Published:Updated:

`சினிமா சிலம்பாட்டங்களுக்கு நாங்கதான் பேக்கிரவுண்ட்!' - மதுரையைக் கலக்கும் 5-ம் தலைமுறை சகோதரிகள்

சிலம்ப சகோதரிகள்
சிலம்ப சகோதரிகள்

சிலம்பக் கலை எங்கள் தாத்தன், பூட்டன் காலத்து வழியாகக் கடத்தப்படுவதால் எங்களுக்குச் சிலம்பத்தின் மீது ஆர்வம் முழுமையாக உள்ளது.

பாரம்பர்யமாக சிலம்பம் கற்பிக்கும் குடும்பத்தில் இருந்து வந்த சிறுமிகள் ஐந்தாவது தலைமுறையாக சிலம்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

மதுரையின் பூர்வீக கிராமங்களில் ஒன்று மாடக்குளம். இக்கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரர்கள் அதிகளவு உள்ளதால் வீரத்துக்குப் பெயர் பெற்ற கிராமமாக விளங்குகிறது. மேலும், மதுரையின் மிகப்பெரும் நீர்ப்பிடிப்பு கண்மாய்களில் மாடக்குளம் கண்மாயும் ஒன்று.

சிலம்பாட்ட பயிற்சியின்போது.
சிலம்பாட்ட பயிற்சியின்போது.

இப்படிச் செழிப்பும் வீரமும் நிறைந்த இந்த ஊரில் 5-வது தலைமுறையாக சிலம்பம் கற்பித்துவருகின்றனர் மணிகண்டனும் அவரின் மகள்களும்.

இதுகுறித்து மணிகண்டனிடம் பேசினோம்.``மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமியக் கலை ஆர்வலர்களுக்கு எங்களை நன்றாகத் தெரியும். பல்வேறு திரைப்படங்களில் பல ஹீரோக்களுக்கு சிலம்பாட்ட பேக்கிரவுண்ட் கொடுத்து வருவது நாங்கள்தாம்.

```தேவர் மகன்' கமல், `பாவ்லா' சத்யராஜ் முதல் சூர்யா மகன் தேவ் வரை...''- `சிலம்பம்' மாஸ்டர் பாண்டியன்

சிலம்பாட்ட பயணத்தில் என் இரண்டு மகள்களும் கைகோத்து 5-வது தலைமுறையாக இந்தக் கலையை முன்னெடுக்கின்றனர். மூத்த பொண்ணு விஜயதர்ஷினி 11-ம் வகுப்பும் இளைய மகள் 7-ம் வகுப்பும் படிக்கின்றனர். என் மனைவி இல்லாத சூழலில் அவர்களுக்கு எந்தக் கஷ்டங்களும் தெரியக் கூடாது என கலைகளைக் கையில் கொடுத்து வளர்த்துள்ளேன்.

சிலம்பாட்ட பயிற்சியின் போது
சிலம்பாட்ட பயிற்சியின் போது

அவர்கள் கற்றது மட்டுமல்லாமல், பல்வேறு நபர்களுக்கு இந்த கலையைக் கற்றுக் கொடுக்கின்றனர். நான் பள்ளிகளுக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் இந்தச் சிலம்பக் கலையை சொல்லிக் கொடுத்து வருகிறேன். அதுபோக, போதிமரம் என்ற அறக்கட்டளையை உருவாக்கி பல்வேறு கலைகளை ஒருங்கிணைத்து, மதுரை மண்ணில் கிராமிய கலைகளை உயிர்ப்பிக்கச் செய்யும் முயற்சியில் இறங்க உள்ளோம். ஜெர்மனி, மலேசிய, சிங்கப்பூர், பிரான்ஸ், மொரீசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுத்துள்ளேன்.

என் தாத்தா நீலமேகம், அப்பா சோனை ஆகியோர் மிகப்பெரும் சிலம்பாட்ட கலைஞர்கள். அவர்களின் வழியில் வந்த என் இரண்டு மகள்களும் சிலம்பக் கலையை இன்னும் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வார்கள் என்று நம்புகிறேன். என்னிடம் யார் சிலம்பம் கற்க விரும்பினாலும் கற்றுக் கொள்ளலாம். கொடுப்பதை வாங்கிக்கொள்வேன். பணம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது" என்றார்.

மணிகண்டன்
மணிகண்டன்

மணிகண்டனின் மூத்த மகள் விஜயதர்ஷினி நம்மிடம், ``சிலம்பக் கலை எங்கள் தாத்தன், பூட்டன் காலத்து வழியாகக் கடத்தப்படுவதால் எங்களுக்குச் சிலம்பத்தின் மீது ஆர்வம் முழுமையாக உள்ளது. இந்தக் கலையை முடிந்தவரை வெளியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சிலம்பம் உட்பட பல்வேறு கிராமக் கலைகளையும் தீவிரமாகக் கற்றுள்ளேன். என்னால் முடிந்தவரை பலருக்கும் இந்தக் கலையை என் சகோதரியோடு இணைந்து கற்றுக்கொடுப்பேன்" என்றார் உற்சாகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு