Published:Updated:

`காவலன் செயலியைப் பயன்படுத்தினால் 10% டிஸ்கவுன்ட்!'- அசத்தும் மதுரை மீனாட்சி மெஸ்

ராஜபிரபு
ராஜபிரபு

காவலன் ஆப்பைப் பயன்படுத்துவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை மீனாட்சி மெஸ் தள்ளுபடி அறிவித்துள்ளது. காவலன் ஆப்பைப் பயன்படுத்தும் பெண்களுக்கு 10% தள்ளுபடி அறிவித்து, காவலன் ஆப் பயன்கள் குறித்துப் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.

பெண்களின் நலன் கருதும் வகையில், 'காவலன் செயலி' என்ற ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது காவல்துறை. அரசு சார்பில் இந்த முயற்சியை எடுத்தாலும், மதுரை பொன்மேனி பகுதியில் உணவகம் நடத்திவரும் ராஜ பிரபு என்ற இளைஞர், தனது வாடிக்கையாளர்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

மதுரை மீனாட்சி மெஸ்
மதுரை மீனாட்சி மெஸ்

ராஜபிரபு, மதுரை பொன்மேனி பகுதியில் 'மதுரை மீனாட்சி மெஸ்' என்ற பெயரில், கடந்த ஒரு வருடமாக உணவகம் ஒன்றை நடத்திவருகிறார். பெண்களுக்கு நடக்கும் அசம்பாவிதத்தைத் தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டது, இந்த காவலன் செயலி. இந்தச் செயலியைப் பயன்படுத்துவோருக்கு சாப்பாட்டு பில்லில் 10% தள்ளுபடி செய்துவருகிறார் ராஜ பிரபு.

இதுகுறித்து ராஜ பிரபு கூறுகையில், ``பெண்கள் மீதான வன்முறைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதைத் தடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த காவலன் செயலி. என் சொந்த ஊர் தஞ்சாவூர். மதுரையில் கடந்த ஒரு வருடமாக உணவகம் நடத்திவருகிறேன். ஊரிலுள்ள என் தங்கைக்கும் என் அம்மாவுக்கும் இந்தச் செயலியைப் பதிவிறக்கம்செய்து கொடுத்துள்ளேன்.

என் அம்மாவும் தங்கையும் இந்தச் செயலிமூலம் பயனடைவார்கள் என்ற தைரியத்தில், நான் மதுரையில் உணவகம் நடத்திவருகிறேன். இந்நிலையில், சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வேலைக்காக மதுரையில் தங்கிவரும் அனேக பெண்களை நாள்தோறும் சந்திக்கிறேன்.

மதுரை மீனாட்சி மெஸ்
மதுரை மீனாட்சி மெஸ்

அவர்கள், இந்தக் காவலன் செயலியை பயன்படுத்தினால் நல்லது என்று நினைத்தேன். என் தொழில்மூலம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என யோசித்து, காவலன் செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, என் உணவகத்தில் சாப்பாட்டு பில்லில் 10% தள்ளுபடி செய்வதாக அறிவித்தேன். இதுவரை பயன்படுத்தாமல் மற்றும் காவலன் செயலியைப் பற்றி அறியாதவர்கள், இங்கு சாப்பிட்டுவிட்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து, ஆஃபரைப் பெற்று சந்தோஷப்படுகிறார்கள்.

நாள்தோறும் பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்களை செய்தித்தாள்களில் பார்த்து வேதனை அடைந்த நான், என் கடைக்கு சாப்பிட வருபவர்களிடமாவது புரிதலை ஏற்படுத்த வேண்டும் எனத் தொடங்கிய சிறிய முயற்சிதான், இந்த 10 சதவிகித ஆஃபர். அரசு கொண்டு வரும் இதுபோன்ற நல்ல திட்டங்களுக்கு இளைஞர்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்" என்றார்.

ராஜபிரபு
ராஜபிரபு

உயர் பதவியில் இருந்தால் மட்டுமே மக்களுக்கான நன்மையைச் செய்ய முடியும் என்ற பலரின் எண்ணத்தை உடைத்து, தான் செய்யும் எந்தத் தொழிலைக்கொண்டும் மக்களிடம் நன்மையை கொண்டு சேர்க்கலாம் என நிரூபித்துள்ளார், இளைஞர் ராஜபிரபு.

அடுத்த கட்டுரைக்கு