Published:Updated:

`கரண்டு கம்பி மேலே நின்று' டு `என்னோடு வா வீடு வரைக்கும்' - அணிலுக்காக மருத்துவர் செய்த செயல்!

மருத்துவர் மெரில் ராஜ்
மருத்துவர் மெரில் ராஜ்

`கரண்டு கம்பி மேலெ நின்று' டு `என்னோடு வா வீடு வரைக்கும்' - அணிலுக்காக கால்நடை மருத்துவர் மெரில் ராஜ் செய்த செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்!

கரண்டு கம்பியில் ஓடும் அணிலை எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அணில் தன் குட்டிகளோடு வசிப்பதற்கு தன் இருசக்கர வாகனத்தை அர்ப்பணித்துள்ள மதுரையை சேர்ந்த கால்நடை மருத்துவர் மெரில்ராஜின் செயலை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அரசு கால்நடை மருத்துவரான மெரில்ராஜ் மதுரை கூடல்நகரில் வசிக்கிறார். ஜல்லிக்கட்டு காளைகள் முதல் நோய்க்குள்ளாகும் தெரு நாய்கள் வரை நேரம் காலம் பார்க்காமல் தேடிச்சென்று சிகிச்சை அளிக்கும் விலங்கு நல ஆர்வலராகவும் செயல்படுகிறார்.

அணில் குட்டிகள்
அணில் குட்டிகள்
மாதம் ரூ.59,000 பொழுதுபோக்கிலும் பெருகும் வருமானம்! 
செல்லப் பறவைகள் வளர்ப்பு!

மூன்று வாரங்களுக்கு முன் தன் இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த நிலையில், இருக்கையின் பின் பகுதிக்குள் அணில் ஒன்று சென்று வருவதை யதேச்சையாக கவனித்துள்ளார்.

தொடர்ந்து கவனித்தபோது இருசக்கர வாகனத்தின் இருக்கையின் பின்பகுதியில் அணில் கூடு கட்டி தனது மூன்று குட்டிகளுடன் வசித்து வந்ததை தெரிந்து கொண்டார்.

இதனால் அவற்றை விரட்ட மனமில்லாமல் அன்று முதல் வாகனத்தை எடுக்காமல் அணில் குடும்பத்துக்கு விட்டுவிட்டார். இந்த விஷயத்தை அவருடைய நண்பர்கள் தெரியப்படுத்த தற்போது அவர் இருசக்கர வாகனத்தில் அணில் மூன்று குட்டிகளுடன் வசித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

வேலைக்கு செல்ல வேறு வாகனத்தை பயன்படுத்தி வரும் மருத்துவர் மெரில்ராஜிடம் பேசினோம். ``சிறு வயதிலிருந்தே எனக்கு பறவைகள், கால்நடைகள், சிறு விலங்குகள் மீது அக்கறை அதிகம். கால்நடை மருத்துவர் என்பதால் அவற்றின் மீது இன்னும் ஈடுபாடு அதிகமானது. பாதிக்கப்படும் மனிதர்களிடம் மனிதாபிமானம் காட்டுவதுபோல் விலங்குகள், பறவைகளிடமும் காட்டுவது இயல்பாகி விட்டது.

மருத்துவர் மெரில் ராஜ்
மருத்துவர் மெரில் ராஜ்

அந்த அணில்களுக்கும் என் டூவீலர் பாதுகாப்பான இடமாக உணர்ந்து விட்டதால் அங்கேயே தங்கி விட்டது. வண்டியை எடுத்துவிட்டால் அவை பதறிப்போய்விடும், வேறு இடம் தேடி அலையும் என்பதால் அப்படியே விட்டுவிட்டேன்.

ஏற்கனவே கொரோனா தீவிரமாக இருந்த காலகட்டத்தில் சாலையில் அடிப்பட்டு கிடந்த இரண்டு அணில்களை தூக்கி வந்து வீட்டில் வளர்த்தேன். என் பணி நேரத்தை கடந்து தொடர்ந்து கால்நடைகள், செல்லப்பிராணிகள் நலன் சார்ந்து இயங்கி வருகிறேன். ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நாய்க்குட்டிக்கு ரத்த மாற்று சிகிச்சை அளித்தேன்.

அழிவின் விளிம்பில் இருக்கும் நாட்டு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வருகிறேன். செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய்கள் பற்றி வளர்ப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

மருத்துவர் மெரில் ராஜ்
மருத்துவர் மெரில் ராஜ்
`பறவைகள் பயமில்லாமல் வாழணும்!' - 100 ஆண்டுகளுக்கும் மேல் வெடிச்சத்தம் இல்லாத கிராமம்

இந்த அணில் டூ வீலரில் தங்கியுள்ள நிகழ்வு கூட இயல்பாக நடந்ததுதான், இதை என் நண்பர்கள் அறிந்து வெளியே பரப்பியதால் ஊடகங்களுக்கு தெரிந்து விட்டது. குட்டிகளுடன் வாழும் அந்த அணிலுக்கு எப்போது என் டூவீலர் பாதுகாப்பு இல்லை என்று கருதுகிறதோ அதுவரை அந்த டூவீலர் பக்கம் நாங்கள் செல்வதாக இல்லை" என்றார்.

அணில் போல உதவினேன் என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த அணிலுக்கே உதவுபவரை இப்போதுதான் பார்க்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு