Published:Updated:

மதுரை: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு மணல் கொள்ளை!'-சமூக ஆர்வலர் புகாரால் பரபரப்பு

 பெரியார் பேருந்து நிலையப் பணி
பெரியார் பேருந்து நிலையப் பணி

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியின்போது பல கோடி ரூபாய் அளவுக்கு மணல் கொள்ளை நடந்ததாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தற்போதைய மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இந்தத் திட்டம் தொடங்கியதிலிருந்து குற்றம்சாட்டிவருகிறார்கள்.

 பெரியார் பேருந்து நிலையப் பணி
பெரியார் பேருந்து நிலையப் பணி

இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை நடந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்குப் புகார் மனு அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ``மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம், வாகனம் நிறுத்துமிடம் என மிகப்பெரியதாக பெரியார் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

அரவிந்த் பாலாஜி
அரவிந்த் பாலாஜி

வாகன நிறுத்துமிடப் பணிக்காக சுமார் 10 மீட்டர் ஆழத்துக்குக் குழி தோண்டப்பட்டது. அப்படித் தோண்டும்போது கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கிராவல் மணல் அதிக அளவில் கிடைத்திருக்கிற.

இந்த மணலை மாநகராட்சித் தலைமைப் பொறியாளரும், சில அதிகாரிகளும் இணைந்து அரசுக்கும் கனிமவளத்துறைக்கும் தெரியாமல் விற்பனை செய்துள்ளனர்.

இதனால் தமிழக அரசுக்கு சுமார் 15 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உட்படுத்தி கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல முறைகேடு செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகளிடமிருந்து பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருக்கிறார்.

நம்மிடம் பேசிய அரவிந்த் பாலாஜி, ``பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ள முதலமைச்சர், இந்த ஊழல் புகார் மீது உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடுவார் என்று நம்புகிறேன்" என்றார்.

மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சி

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்கும், கனிமவளத்துறை இயக்குநருக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த மனு தமிழக முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வரிசையாக வழக்குகள் பதிவு செய்துவரும் நிலையில், இந்தப் புகார் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு