Published:Updated:

`மோடி நிகழ்ச்சியில் 26,750; மதுரையில் 50,000' - மாற்றுத் திறனாளிகள் நலனை முன்னெடுக்கும் மதுரை எம்.பி

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி ( ஈ.ஜெ.நந்தகுமார் )

''மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.''

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் ஒன்றை மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னெடுத்திருக்கிறார். இதற்கான சிறப்பு முகாம், வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மதுரையில் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசனிடம் பேசினோம். ``அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், அனைத்து வகையான உபகரணங்களையும் இலவசமாக வழங்க மத்திய அரசு ஏடிபிஐ என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குன்றியவர்கள், காது கேளாதவர்கள், வாய்பேச முடியாதவர்கள், கண்பார்வைக் குறைபாடு உடையவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வி, குழந்தைகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றன. இந்தத் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இந்த திட்டத்தில் இருக்கும் சிறப்பே, இதன்கீழ் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உபகரணங்கள் வழங்கலாம். அதேபோல், ஒதுக்கப்படும் நிதிக்கும் கட்டுப்பாடு கிடையாது. உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் உபகரணங்களை நம்மால் பெற்றுக்கொடுக்க முடியும்.

மத்திய அமைச்சருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும் நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இந்த திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்துவதற்கான அனுமதியை நான் பெற்றிருக்கிறேன். முதற்கட்டமாக, இந்த திட்டத்தின்கீழ் பயனடைய இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, எந்த மாதிரியான உபகரணங்கள் தேவை, எந்த அளவில் தேவை என்பதைக் கணக்கிடுவார்கள். அப்படி கணக்கிடுவதற்கான சிறப்பு முகாம், மதுரை மாவட்டத்தில் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மதுரையில், ஒன்றிய அளவிலும் மாநகராட்சியில் மண்டலவாரியாகவும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள், மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்.
சு.வெங்கடேசன் எம்.பி
`மோடி நிகழ்ச்சியில் 26,750; மதுரையில் 50,000' - மாற்றுத் திறனாளிகள் நலனை முன்னெடுக்கும் மதுரை எம்.பி

மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் செய்யும் மத்திய அரசின் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மட்டுமே இருக்கிறது. சிறப்பு முகாமில், அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் குறித்து கணக்கெடுக்க இருக்கிறார்கள். கணக்கெடுப்புக்குப் பின், ஒன்று அல்லது ஒன்றரை மாதத்தில் அந்தப் பொருள்களைத் தயாரிப்பார்கள். அதன்பின்னர், நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடுசெய்து, அந்த உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க இருக்கிறோம்.

இந்த திட்டத்தின்கீழ், உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறும் விழாவில், சுமார் 26,750 பேருக்கு பிரதமர் மோடி உபகரணங்களை வழங்க இருக்கிறார். இந்திய அளவில் இதுவே பெரிய எண்ணிக்கை. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 46,848 மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றனர். அந்த எண்ணிக்கை தற்போது 50,000-த்தைத் தாண்டும். குறைந்தபட்சம் 30,000 பேரையாவது இதில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். மதுரை மாவட்டத்தில் 64 பேரில் ஒருவர் மாற்றுத்திறனாளி என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. அப்படிப் பார்த்தால், ஒரு தெருவில் இரண்டு அல்லது 3 பேர் இருப்பர். அப்படி உதவிகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளை அப்பகுதி இளைஞர்கள், இந்த சிறப்பு முகாமில் பங்கெடுக்க உதவிசெய்ய வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் 'ட்ரீம் கிச்சன்' தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸில் நல்ல முயற்சி!

ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் இளைஞர்கள், தன்னார்வத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ முன்வர வேண்டும். அனைத்து வகையான உபகரணங்களையும் இலவசமாக அரசிடமிருந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்பதால், கூடுமானவரை அதிக எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளை இந்த சிறப்பு முகாமில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும். அரசு நடத்தும் இலவச முகாம் என்றில்லாமல் ஒவ்வொருவரின் அக்கறையின் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவியை நாம் இணைந்து முன்னெடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியோ, உபகரணங்களோ கிடைக்காதவர்கள் மதுரை மாவட்டத்தில் இல்லை என்ற நிலை வர வேண்டும்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு