Published:Updated:

'பீடி, சாராயம் எங்க ஊருக்குள்ள கிடையாது'- 200 வருட சத்தியத்தைக் காப்பாற்றும் கிராம மக்கள்!

'இனிமே பீடி, சிகரெட், சாராயம் குடிக்கும் பழக்கம் கூடாது'னு சத்தியம் பண்ணிகிட்டாங்க.

தேனூர்
தேனூர்

"மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள, எங்கள் தேனூர் கிராமத்தில், 200 வருடங்களாக மது, பீடி, சிகரெட் விற்பனை கிடையாது. 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள ஊர்க்காரர்களுக்கு கெட்ட பழக்கம் என எதுவும் இல்லை. அதனால் எனக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை" என்று உயர்நீதி மன்ற நீதிபதி டி.ராஜா பெருமிதமாகக் கூறினார். பலரால் பாராட்டப்பட்ட இந்தச் செய்தி, வேறு பலருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

கணவருடன் லோகேஸ்வரி
கணவருடன் லோகேஸ்வரி

நீதியரசரே புகழும் அந்தக் கிராமத்துக்கு ஒரு விசிட் அடித்தோம். மதுரையின் சிறப்பான வைகை நதிக்கரை ஓரமாக அமைந்திருக்கிறது, தேனூர் கிராமம். அந்த ஊரின் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் லோகேஸ்வரி சோணைமுத்துவைச் சந்தித்தோம். "இருநூறு ஆண்டுகளுக்கு முன்னாடி எங்க ஊருல புகைக்கிற பழக்கம் இருந்துட்டுதான் இருந்துச்சாம். அப்போ, சின்னப் பையன் ஒருத்தன் பெரியவங்ககிட்ட தீப்பெட்டி கேட்டிருக்கான். அதைப் பார்த்த பெரியவங்க, நம்மளே நம்ம அடுத்த தலைமுறைக்கு ஒரு தவறான முன்னுதாரணமா இருக்கிறோமேனு வருத்தப்பட்டாங்க. உடனே, ஊர்கூடி ஒண்ணா நின்னு, 'இனிமே, பீடி, சிகரெட், சாராயம் குடிக்கும் பழக்கம் கூடாது'னு சத்தியம் பண்ணிகிட்டாங்க. அன்னிலேருந்து இப்ப வரைக்கும் எங்க ஊருல சிகரெட், பீடி மற்றும் மது விக்கிறது இல்ல. இது மட்டும் இல்ல, எங்க ஊருக்குன்னு நிறைய பழக்கவழக்கங்கள் இருக்கு." என்று அடுக்குகிறார்.

" முன்னாடி, எங்க ஊருலதான் அழகர் ஆத்துல எறங்குவாரு, திருமலை நாயக்கர் ஆட்சியிலதான் மதுரைக்கு மாத்துனாங்களாம். இதுக்கு ஆதாரமா, வண்டியூர்ல தேனூர் மண்டகப்படி'னு அமைச்சிருக்காங்க. தை மாசம் ஒண்ணாம் தேதி, ஊர்கூடி அறுவடைசெய்யும் பழக்கமும் காலங்காலமா பின்பற்றப்படுது. அறுவடைக்கு அப்பறம், ஆறு மரக்கா கருது அழகர்கோயிலுக்கு அனுப்புவோம். அதுக்குப் பிறகுதான் எங்க பயன்பாட்டுக்கு நெல்லை எடுத்து வைப்போம்" என்கிறார் லோகேஸ்வரி.

சந்தானம்
சந்தானம்

தேனூரில், 15 வருடமாக டீக்கடை வைத்திருக்கும் சந்தானம் பேசுகையில், "நான் சின்னப்பிள்ளையா இருந்ததுலயிருந்து எங்க ஊருல மது, சிகரெட், பீடி விற்பனை எதுவுமே இல்லை. அதுமட்டும் இல்லாம... எங்க ஊர்க்காரங்க செருப்புபோட மாட்டாங்க. ஏன்னா எங்க ஊருல கடவுள் நம்பிக்கை அதிகம். இது சுந்தர பூமியினு நம்பி, செருப்பு போடமாட்டாங்க. அந்தப் பழக்கம் இப்போ கொஞ்சம் கொஞ்சமாக மாறிட்டுவருது" என்றார். அரசு நடத்தும் மதுக்கடைகளை மூடச் சொல்லி பலரும் போராடும் வேளையில், தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டிருக்கும் தேனூர் நிச்சயம் வித்தியாசமான ஊர்தான்.