Published:Updated:

மதுரை: `தமிழ்நாடு அரசு சட்டப்பிரிவு 328-க்கு எதிராக செயல்படுகிறது!’-டி.ஜி.பி-க்கு மதுரை நந்தினி மனு

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

மதுரை நந்தினி, ``கொள்கை முடிவு என்று ஒரு குற்றச்செயலை அரசே செய்வது கண்டனத்துக்குரியது. கடந்த 10 ஆண்டுகளாக இதை அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும், நீதிமன்றத்துக்கும் தொடர்ந்து எடுத்துச் சொல்லிவருகிறோம். ஆனால்...”

மதுவுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் தன் தந்தை ஆனந்தனுடன் தொடர்ந்து போராடிவந்த, சட்டக்கல்வியை முடித்த மதுரை நந்தினி, திமுக ஆட்சிக்கு வந்த பின்பும் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிவருகிறார்.

 நந்தினி
நந்தினி

இதனால் வழக்கு, கைது, வீட்டுக்காவல் என்று பரபரப்பு ஏற்பட்டுவரும் சூழலில் புதிய டி.ஜி.பி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து டாஸ்மாக் பிரச்னைக்காகவும், பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அளிக்க கடந்த வாரம் தந்தை ஆனந்தனுடன் சென்னை செல்ல முயன்றபோது ரயில் நிலையத்தில் காவல்துறையால் தடுக்கப்பட்டார்.

இந்தநிலையில், தன் புகார் மனுவை மின்னஞ்சல் மூலம் டி.ஜி.பி-க்கு அனுப்பியுள்ளார். அதில், ``தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் குடி போதையில்தான் நடக்கின்றன என்பதும், தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளே இதற்கு மூல காரணம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் போதையை விற்று, குற்றங்களைத் தூண்டிக்கொண்டேயிருக்கும்வரை குற்றங்களைத் தடுப்பது இயலாத காரியம்.

மேலும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 328-ன்படி மதிமயக்கம் செய்யக்கூடிய, போதை தரக்கூடிய, உடல்நலத்தைக் கெடுக்கக்கூடிய எந்தப் பொருளையும் ஒருவர் மற்றொருவருக்குக் கொடுப்பது குற்றம். டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் அனைத்தும் மதிமயக்கம் தரக்கூடியவை, போதை தரக்கூடியவை, உடல்நலத்துக்கு தீங்கானவை என்பதும் உண்மை.

நீட் தேர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த முயன்ற நந்தினி கைது; என்ன நடந்தது?

இதன்படி, தமிழ்நாடு அரசே சட்டப்பிரிவு 328-க்கு எதிராக குற்றச் செயலில் ஈடுபடுவதும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை சட்டவிரோதமான டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் காப்பதும் மிக மோசமான சட்ட மீறல்களாகும்.

மதுரை நந்தினி
மதுரை நந்தினி

கொள்கை முடிவு என்று ஒரு குற்றச்செயலை அரசே செய்வது கண்டனத்துக்குரியது. கடந்த 10 ஆண்டுகளாக இதை அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும், நீதிமன்றத்துக்கும் தொடர்ந்து எடுத்துச் சொல்லிவருகிறோம். ஆனால், யாருமே சட்டத்தை மதிப்பதாக இல்லை. சமுதாய அமைதியைப் பற்றியோ, மக்களின் வாழ்வைப் பற்றியோ துளியும் சிந்திப்பதாகவும் இல்லை.

தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கைக் கெடுக்கக்கூடிய, குற்றங்களை தூண்டக்கூடிய, மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கெடுக்கக்கூடிய சட்டவிரோதமான டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

மதுரை நந்தினியின் மதுவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது!

அதிகாலையில் வீட்டைச் சுற்றிய போலீஸ்... ஹை அலர்ட்! -`மதுரை நந்தினி' திடீர் கைது
அடுத்த கட்டுரைக்கு