Published:Updated:

`காந்திஜியின் ஆட்சி வர வேண்டும்...' - நடையாய் நடக்கும் மதுரை `நவாப்ஜான்!'

தினமும் மதுரை நகரமெங்கும் நடந்தே சுற்றி வருகிறார் காந்தியவாதி `நான்தான்டா நவாப்ஜான்'.

நவாப்ஜான்
நவாப்ஜான்

''நாசம் செய்யும் அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் சொத்துகளையும் அவர்கள் குடும்பத்தினரின் சொத்துகளை அரசு பிடுங்கிக்கொண்டு அவர்களை நாடு கடத்தணும்...'' என்று நின்று கவனிக்க வைக்கும், நெருப்பு வாசகங்கள் அடங்கிய பதாகையை உடலில் அணிந்துகொண்டு, மகாத்மா காந்தியின் படத்தை தலையில் கிரீடமாக அணிந்துகொண்டு தினமும் மதுரை நகரமெங்கும் நடந்தே சுற்றி வருகிறார் காந்தியவாதி `நான்தான்டா நவாப்ஜான்'.

நவாப்ஜான்
நவாப்ஜான்

பொது நிகழ்சிகள், மக்கள் கூடும் இடங்ளில் எல்லாம் இவரைக் காணலாம். இவர் வந்தாலே நாற்காலியில் அமர வைத்து மக்கள் மரியாதை செய்கிறார்கள். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காந்திய கருத்துகளையும், லஞ்சம், மது, சாதி, மத வேற்றுமைக்கு எதிராக தன் உடம்பில் அணிந்துள்ள பதாகை மூலமே பரப்புரை செய்து வருவதைத் தனது தினசரி வாழ்க்கையாகக் கொண்ட நவாப்ஜானை அறியாதவர்கள் மதுரையில் யாருமில்லை எனலாம்.

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த அதே தோரணையுடன் காந்தி அருங்காட்சியகம் வந்தவரிடம் பேசினோம், ''வில்லாபுரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறேன். மகாத்மா காந்தியின் சிந்தனையில் கவரப்பட்டவன். காந்திஜி கொள்கையுடைய ஆட்சி நாட்டில் ஏற்பட வேண்டும் அப்போதுதான் நாட்டில் மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

நவாப்ஜான்
நவாப்ஜான்

அதே நேரம், நாட்டில் நடக்கும் அரசுத்துறையில் லஞ்சம், ரவுடிகள் அராஜகம், காவல்துறையின் பொய் வழக்குகள், ரேஷன் கடை மோசடிகள் பற்றி தப்பு செய்கிறவர்கள் உணரும்படியும், மக்கள் நேர்மையாக நடந்துகொண்டு இதை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இந்த வாசகங்களை என் உடலில் அணிந்து கொண்டு மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்கிறேன்'' என்றார்.

இவரின் மத நல்லிணக்க செயல்பாடுகளையும், காந்திய சிந்தனை பரப்புரையை அங்கீகரிக்கும் வகையில் ஓ.பி.எஸ் முதலமைச்சராக இருந்தபோது கோட்டை அமீர் விருதை தமிழக அரசு வழங்கி கௌரவித்துள்ளது.

காந்தியின் பேரைச்சொல்லி காந்தி நோட்டுகளைப் பதுக்கி வைக்கும் கும்பல்கள் உள்ள நம் நாட்டில் நவாப்ஜான் போன்ற காந்தியவாதிகள் இருப்பது நமக்குப் பெருமை.