Published:Updated:

`பசிக்குத் தண்ணீரைத்தான் குடித்து வருகிறோம்!'- சாட்டையடி தொழில் செய்யும் 170 குடும்பங்களின் கண்ணீர்

குடும்பங்கள்
குடும்பங்கள்

ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சக்கிமங்கலம் மக்கள் வறுமையில் தவித்து வருகிறார்கள்.

மதுரை, சக்கிமங்கலம் கிராமத்தில் சாட்டையடி தொழில் செய்துவரும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அன்றாடம் தொழிலுக்குச் சென்றாலே இவர்கள் மூன்று வேளை சாப்பிடுவது கேள்விக்குறியான ஒன்று. இந்நிலையில் தற்போது தொழிலுக்குச் செல்ல முடியாததால் கடந்த சில நாள்களாகச் சாப்பிடுவதற்கு வழியின்றித் தவித்து வருகிறார்கள். இம்மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் தங்களுக்குப் போதுமான உதவிகள் கிடைக்கவில்லை என்கிறார்கள் அம்மக்கள்.

குடும்பங்கள்
குடும்பங்கள்

சாட்டையடி தொழில் செய்து வரும் இவர்கள் சுமார் 850 பேர் மதுரையை அடுத்த சக்கிமங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அன்றாடம் தொழிலுக்குச் சென்று அந்தப் பணத்தை வைத்து சாப்பிட்டு வந்த இவர்கள், தற்போது ஊரடங்கின் காரணமாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அரசால் இலவசமாக வழங்கப்பட்ட பொருள்களும் போதுமானதாக இல்லை. தொண்டு நிறுவனம் மூலம் மளிகைப் பொருள்கள் வழங்கியுள்ளனர். ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருள்களுக்கு மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சக்கிமங்கலம் மக்கள் வறுமையில் தவித்து வருகிறார்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ஆனந்த் பேசுகையில், ``இங்கு சாட்டையடி தொழில் செய்து வயிற்றை நிறைத்து வரும் 170 குடும்பங்கள், அதாவது 850 பேர் உள்ளோம். பசி எங்களுக்குப் புதிதல்ல. ஆனால் தற்போது ஒரு வேளை சாப்பிடும் பாக்கியம் கூட பறி போய்க்கொண்டிருக்கிறது. சாட்டை அடித்து தொழில் செய்யச் சுற்றியுள்ள ஊர்களுக்குச் செல்வது வழக்கம். நாள் முழுவதும் சாட்டை அடித்ததில் கிடைத்த பணத்தை வைத்து இரவு ஒருவேளை தான் வீட்டில் சமைப்பார்கள். இரவு சமைத்த அந்த உணவையே அடுத்த நாள் காலையிலும் சாப்பிடுவோம். மதிய சாப்பாடு என்பது இங்குள்ள மக்களின் நினைவில் இருந்ததில்லை. இப்படியாகத்தான் எங்கள் வாழ்க்கைமுறையை நகர்த்தி வந்தோம். ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை.

மக்கள்
மக்கள்

இந்நிலையில் சமைக்கப் பொருள் இல்லாமல் உள்ளோம். ஊரடங்கு நீடிப்பதற்கு முன்பு, ஒரு சில தொண்டு நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருள்கள் கொடுத்தனர். அந்தப் பொருள்கள் சில நாள்களுக்கு எங்களின் பசியைப் போக்கியது. தற்போது ஊரடங்கு நீடித்துள்ளதால், தொழிலுக்கும் செல்ல முடியாமல் உதவிகளும் கிடைக்காமல் கடந்த சில தினங்களாக நாங்கள் பசிக்குத் தண்ணீரை மட்டுமே குடித்து வருகிறோம்.

சில இடங்களில் உதவி கேட்டோம். 850 பேருக்கு உதவ யோசிக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவு உதவினால் சிலரின் பசியாவது அடங்கும். இங்குள்ள பெரியவர்கள் நாங்களெல்லாம் பசியைப் பொறுத்துக்கொண்டாலும் குழந்தைகளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ”பசிக்கிறது” என்று சொன்னவாறு அழதான் அவர்களால் முடிகிறது என்றார் வேதனையுடன்.

`பசிக்குத் தண்ணீரைத்தான் குடித்து வருகிறோம்!'- சாட்டையடி தொழில் செய்யும் 170 குடும்பங்களின் கண்ணீர்

”பெரியவர்கள் எங்களால் பசியைத் தாங்கிக்கொள்ள முடியும்” என்று ஆனந்த் சொன்னாலும், அந்த வார்த்தைக்குள் மறைந்திருக்கும் பசியின் வலியை நம்மால் உணர முடிகிறது. சொல்ல முடியாத வார்த்தைக்குள் எத்தனை வலிகள், வேதனைகள். தங்களால் முடிந்த உதவிகளை செய்துவரும் கரங்கள் இவர்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்தால் மட்டுமே பசி எனும் கொடிய அரக்கனை விரட்ட முடியும்.

அடுத்த கட்டுரைக்கு