆனந்தராஜ், வெரோனிகா மேரி தம்பதி, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுமணி மூலம் மனுத்தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையில், குழந்தையின் கைவிரல் துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 75,000 வழங்க வேண்டும் என்றும், குழந்தைக்கு உயரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை மாதம் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது தொடர்பாக கணேசனிடம் பேசினோம்.

``துண்டான விரல் பகுதியைச் சேர்த்து வைத்து மருத்துவர்கள் தையல் போட்டு, ரத்த ஓட்டம் இருந்தால் மட்டுமே துண்டான பகுதிகள் சேரும் எனக் கூறியிருந்தனர். ஆனால் விரல் இணையவில்லை. மாறாக, துண்டான பகுதி அழுகிவிட்டது. பின்னர் அந்தப் பகுதியை நீக்கிவிட்டு தையல் போட்டனர். கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அந்தப் பகுதி ஆறியதைத் தொடர்ந்து, நேற்றுதான் குழந்தைக்குத் தையல் பிரிக்கப்பட்டது. சிகிச்சை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

செவிலியரின் கவனக்குறைவால் துண்டான குழந்தையின் கைவிரல்; அரசு மருத்துவ மனையில் நடந்தது என்ன?

எங்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.75,000 வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நேரத்தில் எங்களுக்கான நீதிக்காக வித்திட்ட அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏழை, எளிய மக்கள்தான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் கவனக்குறைவால் நடைபெறும் இது போன்ற சம்பவங்கள், அரசு மருத்துவமனை மேல் இருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன.

இந்தப் பணம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. துண்டான விரலால் ஏற்படக்கூடிய செயல் குறைபாட்டால் என் மகள் வாழ்க்கை முழுக்க என்னென்ன இன்னல்களைச் சந்திக்கப் போகிறாள் என்று நினைத்தாலே என் கண்கள் கலங்குகின்றன. எந்தக் குறையும் இல்லாமல் பிறந்த என் பிள்ளைக்கு, செவிலியரின் அலட்சியத்தால் இந்தப் பெரிய குறை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்கவே கூடாது. என்னைப் போன்ற ஏழைப் பெற்றோர் இதுபோல் பாதிக்கப்படக்கூடாது. அதற்கான முன்னோட்டமாகவே நீதிமன்ற உத்தரவை நான் பார்க்கிறேன்'' என்றார்.

கொரோனா: துபாயில் தாய் பலியான துயரம், விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 11 மாதக் குழந்தை!

வழக்கறிஞர் அழகுமணியிடம் பேசினோம்.

``பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும். குழந்தைக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பிட்ட மருத்துவமனையில் நிலவும் செவிலியர் பற்றாக்குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் வலியுறுத்தியே இந்த வழக்கில் மனுதாக்கல் செய்திருந்தோம். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், வழக்கு விசாரணைக்கு வந்த நேற்றைய தினத்திலேயே இடைக்கால நிவாரண தொகையினை வழங்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.

`பெற்றோர் ஸ்தானத்திலிருந்து இந்தச் சம்பவத்தினை பார்க்கிறேன். அந்த துயரை என்னால் உணர முடிகிறது' என்று கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், `இது ஓர் இடைக்கால உத்தரவு மட்டுமே. தஞ்சாவூர் அரசு மருத்துவமனை செயல்பாடுகள் குறித்து ஏற்கெனவே நான் அறிந்திருக்கிறேன். பெற்றோருக்கு உரிய இழப்பீடு குறித்தும், குழந்தைக்கு உயரிய சிகிச்சை கொடுப்பது குறித்தும் இறுதி உத்தரவில் தெரிவிக்கப்படும்' என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்'' என்றார் வழக்கறிஞர் அழகுமணி.

அடுத்த கட்டுரைக்கு