Published:Updated:

டாஸ்மாக்: `மதுபானம் ஆறாக ஓடுகிறது; அரசு கவலைகொள்ளவில்லை!' - உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தும்படி வலியுறுத்தினர்.

தாஹா முகமது என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``மதுரை தட்டான்குளம் பிரதான சாலை மற்றும் மேலூர் சாலையில் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளிலெல்லாம் மதுபானம் ஆறாக ஓடுகிறது. வருவாய் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், மாநிலமே மதுவில் மூழ்கியிருப்பது குறித்து அரசு கவலைகொள்வதில்லை. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூபாய் 30,000 கோடி வருமானம் ஈட்டும் தமிழக அரசு, மக்கள் நலனுக்கான பொது சுகாதாரத்துக்காக 90,000 கோடி செலவிடுகிறது.

பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே வைப்பதற்கு மதுபான கடைகள் ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. பூரண மதுவிலக்கு என்பதை நீதிமன்றத்தின் வலியுறுத்தலாக மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகப் பார்க்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் உயரும், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் உடல்நிலை ஆரோக்கியம் அடையும் என்பவை உள்ளிட்ட கூடுதலன விஷயங்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்
கோப்புப்படம்

பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தும்படி வலியுறுத்தினர். மேலும், இந்த யோசனைகளைத் தமிழக அரசு உற்றுநோக்கி கவனிக்குமா என்ற கேள்வியையும் நீதிபதிகள் எழுப்பியிருக்கிறார்கள்.

மேலும், தாஹா முகமது தொடர்ந்த இந்த டாஸ்மாக் வழக்கில் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் கடை, 28.02.2021-ம் தேதிக்குப் பிறகு வேறு இடத்துக்கு மாற்றப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கடை மாற்றப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு