Published:Updated:

`ஆதரவற்றோர் 3,000 பேர்; 200 தன்னார்வலர்கள்; தேடிச் செல்லும் உணவு!’- உதவிக்கரம் நீட்டும் மதுரை எம்.பி

உணவு வழங்கும் அன்னவாசல் தன்னார்வலர்
உணவு வழங்கும் அன்னவாசல் தன்னார்வலர் ( என்.ஜி.மணிகண்டன் )

கொடையாளர்களின் பொருளுதவியோடு, 200-க்கும் மேற்பட்ட தோழர்களும் தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் நாள்தோறும் 3,000 பேருக்கு மதிய உணவை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மதுரையில் 6 இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திறந்திருக்கும் அன்னவாசல் மூலம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது.

மாமதுரையின் அன்னவாசல்
மாமதுரையின் அன்னவாசல்
என்.ஜி.மணிகண்டன்

கொரோனா சிகிச்சைக்காகத் தன்னுடைய எம்.பி நிதியிலிருந்து நிதியை ஒதுக்கிய எம்.பி. சு.வெங்கடேசன், மதுரை இராசாசி மருத்துவமனைக்குத் தேவையான முக்கிய மருத்துவ உபகரணங்களையும் மருந்துகளையும் உடனே தருவித்துக் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணியில் ஈடுப்பட்டுள்ள அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் ஒரு லட்சம் முகக்கவசங்களை விநியோகித்தார். இலங்கை அகதிகள் முகாம் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

உணவு வழங்கும் அன்னவாசல் தன்னார்வலர்
உணவு வழங்கும் அன்னவாசல் தன்னார்வலர்
என்.ஜி.மணிகண்டன்

இந்த நிலையில், மதுரையில் அன்னவாசல் என்ற பெயரில் 6 இடங்களில் உணவு தயாரிக்கும் மையங்களை தொடங்கியுள்ளார். இதுபற்றி சு.வெங்கடேசனிடம் பேசினோம். ``மதுரையில் தனித்திருப்பவர்கள், கைவிடப்பட்டவர்கள், கவனிப்பாரற்ற முதியவர்கள் என தாமே உணவு சமைத்துச் சாப்பிட வழியின்றித் தவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு மதிய உணவினை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று தருகிற முயற்சியினை கடந்த மே 1-ம் தேதி `மாமதுரையின் அன்னவாசல்’ என்ற பெயரில் தொடங்கினோம்.

கொடையாளர்களின் பொருளுதவியோடு, 200-க்கும் மேற்பட்ட தோழர்களும் தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் நாள்தோறும் 3,000 பேருக்கு மதிய உணவை வழங்கிக் கொண்டிருக்கிறோம். நோய் எதிர்ப்பாற்றல் என்னும் ஒற்றைச் சொல்தான் இன்றளவில் கொரோனாவிற்கு எதிராக உலகின் கையிலுள்ள ஒரே ஆயுதம். அந்த எதிர்ப்பாற்றலுக்கு உணவுதான் அடிப்படை. அதை ஆதரவற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து வழங்கிக்கொண்டிருக்கிறோம்

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

மேலும், உடலுக்குத் தேவையான புரதத்தை முட்டை முழுமையாகக் கொடுக்கும். அதையும் கவனத்தில் கொண்டு நாங்கள் வழங்கும் மதிய உணவோடு முட்டையும் சேர்த்துக் கொடுக்கலாம் என யோசித்தோம். அதற்காக சுகுணா ஃபுட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுந்தரராஜனிடம பேசினேன். `நல்ல காரியங்களுக்கு, எங்களது பங்கு அவசியம் இருக்கும்’ எனச் சொல்லி எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். 10-ம் தேதி முதல் மாமதுரை அன்னவாசலில் முட்டையுடன் மதிய உணவு வழங்க உள்ளோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு