Published:Updated:

`யாரும் இங்க பட்டினி கிடக்கக்கூடாது!' - `மதுரை'யின் பசியாற்றும் தன்னார்வலர்கள் #SpreadPositivity

உணவு கொடுக்கும் அமைப்பு
உணவு கொடுக்கும் அமைப்பு

மதுரையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், வேலை, வருமானம் இழந்தோருக்கும், இந்த இக்கட்டான சூழலில் உணவு கொடுத்துவரும் சில தன்னார்வ அமைப்புகளிடம் பேசினோம்.

நாடே ஆக்சிஜனுக்காகவும், மருத்துவமனை படுக்கைகளுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. நோய் சாதாரண மக்களையும், வசதி வாய்ப்பு வாய்க்கப் பெற்றவர்களையும், அரசையும் அதிகாரிகளையும் ஆட்டிக்கொண்டிருக்கிறது. இது ஒரு புறம்.

நோயைவிட கொடுமையானது பசி. அதை உணர்ந்த பல இளைஞர்கள், தன்னார்வலர்கள், தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக இந்தப் பெருந்தொற்று நோய் வேளையிலும் சுழன்று உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். யாருக்கு உணவு தேவை என்றாலும் ஓடி ஓடி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழு நண்பர்களிடம் சில நூறுகளில் நிதி திரட்டி, தங்களால் முடிந்த அளவு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு யாரும் இந்த சேவைகளுக்கு சம்பளமோ, சான்றிதழோ தரப்போவது இல்லை.

இப்படி மதுரையில் சாலையோரம் வசிப்பவர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், வேலை, வருமானம் இழந்தோருக்கும், இந்த இக்கட்டான சூழலில் உணவு கொடுத்துவரும் சில தன்னார்வ அமைப்புகளிடம் பேசினோம்.

Spread Positivity
Spread Positivity

`படிக்கட்டுகள்' அமைப்பு

கொரோனா முதல் அலையில், மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வருமானம் இழந்த, பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட 650 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை எனக் கொடுத்து உதவினர் `படிக்கட்டுகள்' அமைப்பினர். முதல் அலை, இளைஞர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாததால் களப்பணி செய்ய ஏதுவாக இருந்தது.

இரண்டாம் அலை இளைஞர்களையும் பதம் பார்த்ததால், பாதுகாப்புக் கருதி களத்தில் இறங்கி வேலைசெய்ய இயலாத சூழலில் ஒரு புது முயற்சியில் இறங்கி உள்ளனர் `படிக்கட்டுகள்' இளைஞர்கள்.

தினமும் மதியம் 100 பேருக்கான இலவச உணவை பார்சல் செய்து, கூடவே தண்ணீர் பாட்டில் சகிதம் ஒரு மேசையில் வைத்து விடுகின்றனர்... `பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்' என்ற அறிவிப்போடு.

சாலையோரம் நடந்து செல்லும் யாசகர்களும் ஆதரவற்றோர்களும் இதனால் பயன்பெறுகிறார்கள். படிக்கத்தெரியாதவர்கள், இது விலைக்கோ என்று நினைத்து விடாமல் இருக்க, கூடவே ஒரு தன்னார்வலர் இருக்கிறார். விபரம் ஏதும் தெரியாமல், `இத எடுத்துக்கலாமா...' என்பவர்களுக்கு, `பசித்தால் எடுத்துக்கோங்க, பணம் ஏதும் வேண்டாம்' என்கிறார் அந்த ஆர்வலர்.

நூறு நாள் வேலை திட்டத்துக்குச் சென்று திரும்பும் மகளிர், இது பெரும் உதவியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

``காலையில இருந்து கால் கடுக்க வெயில்ல நின்னு வேலை பார்த்துட்டு, வீட்டுக்குப் போயி அடுப்புல நின்னு மறுபடியும் வெந்து சமைச்சுதான் மதிய சாப்பாடு சாப்பிடணும்னு இருந்துச்சு. இப்போ இந்த மாதிரி பண்ணுறது எங்களுக்கு பெரிய ஆறுதலா இருக்கு. இந்த தம்பிங்க நல்லாருக்கணும்'' என்று ஓர் அக்கா வாழ்த்திட்டு போனதில் கிடைத்திருக்கிறது இந்த இளைஞர்களுக்கான முதல் உத்வேகம்.

இன்னொருவர், இலவச உணவு அறிவிப்பை பார்த்ததும், ``தம்பி.. இந்த மாதிரி சேவைகளைத் தொடர்ந்து பண்ணுங்க. பசிக்கு சோறு போடுற மாதிரி புண்ணியம் எதுவும் இல்ல. என்னால பெருசா கொடுக்க முடியல. இந்தாங்க 50 ரூபாய். இதுல ரெண்டு பேருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுங்க" என்று காசை கொடுத்துவிட்டு சத்தமில்லாமல் நகர்ந்திருக்கார்.

