Published:Updated:

`600 பேருக்கு சாப்பாட்டுடன் பேரீச்சம்பழங்கள்' - ஆதரவற்றோரை நெகிழவைத்த மதுரை அமைப்பு

உணவுகள் தயார் செய்யும் பணி
உணவுகள் தயார் செய்யும் பணி

மதுரையைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் உணவு மட்டுமல்லாது ஆதரவற்றோர்களுக்கான உடை, பாய், போர்வை ஆகியவற்றைத் தந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

சீனாவில் தொடங்கி இத்தாலியைப் புரட்டிப்போட்டு, உலகையே பீதியில் ஆழ்த்தியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைக் கடுமையாகத் தாக்கிவருகிறது. இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்குப் பின்னர் பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

கொரொனா
கொரொனா

இந்த நிலையில், மதுரையில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள மக்களுக்கு மதுரை மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஜெயின் சமூக தன்னார்வலர்கள் நாள்தோறும் 600 பேருக்கு உணவு, பேரீச்சைப் பழம் மற்றும் பொருள்கள் வழங்கி வருகின்றனர். நாள்தோறும் தயாரிக்கப்படும் உணவுகள் அவர்களது இருப்பிடத்துக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றனர்.

உணவின்றி வாடும் மக்களுக்குச் சமூக ஆர்வலர்கள் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்து, அவர்களின் பசியைப் போக்கி வருகிறார்கள். இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தினர் உணவு மட்டுமல்லாது ஆதரவற்றோர்களுக்கான உடை, பாய், போர்வை ஆகியவற்றைத் தந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.

உணவுகள் விநியோகம்
உணவுகள் விநியோகம்

இது குறித்து ஜெயின் சமூக அமைப்பைச் சேர்ந்த சுரேஷ் நம்மிடம், ``ஊரடங்கு உத்தரவால் அதிகம் பாதிக்கப்படுவது கடைநிலை மக்கள்தான். அவர்களின் பசியைப் போக்க எடுத்ததே இந்த முயற்சி. ஊரடங்கு உத்தரவு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஜெயின் சமூக அமைப்பிலிருந்து நாங்கள் உணவு மற்றும் பொருள்களை அளித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 600 முதல் 650 உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்கிறோம். இந்த உணவுப் பொட்டலங்கள் ஆதரவற்றோர் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது.

மேலும், அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு என்.ஜி.ஓ-க்கள் மூலம் இந்த உணவைக் கொண்டுசேர்த்து வருகிறோம். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்விதமாக ஏதேனும் சத்துள்ள பொருள் ஒன்றே கட்டாயம் தர வேண்டும் என நினைத்து தற்போது பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளைக் கொடுக்கிறோம். தினக்கூலி வேலை செய்பவர்கள் வருமானமின்றி வறுமை சூழ்ந்து உணவின்றி இருப்பார்கள். இந்த நிலையில் அரிசி, பருப்பு போன்ற மளிகைப் பொருள்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

உணவு விநியோகம்
உணவு விநியோகம்

மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலின்படியே ஆதரவற்றோர்களுக்காக மதுரையில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு உணவு மற்றும் உடை வழங்கி அவர்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்துவருகிறோம். `வறுமையின் வெளிப்பாடே பசி' அந்தப் பசியைப் போக்கி அவர்களுக்கு எங்களால் முயன்ற சிறு நிம்மதியைத் தர முயற்சி செய்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு