Published:Updated:

`இதுவும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்!'- ஊரடங்கால் கலங்கிய மக்களுக்குத் தோள்கொடுத்த திருவிழா நிதி

டி.மீனாட்சிபுரம்
டி.மீனாட்சிபுரம்

உசிலம்பட்டி டி.மீனாட்சிபுரத்தில் திருவிழாவுக்காக நன்கொடை பெற்ற பணமும் சேர்ந்து மொத்தம் 7 லட்சம் ரூபாய் கோயில் விழாக் கமிட்டியினரிடம் இருந்தது.

கோயில் திருவிழா கொண்டாட வைத்திருந்த பணத்தை கொரோனா ஊரடங்கால் கஷ்டப்படும் மக்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் அரங்கேறியுள்ளது.

டி.மீனாட்சிபுரம் கோயில்
டி.மீனாட்சிபுரம் கோயில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள திருவேட்டை அய்யனார், முத்தாலம்மன், காளியம்மன் கோயில்கள் பிரசித்திபெற்றவை. இக்கோயில்களுக்கு இந்த மாதத்தில் வெகு சிறப்பாக திருவிழா எடுப்பார்கள்.

இதற்காக பக்தர்கள் காணிக்கையாகக் கோயிலில் கட்டிவிடும் பொருள்களை கோயில் நிர்வாகத்தினர் ஏலம்விடுவார்கள். இதை அதிக விலை கொடுத்து பக்தர்கள் ஏலம் எடுப்பார்கள். இப்படிக் கிடைத்த பணமும் திருவிழாவுக்காக நன்கொடை பெற்ற பணமும் சேர்ந்து மொத்தம் 7 லட்சம் ரூபாய் கோயில் விழாக் கமிட்டியினரிடம் இருந்தது.

டி.மீனாட்சிபுரம்
டி.மீனாட்சிபுரம்

இந்தநிலையில், கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவிழா கொண்டாடப்பட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தங்களிடம் இருக்கும் திருவிழாவுக்கான பணத்தை உபயோகமான வழியில் செலவு செய்ய நினைத்த விழாக் கமிட்டியினர் கூடிப் பேசியுள்ளனர்.

`ஊரடங்கால் ஊரில் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்கலாம், இதுவும் கடவுளுக்குச் செய்யும் சேவைதான்' என முடிவு செய்து அதன்படி அனைத்துக் குடும்பத்தினருக்கும் பணத்தை பிரித்து வழங்கியுள்ளனர். இதனால் ஊர்மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊர் விழாக் கமிட்டியினரின் செயலை பிற ஊர்க்காரர்களும் பாராட்டி வருகிறார்கள்.

டி.மீனாட்சிபுரம்
டி.மீனாட்சிபுரம்

இந்தத் தகவல் பல ஊர்களுக்கும் பரவி, `திருவிழா கொண்டாட வைத்திருக்கும் நிதியை கஷ்டப்படும் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தால் என்ன?' என்று ஆலோசித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு