Published:Updated:

`அப்போ கார்ப்பரேட் HR, இப்போ கேக் பிசினஸில் கில்லி!' - மதுரை ஸ்டெபி

 ஸ்டெபி
ஸ்டெபி

''சோஷியல் மீடியாவில் கேக் போட்டோக்களை ஷேர் பண்ணப்போவும் நல்ல வரவேற்பு கிடைச்சது. கமென்ட்ல, 'ஹவ் மச்?'னு கேட்டவங்கதான் இதை பிசினஸாவும் யோசிக்க எனக்கு உந்துதல் தந்தாங்க.''

மதுரை, திருப்பாலையை அடுத்த பொறியாளர் நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரி ஸ்டெபி. முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாகக் கை நிறையச் சம்பளம் பெற்று வந்தவர். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கினார்.

கேக்
கேக்

வீட்டில் பொழுதுகளை வீணாக்க விரும்பாத ஸ்டெபி, ஆன்லைனில் பேக்கிங் பயிற்சியைக் கற்றார். கேக், சாக்லெட், பிஸ்கட் தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொண்டவர், அவற்றைத் தயாரித்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்க... இன்று பிஸியான தொழில் முனைவோர் ஆகிவிட்டார் ஸ்டெபி. `சூரரைப் போற்று' திரைப்படத்தில் `பேக்கரி வைத்து கேக் பிசினஸ் பண்ணியே தீருவேன்' எனப் போராடி சாதிப்பார் `பொம்மி'யாக நடித்த அபர்ணா. படத்தில் மாறாவைப் போல பொம்மியும் எல்லார்க்கும் ஃபேவரைட். அதேபோல, தனக்குப் பிடித்த கேக் பிசினஸில் சாமர்த்தியமாக ஜெயித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த ஸ்டெபி.

ஸ்டெபியிடம் பேசினோம். "நான் மதுரையில ஒரு பெரிய தனியார் நிறுவனத்துல ஹெச்.ஆர் துறையில வேலைபார்த்துட்டு இருந்தேன். லாக்டெளன் காரணமா வீட்டில் முடங்கவேண்டிய சூழல். வேலைசெய்தே பழகின எனக்கு வீட்ல சும்மா இருக்கப் பிடிக்கலை. என் அக்காகூட பேசினப்போதான் பேக்கிங் ஐடியா வந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஆன்லைன் பயிற்சியாளர் மூலமா பலவிதமான நவீன கேக் வகைகளைக் கத்துக்கிட்டேன்.

கேக்
கேக்

அவற்றையெல்லாம் செஞ்சு பார்த்தப்போ, என் அர்ப்பணிப்பும் ஆர்வமும் நல்ல ரிசல்ட்டில் முடிஞ்சது. எனக்குத் தெரிஞ்சவங்க எல்லாரும் என் பிரசென்டேஷனைப் பாராட்டினதோடு, டேஸ்ட்டும் சூப்பரா இருக்கிறதா சொன்னாங்க. சோஷியல் மீடியாவில் கேக் போட்டோக்களை ஷேர் பண்ணப்போவும் நல்ல வரவேற்பு கிடைச்சது. கமென்ட்ல, 'ஹவ் மச்?'னு கேட்டவங்கதான் இதை பிசினஸாவும் யோசிக்க எனக்கு உந்துதல் தந்தாங்க. அவங்கெல்லாம் என் கஸ்டமராவும் அமைஞ்சாங்க.

பொதுவா, பேக்கரியில கிடைக்கிற கேக்கைவிட நான் செய்யும் ஹோம்மேடு கேக் விலை அதிகம்தான். ஆனால், விலைக்கு ஏற்ற தரத்துக்கும் சுவைக்கும் உத்தரவாதம் இருக்கும். மேலும், கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கஸ்டமைஸ்டு கேக்கும் செஞ்சு தர்றேன். குறிப்பா, சர்க்கரை நோயாளிகளுக்கு நான் செஞ்சு தர்ற சுகர்லெஸ் கேக்குக்கு நல்ல வரவேற்பு.

கேக்
கேக்

அதேபோல, ஒரு குடும்பத்துல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஃபிளேவர் பிடிக்கும். அதனால, ஒரே கேக்ல பல ஃபிளேவர்களும் இருக்கிற மாதிரி பார்ட்லி ஃபேளவர் கேக்களும் பண்ணித் தர்றேன். இப்படி வித்தியாசமா யோசிச்சு செஞ்சு கொடுக்கிறதால `புதுசா இருக்கே'னு கஸ்டமர்கள் பாராட்டுறாங்க'' என்றவர், முதலீடு, வருமானம் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

''உண்மையைச் சொல்லணும்னா எனக்கு இனிப்பே பிடிக்காது. ஆனாலும், தொழில் ஆர்வம்தான் என்னை இதில் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு. கேக் தொழிலுக்கு ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ஆனா, பிசினஸை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகணும்னா நிச்சயம் முதலீடு தேவை.

கேக்
கேக்

என் கேக் பிசினஸ் கமர்ஷியலா பிக் அப் ஆனதுக்கு அப்புறம் இதில் மூன்றரை லட்சம் இன்வெஸ்ட் பண்ணியிருக்கேன். ஆனா, அதிலும் ஒரு குட் நியூஸ் இருக்கு. அந்தத் தொகை முழுவதையும் என் கையில இருந்து போடலை. ஆரம்பத்தில் கேக் செய்து கொடுத்ததில் கிடைச்ச வருமானமும், ஒரு பகுதி முதலீட்டுக்கு கைகொடுத்துச்சு. இப்போ மாசம் 50,000 பிசினஸ் நடக்குது. ஆர்டர்கள் அதிகரிச்சா, இன்னும் பாய்ச்சலா பயணிக்கலாம். என் வேலையை விட்டுட்டு இதைத் தொடரும் முடிவை எடுக்கும் அளவுக்கு கேக் பிசினஸில் எனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கு!"

தம்ப்ஸ் அப் காட்டுகிறார் இளம்பெண் ஸ்டெபி.

அடுத்த கட்டுரைக்கு