Published:Updated:

`முதல்வர் பாராட்டைவிடவும் இதுதான் எனக்கு மகிழ்ச்சி!' - ஏழைப்பிள்ளைகளுக்கு உதவும் மகாலட்சுமி டீச்சர்

 மகாலெட்சுமி டீச்சர்
மகாலெட்சுமி டீச்சர்

மாணவர்களை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வகுப்பெடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று ஆச்சர்யப்படுத்துகிறார் மகாலட்சுமி.

``எங்கிட்ட படிக்கிறவங்கள்ல பெரும்பாலான பசங்க கூலித் தொழிலாளர்களோட பிள்ளைங்கதான். ஊரடங்கால அவங்க குடும்பத்தோட வாழ்வாதாரம் ரொம்பவே பாதிக்கப்பட்ருச்சு. `நம்ம கஷ்டம் நம்மளோடவே போகட்டும், எப்பாடு பட்டாவது நம்ம பிள்ளையைப் படிக்க வெச்சுரணும்’ங்கிற குறிக்கோளோட இருந்த ஏழைப் பெற்றோர்கள், வேற வழியில்லாம பிள்ளைங்களை வேலைக்கு அனுப்ப முடிவெடுத்துட்டாங்க… வீட்லயே இருந்த பிள்ளைகளும் கல்விச் சூழலிலிருந்து விலக ஆரம்பிச்சாங்க... ஏன்னா, அவங்களுக்கு ஆன்லைன் கல்விக்கான எந்தச் சூழலும் இல்லை. இதையெல்லாம் பார்த்துகிட்டு என்னால வீட்லயே இருந்து கடமைக்காக வேலை பார்க்க முடியலை. அதனாலதான் அவங்க பகுதிக்கே போய் பாடம் நடத்தலாம்னு முடிவு செஞ்சேன்” - ஏழைப் பிள்ளைகளின் எதிர்காலத்தின் மீதான அக்கறை மிகுதியோடு பேசுகிறார் ஆசிரியர் மகாலட்சுமி.

வகுப்பெடுக்கும் மகாலட்சுமி டீச்சர்
வகுப்பெடுக்கும் மகாலட்சுமி டீச்சர்

கொரோனா ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடக்கின்றன. நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்விக்குப் பழகிவிட்டனர். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பலருக்கு ஆன்லைன் கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. அப்படியான மாணவர்களை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வகுப்பெடுப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று ஆச்சர்யப்படுத்துகிறார் மகாலட்சுமி. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த, நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் மகாலட்சுமி, இருள் சூழ்ந்திருந்த நூற்றுக்கணக்கான ஏழைப் பிள்ளைகளின் கல்விச்சூழலில், நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார்.

கொரோனா முதல் அலையின்போதே மாணவர்களின் வீடு தேடிச் செல்ல ஆரம்பித்தவர். இந்த ஆண்டும் அதைத் தொடர்கிறார். நடுவீரப்பட்டு காலணி, ராணிப்பேட்டை, நைனார்ப்பேட்டை, நரியங்குப்பம், வாண்டராசன் குப்பம், குமுளங்குளம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இப்படி நேரடியாகச் சென்று வகுப்பு நடத்தி வருகிறார் மகாலட்சுமி. இவர் ஒரு ஏரியாவுக்குச் சென்றதும், அங்குள்ள - வெவ்வேறு பள்ளி/ வகுப்பு- மாணவர்கள் ஒருங்கிணைகிறார்கள். திறந்தவெளி இடத்தில் தனிமனித இடைவெளியுடன் வகுப்பு ஆரம்பிக்கிறது. நாட்டு நடப்பு, கொரோனா குறித்த விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் போன்ற விஷயங்களை உள்ளடக்கி மகாலட்சுமி டீச்சர் வகுப்பு களை கட்டுகிறது. வீட்டில் வெறுமையிலிருந்த மாணவர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி!

மகாலெட்சுமி டீச்சர்
மகாலெட்சுமி டீச்சர்

நடுவீரப்பட்டு அருகே உள்ள செங்கல்சூளையில் வேலைசெய்வோரின் பிள்ளைகளுக்குப் பாடம் எடுத்து முடித்துவிட்டு நம்மிடம் பேசிய மகாலட்சுமி, ``முதல் லாக்டெளனின்போதே இப்படி மாணவர்களைத் தேடி வந்து அவங்க இடத்துலயே வகுப்பெடுக்க ஆரம்பிச்சுட்டேன். ஏன்னா, கிராமப்புறங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்பெடுக்கிறதுக்கான சூழலே இல்லை. பல மாணவர்கள்கிட்ட ஸ்மார்ட் போன் இல்லை. ஒரு சிலர்கிட்ட போன் இருந்தாலும் நெட்வொர்க் பிரச்னை. இரண்டும் இருந்தால் குடும்பச் சூழல் சரியில்லைன்னு ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள். உண்மையைச் சொல்லணும்னா நகர்ப்புறங்கள்ல நடத்துற மாதிரி கிராமப்புறங்கள்ல ஆன்லைன் வகுப்பு நடத்த முடியலை. இதையெல்லாம் காரணமா சொல்லிகிட்டு என்னால சும்மா இருக்க முடியலை. தன் கண்முன்னாடியே தன் மாணவர்கள் கல்விச்சூழல் பறிபோறதை எந்த ஆசிரியராலும் தாங்கிக்க முடியாது. எனக்கும் அப்படித்தான்.

நானும் இப்படி சாதாரண பின்புலத்துல இருந்து அரசுப் பள்ளியில படிச்சு வந்தவதான். அதனால அவங்க சூழலும் வலியும், கல்விக்கான முக்கியத்துவமும் எனக்கு நல்லாத் தெரியும். அதனாலதான் அவங்க வீடு தேடிப் போக ஆரம்பிச்சேன். இன்னிக்கு ஒரு பகுதிக்குப் போறேன்னா... அடுத்த நாள் இன்னொரு பகுதிக்குப் போவேன். எனக்கு பைக் ஓட்டத் தெரியாது. அதனால ஆரம்பத்துல இரண்டு மூன்று கிலோமீட்டர் தொலைவுல இருக்கிற பகுதிகளுக்கு நடந்தே போனேன். தூரமா உள்ள ஏரியாவுக்கு போறதுக்கு என் கணவர் உதவினார்.

குடும்பத்தினருடன் மகாலெட்சுமி டீச்சர்
குடும்பத்தினருடன் மகாலெட்சுமி டீச்சர்
``18 நாள்ல 140 சடலங்கள், தகனமேடை தண்டவாளமே உருகிடுச்சு!" - மின்மயான ஊழியர் கண்ணகி #SheInspires

ஒரு ஏரியாவுக்குபோனதும் அங்க இருக்குற எங்க ஸ்கூல் பசங்களைச் சந்திச்சு அவங்க மூலமா அந்தப் பகுதியில இருக்கிற ஆன்லைனில் படிக்க இயலாத மத்த ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸையும் ஓரிடத்துல ஒருங்கிணைப்பேன். தனிமனித இடைவெளியோட வகுப்பு தொடங்கும். வகுப்புல பாடப் புத்தகத்தை நடத்துறது கிடையாது. முக்கியமா கொரோனா விழிப்புணர்வு, கல்விக்கான முக்கியத்துவம் பத்தி அவங்ககிட்ட நிறைய பேசுவேன். பின்பு சினிமா பாடல்கள் மூலமா இலக்கணம் கத்துக் கொடுப்பேன். அது மாணவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துச்சு. ஆர்வமா வர ஆரம்பிச்சாங்க. வகுப்பு முடிஞ்சதும் பத்து நாளுக்கான ஹோம் வொர்க் கொடுத்துட்டு வருவேன். பத்துநாள் கழிச்சு மீண்டும் அந்தப் பகுதிக்குப் போவேன்" மகாலட்சுமியின் பேச்சில் ஆர்வம் பொங்குகிறது.

சற்று இடைவெளிவிட்டுத் தொடர்ந்த அவர், ``போன வருஷம் என்னோட செயல்பாடுகளைப் பற்றி செய்தித்தாள்கள்ல வந்த செய்தியைப் பார்த்துட்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர்ல பாராட்டி எழுதியிருந்தார். அது இன்னும் ஊக்கத்தைக் கொடுத்துச்சு. கடலூர் கலெக்டர் நேர்ல அழைச்சுப் பாராட்டினாங்க. அதெல்லாம் பெரிய ஊக்கத்தைக் கொடுத்தாலும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னன்னா... குடும்பக் கஷ்டத்தின் காரணமா வேலைக்குப் போன சில மாணவர்களையும், வேலைக்குப் போக இருந்த பல மாணவர்களையும் படிக்க அழைச்சுட்டு வந்ததுதான். அதுக்காக அவங்க பெற்றோர்கள்கிட்ட நிறைய பேசினேன்.

வகுப்பெடுக்கும் மகாலெட்சுமி
வகுப்பெடுக்கும் மகாலெட்சுமி
பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி; நீலகிரி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டிய முதல்வர்!

அவங்களுக்கும் பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆசைதான். ஆனாலும் சூழல் காரணமா கடுமையான அந்த முடிவுக்குப் போயிருந்தாங்க. இந்தப் பிரச்னை நிரந்தரமானது கிடையாது. தற்காலிகமான பிரச்னைக்காக உங்க பிள்ளையோட படிப்பை நிறுத்தினீங்கன்னா அப்புறம் அவங்க வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்னு சொல்லிப் புரிய வெச்சேன். சிலருக்கு என்னால முடிஞ்ச சின்னச் சின்ன உதவிகளைச் செஞ்சேன். அவங்களும் புரிஞ்சுகிட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்புற முடிவைக் கைவிட்டு படிக்க அனுப்பினாங்க. வேலைக்கு அனுப்பினவங்க அதை நிறுத்தினாங்க" பெருமையுடன் சொல்லும் மகாலட்சுமி,

``நகரப் பகுதிகள்ல உள்ள நிலைமையை வெச்சுதான் நாம எப்போதுமே யோசிக்கிறோம். அங்க உள்ள சூழல் வேற, கிராமங்கள்ல உள்ள சூழல் வேற... ஒவ்வொரு பகுதியா போய் பார்க்கும்போது ரொம்ப வேதனையா இருக்கு. என்னால முடிஞ்ச அளவுக்கு அவங்களுக்கு படிப்பு மேல ஆர்வத்தைத் தூண்டுறேன்" என்று அவர் முடிக்கும்போது குரலில் அவ்வளவு நிறைவு.

அடுத்த கட்டுரைக்கு