Published:Updated:

மதுரை: `உயர்ந்த பணி செய்பவர்கள்!’ - ஆண்டாள் பேரவை அளித்த நிதியை ஜமாத்துக்கு அளித்த சமூக ஆர்வலர்

வழங்கியபோது
வழங்கியபோது ( என்.ஜி.மணிகண்டன் )

``நற்பணிகள் மூலம் இந்து - இஸ்லாமிய மக்களுக்குள் ஓர் இணைப்பு ஏற்படட்டும் என்ற நோக்கமும் ஒரு காரணம்.''

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு சேவை ஆற்றியதற்காக இந்து ஆன்மிக அமைப்பு, விருதுடன் வழங்கிய ரூ.50,000 நிதியை, முஸ்லிம் ஜமாத்தின் சேவைக்கு வழங்கி மத இணக்கத்துக்கு பாலம் அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதி.

ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிதி வழங்கியபோது
ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிதி வழங்கியபோது
என்.ஜி.மணிகண்டன்

ஆண்டாள் பி.சொக்கலிங்கத்தை தலைவராகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை, தமிழகத்தில் கோயில் குடமுழுக்குகளுக்கு தங்கம் வழங்கி வருவதுடன் பல்வேறு சமயப் பணிகளைச் செய்து வருகிறது. அத்துடன் சமூகப் பணியாற்றும் நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பதினெட்டாம்படி கருப்பசாமி பெயரில் விருதையும் ரூ. 50,000 நிதியையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தாண்டு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அன்புநிதிக்கு நிதியுடன்கூடிய விருதை வழங்கியுள்ளது. இதுபற்றி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையினர்,``அரசியல் கட்சியில் செயல்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவருக்கும் சேவை செய்து வரும் வழக்கறிஞர் அன்புநிதி, கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகள் மருத்துவர், பணியாளர்களுக்கு பல நாள்கள் தரமான உணவு வழங்கினார். இதுமட்டுமல்லாமல் இன்னும் பல சேவைகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். இதை அறிந்து எங்கள் அமைப்பின் சார்பில் பதினெட்டாம்படி கருப்பணசாமி விருதையும் ரூ.50,000 நிதியையும் வழங்குகிறோம்'' என்று தெரிவித்தனர்.

தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு கவச ஆடை
தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு கவச ஆடை
என்.ஜி.மணிகண்டன்

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் விருதைப் பெற்றுக்கொண்ட அன்புநிதி, அவர்கள் வழங்கிய 50,000 ரூபாய் நிதியை, கொரோனாவினால் மரணம் அடைபவர்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வில்லாபுரம் ரஹ்மத் பள்ளிவாசல் நிர்வாகிகத்தினரிடம் வழங்கியுள்ளார்.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்’ - சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

இதுபற்றி வழக்கறிஞர் அன்புநிதியிடம் கேட்டோம்,``இந்து சமய அறப்பணிகள் செய்து வரும் ஆண்டாள் பேரவையினர் என்னுடைய பணிக்காக விருது வழங்கியது மகிழ்ச்சிதான். அவர்கள் கொடுத்த நிதியை அவர்களிடம் ஒப்புதல் பெற்று வில்லாபுரம் ரஹ்மத் பள்ளிவாசல் நிர்வாத்தினரிடம் வழங்கியதில், இன்னும் அதிகமான மகிழ்ச்சி. கொரோனாவால் இறப்பவர்களில் எரிக்கும் வழக்கமுள்ளவர்களை அரசு மயானத்தில் உடனே எரித்து விட முடிகிறது. அனால், அடக்கம் செய்யும் வழக்கமுள்ளவர்களுக்கு இடுகாட்டில் இடம் வழங்கவும் அடக்கம் செய்யவும் பல இடங்களில் பிரச்னை ஏற்படுகிறது.

வழங்கியபோது
வழங்கியபோது
என்.ஜி.மணிகண்டன்

அப்படிப்பட்டவர்களை இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் த.மு.மு.க போன்ற அமைப்பினரும் உடல்களைப் பெற்று மரியாதையுடன் அடக்கம் செய்கிறார்கள். இதுவரை அனைத்து மதத்தையும் சேர்ந்த 49 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த பணியைச் செய்யும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு கவச ஆடைகள் வாங்க இந்த நிதி உதவும் என்ற அடிப்படையில் அவர்களிடம் வழங்கினேன். நற்பணிகள் மூலம் இந்து -இஸ்லாமிய மக்களுக்குள் ஓர் இணைப்பு ஏற்படட்டும் என்ற நோக்கமும் ஒரு காரணம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு