Election bannerElection banner
Published:Updated:

ஜல்லிக்கட்டில் வெல்பவர்களுக்கு காங்கேயம் பசு பரிசு... நாட்டு மாடுகளுக்காக வித்தியாச முயற்சி!

காங்கேயம் பசு மற்றும் கன்றுடன்
காங்கேயம் பசு மற்றும் கன்றுடன்

எப்போது தமிழர்கள், பாரம்பரிய மாட்டு இனங்களின் நன்மையை உணர்ந்து கார், பைக் பரிசுகளைத் தவிர்த்து நாட்டு மாடுகளைக் கொடுப்பார்களோ அப்போதுதான் நான் நிறுத்துவேன்.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் முந்தியடிச்சுக்கிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டு பார்க்குறதே தனி சுகம்தான். காலையில தை மாத லேசான குளிர கடந்து வந்தாலும் மதியம் நல்ல வெயிலு பொளந்து கட்டும். வெயிலுக்கு இதமாக கூழும், குச்சி ஐஸ்களையும் சாப்பிட்டு ரகளை கூட்டும் காளையர்களின் சேட்டை அதகளம். `இந்தாண்டு தொடர் மழையிலும் ஜல்லிக்கட்டு பயிற்சி அமோகமா நடந்துக்கிட்டு இருக்கு. `சல்லியட்டு அன்னைக்கு மழை பேயக் கூடாதுடா சாமி'னு பாலமேடு மஞ்சமலையும் அலங்காநல்லூர் முனியாண்டியையும் வேண்டிக் கொள்கின்றனர் கிராம வாசிகள். எது எப்புடியோ ஜல்லிக்கட்ட சீரும் சிறப்புமா நடத்தனும்னு ஜல்லிக்கட்டு கமிட்டி வேலைகள முக்காவாசி முடிச்சுட்டாங்க. இந்நிலையில் இந்தாண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாட்டுக்கு பரிசாக காங்கேயம் பசுவும் கன்றும் வழங்கப்பட உள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு.

2020 ஜல்லிக்கட்டில் வழங்கிய பரிசு
2020 ஜல்லிக்கட்டில் வழங்கிய பரிசு

இந்த பரிசை வழங்கவுள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலரும் மதுரை பசுமை நண்பர்கள் ஒருங்கிணைப்பாளருமான அலங்காநல்லூர் பொன்.குமார், ``2016 ஜல்லிக்கட்டு தடைக்குப் பின் அடுத்த ஆண்டு கடும் போராட்டமாக வெடித்தது. அலங்காநல்லூரில் வெடித்த போராட்டம் தமிழகம் முழுதும் பரவி உலக தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏ-2 ரக பால்களை அடியோடு அழித்து ஏ-ஒன் ரக பால்களின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற பன்னாட்டு சதி முறியடிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற அனுமதி கிடைத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் முன்பைவிடக் கூடுதல் கவனம் பெற்று நடத்தப்பட்டு வருகிறது.

வெற்றியாளர்களுக்கு கார், பைக், பிரிட்ஜ் என்ற பம்பர் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதனால் ஒரு புட்பால், கிரிகெட் விளையாட்டுகளைப் போல் கார்பிரேட் விளையாட்டாக மாறிவருகிறது. இந்த நிலையை மாற்றவேண்டும் என நினைத்து 2017-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாட்டுக்கு வத்திராயிருப்பு பகுதியில் வளர்ந்த தேனி மலை மாடு வழங்கினேன். 2018-2019 ஆண்டில் இதைப் போல் பரிசுகள் ஜல்லிக்கட்டில் வழங்கப்படும் என நினைத்தேன்.

2021 ஜல்லிக்கட்டில் வழங்க உள்ள பசு
2021 ஜல்லிக்கட்டில் வழங்க உள்ள பசு

ஆனால், யாரும் அப்படியான பரிசுகளை வழங்கவில்லை. எனவே, 2020-ல் பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த மாட்டுக்கு காங்கேயம் பசு மற்றும் கன்றை நானே வழங்கினேன். அதை, திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்ற மாட்டின் உரிமையாளர் பெற்றுச் சென்றார். தற்போது அந்த காங்கேயம் பசு 5 மாத சினையாகவும் கன்று மூன்று வருட கன்றாகவும் செழிப்பாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் தொடர்ந்து போனில் மாடுகள் குறித்து நலம் விசாரித்துக்கொள்வேன். அதேபோல் இந்த ஆண்டும் பாலமேடு ஜல்லிக்கட்டுல சிறந்த காளைக்குப் பரிசாக வழங்க, காங்கேயம் ரக பசு மற்றும் கன்றை வாங்கியுள்ளேன். அதை, காங்கேயம் பகுதி பழையகோட்டை ஞாயிற்றுக்கிழமை சந்தையில் வாங்கியுள்ளேன்.

2020 கொடுக்கப்பட்ட பசுவுன் பொன்.குமார்
2020 கொடுக்கப்பட்ட பசுவுன் பொன்.குமார்

இந்த பசுவை `ஸ்ரீ மான் ராவ் பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றடியார்' வாரிசுகளிடம் இருந்து பெற்றுள்ளேன். பட்டையக்காரர்கள் எனப் போற்றப்படும் இவர்களது காங்கேயம் ரகங்கள் பெஸ்ட் பிரீட் என்று பெயர் பெற்றவை. அப்படி பெயர் பெற்ற நபர்களிடம் இருந்து பசுவையும் கன்றையும் வாங்கி வந்துள்ளேன். இதைப் பெறப்போகும் மாட்டின் உரிமையாளர்கள் கொடுத்து வச்சுருக்கணும்.

அந்த அளவுக்கு சந்தோசப்படும் நல்ல மாடாக வாங்கி வந்துள்ளேன். தற்போதுதான் முதல் ஈத்து போட்டுள்ளது. கன்று, 2 பல்லு கிடேரிக் கன்றாகும். இந்த ரகம் மிகவும் பழைமையானது பெங்கூட்டு ரகம் என்று சொல்வார்கள். இந்த மாட்டைப் பெறவுள்ள அந்த நபர்களுக்கு வாழ்த்துகள். இனி ஆண்டுக்கு ஒருமுறை ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடு பசுவும் கன்றும் வழங்க முடிவு செய்துள்ளேன்.

கடந்தாண்டு போஸ்டர்
கடந்தாண்டு போஸ்டர்

எப்போது தமிழர்கள் நமது பாரம்பரிய மாட்டு இனங்களின் நன்மையை உணர்ந்து கார், பைக் பரிசுகளைத் தவிர்த்து நாட்டு மாடுகளைக் கொடுப்பார்களோ அப்போதுதான் இதை நான் நிறுத்துவேன். அதுவரை தொடர்ந்து கொடுப்பேன். அனைவரும் நாட்டு மாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதற்கான விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்துக்காகத்தான் இவ்வாறு நாட்டு மாடுகளை வழங்குகிறேன். அடுத்த ஆண்டு புலிக்குளம் ரக பசுவும் கன்றும் வழங்குவேன். இதுபோல தொடர்ந்து வெவ்வேறு தமிழக நாட்டு இன பசுக்களை ஜல்லிக்கட்டில் வழங்குவதுதை லட்சியமாக எடுத்துச் செய்வேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு