Published:Updated:

`இன்னும் எத்தனை நாள் என்னால மனு அனுப்பமுடியும்? அரசுதான் உதவணும்!' - பேத்திகளுக்காக மன்றாடும் தாத்தா

ஜோசப்
ஜோசப்

இந்த உத்தரவுக்காகப் பெரியவர் ஜோசப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றும் நாளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``இப்ப எனக்கு வயசு 76 ஆச்சு. இன்னும் எத்தனை நாளைக்கு அரசாங்கத்திடம் உதவி கேட்டு மனு அனுப்பிக்கிட்டு இருப்பேன்? எனக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, என் பேத்திகளோட எதிர்காலம் என்னாகும்கிற கவலைதான் தூங்க விட மாட்டேங்குது" என்று பெரியவர் ஜோசப் கண்கலங்குகிறார்.

பிறந்ததிலிருந்து அரியவகை கண் பார்வை குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரிகள், 20 வயதாகும் ரெபேகா ஜே சுஸ்மிதா, 17 வயதாகும் மெர்லின் ஜே டயானா. தமிழகத்திலுள்ள முக்கிய கண் மருத்துவமனைகளில் பரிசோதித்தும், சிகிச்சையால் நோயைத் தீர்க்க முடியாது என்று சொல்லப்பட்ட நிலையில், இருக்கிற குறைந்தபட்ச பார்வையை தக்க வைத்துக்கொள்ள கேரளாவின் ஆயுர்வேத சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அது மட்டும்தான் சிறிது பயனளித்து வருகிறது (இவர்களின் இந்தப் பிரச்னை பற்றி 27. 01.2015 தேதியிட்ட அவள் விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்).

ஜோசப்
ஜோசப்

இந்நிலையில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க அதிகமாக செலவாகி வருவதால், அதைச் சமாளிக்க முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சையை சேர்க்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றத்தில் ஜோசப் தாக்கல் செய்த வழக்கில் நீண்ட காலத்துக்குப் பிறகு, அவர் கோரிக்கையை 3 மாதத்தில் நிறைவேற்றும்படி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்காகப் பெரியவர் ஜோசப் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. தற்போது நீதிமன்ற உத்தரவை அரசு நிறைவேற்றும் நாளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

மிக மிகக் குறைவான பார்வைத்திறனுடன் சமாளித்து வாழும் சுஸ்மிதா இளங்கலையும், டயானா ப்ளஸ் டூவும் சென்னையில் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.

மதுரை ஆரப்பாளையத்தில் வசிக்கும் பெரியவர் ஜோசப்பிடம் பேசினேன். ``எனக்குப் பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டம். சின்ன வயசுலேயே மதுரையில உள்ள ஒரு கம்பெனியில தொழிலாளியா வேலை செஞ்சு ரிடையர்டு ஆகிட்டேன். என் மூத்த மகள் ஜெனிதா, மருமகன் ஜோசப். இவங்களுக்கு முதல் குழந்தை சுஸ்மிதா பொறந்தப்ப மாறுகண்ணா இருந்துச்சு. நாளாக நாளாக அவளுக்குப் பார்வையில் குறைபாடு இருப்பதுபோல தெரிஞ்சது. உடனே கண் ஆஸ்பத்திரியில காட்டுனோம். ஆறு மாசம் கழிச்சு வரச் சொன்னாங்க. 3 வருசம் இப்படியே அலைஞ்சும் அவ கண்ணுல என்ன பிரச்னைனு கண்டுபிடிக்க முடியல.

`இன்னும் எத்தனை நாள் என்னால மனு அனுப்பமுடியும்? அரசுதான் உதவணும்!' - பேத்திகளுக்காக மன்றாடும் தாத்தா

ரெண்டாவது பேத்தி மெர்லின் பொறந்தபோதும் அவளுக்கும் அதே போன்ற பிரச்னை. அவளையும் ஆஸ்பத்திரியில காட்டினோம். சோதிச்சு பார்த்த டாக்டர், `ரெண்டு குழந்தைகளுக்கும் `ரெட்டினைடிஸ் பிக்மென்டோஸா (Retinitis pigmentosa)'ங்கிற அரியவகை கண் நோய் உள்ளது. இதற்கு இன்னும் அலோபதியில சிகிச்சை கண்டுபுடிக்கல. தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க'னு சொன்னாரு. தமிழ்நாட்டுல நாங்க காட்டிய அத்தனை கண் ஆஸ்பத்திரியிலும் இதையேதான் சொன்னாங்க. அன்னையில இருந்து இவங்கள நெனைச்சு கண்ணீர் விட ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரை நிக்கல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளிக்கூடம் போற வயசு வந்தப்போ எந்த ஸ்கூல்ல சேர்க்குறதுனு பிரச்னை வந்துச்சு. முழுசா பார்வை இல்லைன்னாதான் பார்வையற்றவர் பள்ளியில சேர்ப்போம்னு சொல்லிட்டாங்க. நார்மல் பள்ளியிலும் சேர்க்க முடியாத நிலை. பார்வை குறைபாட்டுக்குன்னு தனியார்ல ஸ்கூல் நடத்துறாங்க. அதுல சேர்க்க நெறைய பணம் வேணும். கடைசியில பலபேரை பார்த்து பேசி பார்வையற்றவர் பள்ளியிலதான் சேர்த்தோம்.

ரெண்டு பேருமே நல்லா படிப்பாங்க. ஆனா, நாளாக நாளாக கண் பார்வையில எந்த முன்னேற்றமும் இல்லை.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

அவங்களுக்கு முகத்துக்கு நேரா 7 அடி தூரத்துல உள்ளது மட்டும்தான் மங்கலா தெரியும். சைடுல எதுவும் தெரியாது. அந்தப் பார்வையையும் தக்க வச்சுக்க, தேடிக் கண்டுபுடிச்சு கேரளாவுல உள்ள கூத்தாட்டுகுளம் ஆயுர்வேத கண் ஆஸ்பத்திரியில தொடர்ந்து சிகிச்சை எடுத்துட்டு வர்றேன். அவங்க கொடுக்குற சிகிச்சைதான் இருக்குற கொஞ்சநஞ்ச பார்வையக் காப்பாத்திட்டு வருது.

அதே நேரம் ஆயுர்வேத சிகிச்சைக்கு செலவளிக்க முடியல. ஒவ்வொரு முறை அந்த மருத்துவமனைக்குப் போயிட்டு வரும்போதும் 50,000-த்துக்கு மேல செலவாகும். தெரிந்தவர்கள் சிலர் உதவி செய்வாங்க. ஆனா, தொடர்ந்து அவங்ககிட்ட உதவி கேட்க சங்கடமா இருக்கு. சிகிசைக்காக ஊரைச் சுற்றி ஏகப்பட்ட கடன் வாங்கியதால அது வேற நெருக்கடியா இருக்கு.

என் மகளும் மருமவனும் பெருசா எந்த வருமானமும் இல்லாம புதுக்கோட்டையில பிளாட்பாரத்துல காய்கறி கடை போட்டு பிழைக்கிறாங்க. அதனால அவங்களால ரெண்டு குழந்தைங்களையும் வச்சு பார்த்துக்க முடியாத சூழ்நிலை. வைத்தியத்துக்கும் செலவு பண்ண முடியல. நான்தான் ஓய்வெடுக்குற வயசுல அங்க இங்க ஓடி அந்தப் புள்ளைங்க வைத்தியத்துக்காக அலைஞ்சுக்கிட்டிருக்கேன்.

அரசாங்கம் வழங்குன இலவச காப்பீட்டு அட்டை மூலம் வைத்தியம் செய்யலாம்னு பார்த்தா, இதுபோன்ற ஆயுர்வேத சிகிச்சைக்கு அதுல வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க.

அரசு மருத்துவ காப்பீடு திட்டம்
அரசு மருத்துவ காப்பீடு திட்டம்
அமெரிக்காவிலிருந்து வரவைக்கப்பட்ட ₹16 கோடி மருந்து; குழந்தை மித்ராவுக்கு நிறைவடைந்த சிகிச்சை!

எனக்கு வேறு வழி தெரியல. வைத்தியம் செய்ய வசதியில்லாத ஏழைகளுக்கு அரசுதானே ஏற்பாடு செய்யணும்? அதனால அரசு காப்பீட்டுத் திட்டம் மூலமா ஆயுர்வேத சிகிச்சை அளிக்க நிதி ஒதுக்க வேணும்னு அரசுக்கு 2012-ல மனு அனுப்பினேன். அதை அரசு நிராகரிச்சிருச்சு.

தொடர்ந்து, உயர் நீதிமன்றக் கிளையில 2017-ல் வழக்கு போட்டேன். அப்போ அதை விசாரிச்ச நீதிபதி, `அரியவகை கண் நோயால் இரண்டு பிள்ளைகளும் பாதிக்கப்பட்டிருக்காங்க. அரசு மருத்துவ உதவி வழங்கும் நோய்களின் பட்டியலில் இந்த நோய் இல்லாததால உதவி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதை அரிதினும் அரிதான வழக்காக கருதி இருவரின் சிகிச்சைக்கும் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க வேண்டும்'னு 2017 ஜனவரியில் உத்தரவிட்டார். அந்த உத்தரவு, இவ்வளவு கஷ்டத்துக்கிடையில சின்னதா சந்தோசத்தைக் கொடுத்தது.

ஆனா, தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யணும்னு அரசு சார்பில் அப்பீல் செய்தப்போ எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் பேத்திகளின் எதிர்காலம் அவ்வளவுதானானு கலங்கிட்டேன். இதுக்கிடையிலும் கடனுக்கு மேல் கடன வாங்கி அவங்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தேன்.

ஜோசப்
ஜோசப்

பின்பு, அரசு அப்பீல் செய்த வழக்கை ரெண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, `இது அரிதான வழக்கு, அரசாங்கம் அப்பீல் செய்த மனுவை தள்ளுபடி செய்றோம்; தனி நீதிபதி ஏற்கெனவே உத்தரவிட்டதை 3 மாதத்தில் நடைமுறைப் படுத்தணும்'னு கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டாங்க. அதைக் கேட்டதுக்கு அப்புறம்தான் போன உசுரு திரும்ப வந்துச்சு.

இதுக்கு மேல என்னால ஓட முடியாது. அந்தப் புள்ளைங்களோட ஆயுர்வேத வைத்தியத்துக்கு அரசு உதவி செய்யணும். அவங்க தொடர்ந்து படிக்கவும், வேலையில் சேருகிற வரையிலும் அரசாங்கம் அவங்களுக்கு ஆதரவா இருக்கணும். சின்ன பொண்ணு டயானா, `நான் கலெக்டராவேன்...'னு சொல்லிட்டு இருக்கு. படிப்புல அந்த அளவுக்கு ஆர்வம். ஆனா, வைத்தியத்துக்கே வழியில்லாத நிலையில அந்த ஆசை நிறைவேறுமாங்கிறதை நெனைச்சா மனசு கலங்குது.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் காலேஜுல சுஸ்மிதா படிக்கிறா. சென்னையில வேலை பார்க்குற என்னோட இன்னொரு மகன், பேத்திகள கவனிச்சுக்கிறான். ஆனா, வைத்தியச் செலவுக்குத்தான் வழி தெரியல, தொடர்ந்து கடன் வாங்க முடியல.

உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் முதலமைச்சருக்கும் மனு அனுப்பியிருக்கேன். ஆயுர்வேத வைத்தியத்துக்கும், பேத்திகளோட எதிர்காலத்துக்கும் அரசோட உத்தரவுக்காக காத்திருக்கேன்" என்றார்.

அரியவகை பார்வைக் குறைபாட்டுடன் போராடி படிப்பில் சிறந்து விளங்கும் பேத்திகளின் எதிர்காலத்துக்காக தாத்தா தொடர்ந்து போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இப்பெண்களின் எதிர்காலத்துக்கு அரசு ஒளி ஏற்ற வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு