Published:Updated:

`எங்கள் பாரம்பர்ய சின்னம்!' - நூற்றாண்டு சாவடியைக் காக்க கைகோத்த பழங்காநத்தம் மக்கள்

மதுரை பழங்காநத்தம் பகுதி மக்களின் முயற்சி வெகுவான பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

பழங்காநத்தம் சாவடி
பழங்காநத்தம் சாவடி

மதுரை பழங்காநத்தம் பகுதியில் 100 வருடங்களைக் கடந்து காட்சியளிக்கும் கலைநயமிக்க ஊர்ச்சாவடி அழிந்துவிடாமல் காக்கும் பணியில் அப்பகுதி மக்கள் இறங்கியுள்ளனர்.

சாவடி
சாவடி

தமிழகத்தில் பல ஊர்களிலும் சாவடிகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அதில் ஊர் மக்கள் கதை பேசவும் ஆடுபுலி ஆட்டம் விளையாடவும் ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.

அதுபோலத்தான் பழங்காநத்தத்திலுள்ள சாவடி என்றாலும், இது கோயில் மண்டபம் போல நல்ல தூண்களுடன், மேற்பகுதியில் அழகான சிற்பங்களுடன் கலைநயத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. இன்று மாநகராட்சிக்குள் பழங்காநத்தம் இருந்தாலும், ஆரம்பகாலத்தில் பெரிய கிராமமாக இருந்தபோது கட்டப்பட்ட சாவடி இது.

சாவடி
சாவடி

சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஊர்க்கூட்டம், வீடுகளில் நடக்கும் சிறு நிகழ்ச்சிகளை இந்தச் சாவடியில் வைத்துதான் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், சிறிது காலம் பராமரிக்காமல்விட்டதால் மிகவும் பழுதடைந்து அதன் அழகிய கட்டமைப்பு வீணாகத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் மண்ணுக்குள்ளும் இறங்கிக்கொண்டிருந்தது.

இந்தநிலையில் தங்கள் பகுதியின் அடையாளமான அந்தச் சாவடி மண்ணுக்குள் புதைவதை சகித்துக்கொள்ள முடியாத அப்பகுதி மக்கள், அதைப் புனரமைக்க முடிவு செய்து அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களே நிதியையும் திரட்டியுள்ளனர். நவீன ஜாக்கி தொழில்நுட்பம் மூலம் இறங்கிக்கொண்டிருந்த சாவடியை உயர்த்தவும் கட்டடத்தை புனரமைக்கவும் முடிவு செய்து, பீகாரைச் சேர்ந்த நிறுவனத்தினரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர்.

சாவடி புணரமைப்பு
சாவடி புணரமைப்பு

கடந்த சில நாள்களாக இந்த வேலையில் ஈடுபட்டுவரும் அவர்கள் கட்டடத்தை இரண்டு அடிக்கு உயர்த்தியுள்ளனர். அதை இன்னும் தூக்கி அதற்குப்பின் அதற்கு உறுதியான அடித்தளமிட்டு புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்கள் பகுதியின் பழைமையான சாவடி மீது இவ்வளவு பிரியம் வைத்து பல லட்சம் ரூபாயை செலவு செய்த பழங்காநத்தம் பகுதி மக்களைப் பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.