Published:Updated:

ஊரடங்கால் முடங்கிய `விசிறித் தாத்தா'.. கரம் நீட்டிய வாலிபர்கள்! -மதுரை நெகிழ்ச்சி

விசிறித் தாத்தா
விசிறித் தாத்தா ( ஈ.ஜெ.நந்தகுமார் )

விசிறித் தாத்தா என்று மக்களால் அழைக்கப்படும் நடராஜன் தீவிரமான இறை பக்தர். தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிடுவார்.

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடடங்கி உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி இல்லை என்பதால் மதுரையில் கொண்டாடப்படும் மிகப்பெரும் சித்திரைத் திருவிழாவை அரசு ரத்து செய்துள்ளது.

விசிறித் தாத்தா
விசிறித் தாத்தா
ஈ.ஜெ.நந்தகுமார்

சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்த பல தொழில்கள் முடங்கியுள்ளன. பல தொழிலாளர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில், சித்திரைத் திருவிழா நாள்களில் மக்களுக்குச் சேவை செய்யும் விசிறித் தாத்தா மிகவும் கஷ்டப்படுகிறார் என்ற தகவல் வாட்ஸ்அப் மூலம் பரவியதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

விசிறித் தாத்தா என்று மக்களால் அழைக்கப்படும் நடராஜன் தீவிரமான இறை பக்தர். தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிடுவார். சித்திரைத் திருவிழா நடைபெறும் நாள்களில் கோயிலில் குவிந்திருக்கும் மக்களுக்கு வியர்க்காமல் இருக்க பெரிய சைஸ் மயிலிறகு விசிறியால் விசிறி விடுவார். அது ஒரு கஷ்டமான பணி என்றாலும் அதைக் கடவுள் பணியாக நினைத்துச் செய்வார். சித்திரைத் திருவிழா நாள்களில் மக்களால் விரும்பப்படும் நபராக மாறிப்போனார். ஆனால், யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

இந்த நிலையில்தான் ஊடரடங்கு அவரையும் பாதித்துவிட்டது. `அவரது குடும்பம் போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறது, அவருக்கு உதவி செய்யுங்கள்' என்று அக்கறையுள்ள சிலர் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரப்பினார்கள்.

இதை அறிந்த சிம்மக்கல் பகுதியிலுள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அத்தியாவசியப் பொருள்களை நேரில் சென்று கொடுத்து உதவி செய்தார்கள். அதற்கு அன்பை வெளிப்படுத்தும் வகையில் வாலிபர் சங்கத் தோழர்களுக்கு திருநீறு பூசி நெகிழ வைத்தார். இதைத்தொடர்ந்து, இன்னும் பலர் தனியாகவும் அமைப்பு ரீதியாகவும் அவருக்கு உதவி செய்யத் தயாராகி உள்ளார்கள்.

விசிறித் தாத்தா
விசிறித் தாத்தா
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தக் கொரோனா ஊரடங்கு இதுபோன்ற பல நெகிழ்ச்சியான சம்பவங்களை நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு