அரசின் தாமதமான அறிவிப்பு... மருத்துவ சீட்டை தேர்வு செய்யாத ஏழை மாணவி... உதவுமா அரசு?

''தனியார் மருத்துவக் கல்லூரியில சீட் கிடைச்சது. ஆனா, 'உடனடியா 25 ஆயிரம் கட்டணும், தொடர்ந்து ரெண்டு, மூணு நாள்ல மிச்ச கட்டணத்தைக் கட்டணும்'னு சொன்னாங்க. சோத்துக்கே சிரமப்படும் நாங்க லட்சக்கணக்கா பணம் கட்ட எங்க போறது..."
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய 7.5% உள்ஒதுக்கீட்டால் பல ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் தனியார் கல்லூரியில் பயில உள்ள மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த அறிவிப்புக்கு முன்னர் மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொண்ட மாணவர்கள் சிலர், தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும் அந்தக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழலால் கலந்தாய்வில் பின்வாங்கினர். அவர்களில் ஒருவர்தான் தங்கப்பேச்சி.

மாணவி தங்கப்பேச்சிக்கு கவுன்சலிங்கில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும், 25,000 ரூபாய் முதல்கட்ட தொகையை செலுத்த முடியாத சூழலில், வாய்ப்பைத் தவறவிட்டார். தகுதி இருந்தும், அரசுக் கட்டணத்தை ஏற்கும் நிலையிலும் தன் மருத்துவ சீட் கைவிட்டுப் போய்விடுமோ என்ற அச்சத்தில் கலங்கி நிற்கிறார் ஏழை மாணவி தங்கப்பேச்சி.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பானாமூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி - மயில்தாய் தம்பதிக்கு நான்கு மகள்கள். மூத்த பெண்ணான தங்கப்பேச்சி இந்த ஆண்டு மருத்துவக் கனவோடு நீட் தேர்வெழுதியதில் 155 மதிப்பெண் பெற்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தும் அது கைநழுவிப்போனது குறித்து தங்கப்பேச்சி பகிர்ந்துகொள்ளும்போது,

''என் அம்மா, அப்பா கூலித் தொழிலாளிகள். என்னையும் மூணு தங்கச்சிங்களையும் கஷ்டப்பட்டுதான் வளர்க்குறாங்க. தகரத்துல செட்டு மாதிரி கட்டுனதுதான் எங்க வீடு. ஊர்லேயே சின்னச் சின்ன வேலைகளை செஞ்சுக்கிட்டேதான் படிச்சேன். அரசு உள்ஒதுக்கீட்டால எனக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில சீட் கிடைச்சது. ஆனா, 'உடனடியா 25,000 கட்டணும், தொடர்ந்து ரெண்டு, மூணு நாள்ல மிச்ச கட்டணத்தைக் கட்டணும்'னு சொன்னாங்க. சோத்துக்கே சிரமப்படும் நாங்க லட்சக்கணக்கா பணம் கட்ட எங்க போறதுனு, அழுதுக்கிட்டே வீடு திரும்பிட்டேன்.
எனக்கு கவுன்சலிங் முடிஞ்சு ஒரு நாள் கழிச்சுதான், 'அரசுப் பள்ளி மாணவர்களின் கல்லூரிக் கட்டணத்தை அரசே ஏற்கும்'னு அறிக்கை வெளியிட்டாங்க. ஆனா, நான் பணம் கட்டி தனியார் கல்லூரிய தேர்வு செய்யாததால எனக்கு மருத்துவ சீட் கிடைக்காதுனு சொல்றாங்க.
மருத்துவக் கல்லூரியில சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாருக்கும் அமைச்சர் உதயகுமார் சால்வை அணிவித்து, ஒரு லட்சம் ரூபாய் வழங்கி பாராட்டினார். அப்போ என்னையும் பாராட்டினார். என் நிலைமை குறித்து அமைச்சர் உதயகுமார் அவர்களிடம் தெரிவிச்சப்போ, முயற்சி செய்றேன்னு சொன்னார். அரசு என்னுடைய நிலையை உணர்ந்து எனக்கு கருணை அடிப்படையில மருத்துவ சீட் வழங்கணும்" என்றார் வேண்டுகோளாக.

இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்மிடம், ``மாணவி தங்கப்பேச்சியின் பெற்றோர் மருத்துவ சீட் வேண்டாம் எனத் தெரிவித்ததால் அவரின் மருத்துவக் கல்லூரி சீட் காத்திருப்புப் பட்டியலில் உள்ளது. இதுபோல 35 மாணவர்களின் சீட் வெயிட்டிங்கில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி தங்கப்பேச்சியின் நிலை குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து பரிந்துரை செய்துள்ளேன். கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். மாணவி தங்கப்பேச்சி மனம் தளர்ந்துவிடக் கூடாது என்பதால், மற்ற மாணவர்களைப்போல் அவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளோம்'' என்றார்.
அரசின் தாமத அறிவிப்பு முன்னரே செய்யப்பட்டிருந்தால், தங்கப்பேச்சி உள்ளிட்ட மாணவர்களின் மருத்துவக் கனவு காக்கப்பட்டிருக்கும். வெற்றிக் கோட்டை தொட்ட பின்னரும் கலங்கி நிற்கும் இந்த மாணவர்களுக்கு அரசுதான் நல்ல வழி சொல்ல வேண்டும்.