ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு மாதம் ₹7,500 வழங்க வேண்டும்... உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாதிக்கப்பட்ட பெண் இணையம் மூலம் நீதிபதிகள் முன் ஆஜராகி, 'மருத்துவர்கள் என்னை சத்தான உணவு, பழங்களை எடுத்துக்கொள்ள கூறியுள்ளனர். ஆனால், அதற்கு செலவுசெய்ய என்னிடம் வசதி இல்லை' எனக் கூறினார்.
இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம் அது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி அவர். ஏற்கெனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தையைக் கருவுற்ற அவர், 8 மாத கர்ப்பிணியாக சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தம் குறைவாக இருப்பதால் ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்ட ரத்தத்தால்தான் இந்தத் தொற்று அவருக்கு ஏற்பட்டது. 2018 டிசம்பர் மாதம் செய்தியான இந்த அவலம், பூதாகரமாக வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உணவுக்காக மாதம் 7,500 ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு 2019 ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என்பது மருத்துவ ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, அந்தப் பெண்ணுக்கான நிவாரணம் கோரிய மனுக்களை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அமர்வு 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறப்பித்த உத்தரவில், `ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாநில அரசு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதில் 10 லட்சம் ரூபாய் அந்தப் பெண்ணின் பெயரில் தேசிய வங்கியில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். மீதமுள்ள 15 லட்சம் ரூபாய் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 450 சதுர அடிக்கு குறையாமல் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட சுற்றுச் சுவருடன்கூடிய வீடு கட்டித் தர வேண்டும்' என்று உத்தரவிட்டது.
மேலும் அந்தப் பெண்ணுக்கு அரசு நிரந்தர வேலை, பயணம் செய்ய இருசக்கர வாகனம், வீட்டுக்குத் தனியாகக் குடிநீர் வசதி என அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கவும் நீதிமன்றம் உத்தவிட்டது. அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட பெண் இணையம் மூலம் ஆஜராகி, 'மருத்துவர்கள் என்னை சத்தான உணவு, பழங்களை எடுத்துக்கொள்ள கூறியுள்ளனர். ஆனால், அதற்கு செலவு செய்ய என்னிடம் வசதி இல்லை' எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், அந்தப் பெண்ணுக்கு அரசு மாதம்தோறும் 7,500 ரூபாய் உணவுக்காக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவரின் கல்வித் தகுதிக்கு ஏற்ப இளநிலை ஊழியர் பணி வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணுக்கான மருத்துவ வசதிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.