படிக்கட்டுகள் அமைப்பு
படிக்கட்டுகள் அமைப்பு

தன்னார்வலர்கள் சக்தி மற்றும் சந்தோஷிடம் பேசினோம்.

``மதியம் 12 மணிக்கு சாப்பாடு வைக்க ஆரம்பிச்சோம். இன்னைக்கு தக்காளி சோறு + உருளைக்கிழங்கு பொரியல். நிறைய பேரு வந்து எடுத்துக்கிட்டாங்க. கூடவே தண்ணி வச்சது நல்ல முயற்சினு பாராட்டுனாங்க. 2 மணி கிட்ட, 60 உணவுப் பொட்டலங்கள் தீர்ந்து போயிருந்துச்சு. சரி அக்கம்பக்கத்துல யாராவது சாப்பிடாமல் இருந்தால் கொடுப்போம்னு, மீதி பொட்டலங்களோட டூ-வீலர்ல போனேன். பழங்காநத்தம் பகுதியில இருக்கிற உழவர் சந்தைகிட்ட இருந்தவங்க, மரத்துக்கு அடியில, பஸ் ஸ்டாப்ல இருந்தவங்கனு எல்லாருக்கும் பொட்டலங்களை கொடுத்தோம்.

ஒரு தாத்தா, `தம்பி நான் பெத்த பசங்ககூட நான் சாப்பிட்டு இருப்பேனானு நினைச்சுருக்க மாட்டாங்க...'னு கண் கலங்கிட்டார்.

இப்போ ஃபேஸ்புக்-ல எங்க நண்பர்களிடத்தில இந்த முயற்சிக்கு பேராதரவு கிடைச்சுருக்கிறதால , தொடர்ந்து இந்த சேவையை செய்ய இருக்கோம். இப்போதைக்கு ஒரு இடத்தில பண்ணுறதை, மதுரையில இருக்கிற எல்லா முக்கிய இடங்கள்லயும் பண்ணலாம்னு இருக்கோம்'' என்றனர்.

கருவறை அமைப்பு!

குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைப்புதான் `கருவறை'. 2017-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, 2020 கொரோனா ஊரடங்கில் நிறைய மக்கள் சேவை புரிந்திருக்கிறது. சென்ற வருடமே, 24 நாள்கள் களத்தில் இருந்து 6,000 உணவுப் பொட்டலங்களை வழங்கியிருக்கிறார்கள்.

`கருவறை' அமைப்பைச் சேர்ந்த சிவாவிடம் பேசினோம்.

``இந்த முறை ஊரடங்கு ஆரம்பிக்கும்போதே அதற்கான வேலைகள்ல இறங்கிட்டோம். களத்துல வேலைபார்த்த எங்களுக்கு நல்லவே தெரியும்... சாலையோரம் இருக்கிறவங்களுக்கும், வேலை இல்லாதவங்களுக்கும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவங்களுக்கும் அது எவ்ளோ சவாலா இருக்கும்னு. இந்த வருஷம் மே 10-ம் தேதியில இருந்து, ஒரு நாளைக்கு 150 - 180 உணவு பார்சல்கள் வரை கொடுத்துட்டு இருக்கோம். கோவிட் காரணமா தனிமைப்படுத்தப்பட்டவங்க, எங்களுக்கு கால் பண்ணி, சாப்பாடு கிடைக்குமானு கேக்கிறாங்க. மதுரை முழுக்க எங்க தன்னார்வலர்கள் பைக்ல போயி அவங்களுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கோம்.

முன்களப்பணியாளர்கள், சமூக சேவை செய்யுற எங்களை மாதிரி நண்பர்கள், காவல்துறை, போக்குவரத்து துறை எல்லாருக்கும் சாப்பாடு கொண்டுபோய் தர்றோம்.

கருவறை அமைப்பு
கருவறை அமைப்பு

எங்களுக்கு பெரிய அளவுல நன்கொடை கிடைக்கிறது இல்ல. நண்பர்கள் கொஞ்சம் சிரமப்பட்டுதான் அரிசி, எண்ணெய்னு ஏற்பாடு செய்யுறோம். கேட்டரிங் செலவை குறைக்கிறதுக்காக, நாங்களேதான் சமைச்சுக் கொடுக்கிறோம்.

அடுத்து, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல இருக்கிற பேஷன்ட்டுகள், அவங்க கூட இருக்கிறவங்களுக்கு சாப்பாடு கேட்டு நிறைய கோரிக்கைகள் வருது. அதையும் எப்படி பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கோம். சமைக்க, கொண்டு போயி கொடுக்க, உழைக்கனு நாங்க நாலஞ்சு ஃப்ரெண்ட்ஸ் இருக்கோம். எங்களுக்கு தினமும் அரிசியும், எண்ணையும் காய்கறியும் யாராச்சும் வாங்கிக் கொடுத்தா இன்னும் எங்க சேவையை விரிவாக்க வசதியா இருக்கும்.

எங்களால எவ்ளோ நாள் முடியுமோ, கண்டிப்பா எங்க உழைப்பை இந்த மக்களுக்குக் கொடுப்போம்" என்று நம்பிக்கையோடு பேசினார்.

விக்னேஷ், தன்னார்வலர்

மதுரையில் மக்கள் பணிகளில் இயங்கிவரும் தன்னர்வலர் விக்னேஷ், ``நேத்துல இருந்து இந்த உணவு சேவையை ஸ்டார்ட் பண்ணோம். ஞாயித்துக்கிழமை லாக்டௌன் போட்டு இருக்காங்களே, எல்லாரும் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கனு யோசிப்பதான் இந்த ஐடியா தோணுச்சு. ஊருக்கே கொடுக்க முடியலைன்னாலும், நம்ம ஏரியா மக்களுக்காச்சும் கொடுப்போம்னு மதுரை காளவாசல்ல இருக்கிற எங்க ஆபீஸ் கிட்ட 150 உணவுப் பொட்டலங்களை வச்சோம்.

விக்னேஷ்
விக்னேஷ்
`சீக்கிரமா எல்லோரும் நல்லாகிடணும்!’ - நிவாரண நிதிக்கு ரூ.5,000 கொடுத்த குழந்தைகள் #SpreadPositivity

அந்தப் பக்கம் நடந்து போறவங்க, வேலை இல்லாத தினக் கூலிகள், கஷ்டப்படுறவங்கனு எல்லாருமே வந்து எடுத்துக்கிட்டாங்க. சிலர் சாப்பாடு கிடைச்ச சந்தோஷத்துல அழகுற மாதிரி போயிட்டாங்க. அதைப் பார்த்ததும் ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு. முதல்ல ஞாயித்துக்கிழமை மட்டும்தான் வைக்கிற பிளான் இருந்துச்சு. இப்படி பலருக்கு இது பயன்படுதுனு தெரிஞ்ச உடனே தினமும் வைக்க ஆரம்பிச்சுட்டேன். இதுக்கான செலவை ஃபிரெண்ட்ஸ் கொடுக்கிறாங்க. அவங்க அவங்க பிறந்தநாள், திருமண நாள்னு எனக்குப் பணம் தர்றாங்க. அதை வச்சு தினமும் சாப்பாடு போடுறேன். இப்படி எல்லாரும் அவங்க அவங்க ஏரியாவில சின்னதா செஞ்சாங்கன்னா, நம்ம ஊரு, மாநிலம் முழுக்கவே பசியை போக்கலாம்" என்று யோசனை தந்து முடிக்கிறார் விக்னேஷ்.

`திருநகர் பக்கம்' அமைப்பு, மதுரை

மக்கள் சேவையில் மட்டுமல்லாது விலங்குகள், பறவைகள், மரங்கள் என அனைத்து உயிரினங்களிடத்திலும் கருணை காட்டும் `திருநகர் அமைப்பு' நண்பர்கள், கடந்த சில வருடங்களாகவே மதுரையில் பிரபலம். இவர்கள் லாக்டௌனுக்கு முன்பாகவே ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை ஆரம்பித்திருந்தனர். மதுரை திருநகரில் இருந்து பசுமலை வரையிலான, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட பல குடும்பங்களுக்கு இன்று சாப்பாடு கிடைக்கக் காரணம், இந்த அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள்தான்.

திருநகர் பக்கம் அமைப்பு
திருநகர் பக்கம் அமைப்பு
``நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்!" - `குக் வித் கோமாளி' அஷ்வின் #SpreadPositivity

இதுபோக, இரவு வேளைகளிலும் வீடற்ற சாலையோர ஆதரவற்றோர்களுக்கு தேடிப்போய் உணவு கொடுக்கிறார்கள். ஆதரவற்ற முதியோர்களை மீட்டு காப்பகங்களில் சேர்த்து, மறுவாழ்வு தரும் முயற்சிகளிலும் தற்போது இறங்கி இருக்கிறார்கள்.

ஆதரவற்றவர்களுக்கான உணவை இவர்களே சமைத்தும் தருகிறார்கள். நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள் மூலம் இது சாத்தியப்படுகிறது என்றும், இன்னமும் நிறைய பேருக்கு உணவுகள் தொடர்ந்து கொடுப்பதுதான் திட்டம் எனவும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர் இந்த இளைஞர்கள்.

பெருந்தொற்று வேளையிலும், இந்த சவாலான சூழ்நிலையிலும் ஊரெங்கும் ஓடி உணவு கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த இளைஞர்களுக்கு அன்பும் வாழ்த்துகளும்!

அடுத்த கட்டுரைக்கு