பணி செய்யவிடாமல் தடுப்பதாக பெண் பூசாரி குற்றச்சாட்டு... போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் பூசாரி பின்னியக்காள். இவர் பூசாரியாக இருந்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெண் பூசாரி பாதுகாப்பு கோரி அளித்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெண் பூசாரி பின்னியக்காள். இவர் பூசாரியாக இருந்துவரும் சூழலில், தற்போது அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தை நாடியபோது, அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நல்லுதேவன்பட்டியைச் சேர்ந்த பின்னியக்காள் அளித்திருந்த மனுவில், "லிங்கநாயக்கன்பட்டி அருகே உள்ளது துர்க்கையம்மன் கோயில். இந்தக் கோயிலில் என் குடும்பத்தினர் சுமார் 10 தலைமுறைகளாகப் பூசாரியாக இருந்து பூஜை செய்து வருகிறோம். என் தந்தை இந்தக் கோயிலில் பூசாரியாக இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரின் ஒரே வாரிசான நான் பூசாரி பணி செய்தேன்.
என் தந்தை இறந்த பிறகு, நான் பெண் என்பதால் பாகுபாடு காட்டிய கிராமத்தினர் சிலர், நான் பூசாரியாகப் பணியாற்றக் கூடாது எனச் சூழ்ச்சி செய்தனர்.
இதை எதிர்த்து நான் மனு அளிக்க, தொடர்ந்து பூசாரியாக நான் பணியாற்ற உயர் நீதிமன்றம் அனுமதித்தது. இதை எதிர்த்த அப்பீலில் எனக்கான உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டது. சிவில் நீதிமன்றமும் என்னை அனுமதித்தது. ஆனால், ரெவன்யூ மற்றும் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையிலேயே நடக்கின்றனர். என்னை பூசாரிப் பணி செய்யவிடாமல் தடுக்கின்றனர். இதுகுறித்துப் புகார் அளித்தால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

கடந்த 12 ஆண்டுகளாக இந்த நிலை நீடிக்கிறது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே என்னால் பூசாரியாகப் பணியாற்ற முடியும். பெண் என்ற காரணத்தால் தடுக்கப்படும் எனக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கி பூசாரியாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிஷாபானு, மனுதாரருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.