Published:Updated:

`4 சந்திப்புகள்; 7 மணிநேரம்!' - மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்குத் தயாராகும் மாமல்லபுரம்

இந்தியப் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது.

மோடி - ஜி ஜின்பிங்
மோடி - ஜி ஜின்பிங்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான முதல் உச்சி மாநாடு, கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் நடந்தது. அந்நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகர், இந்த சந்திப்புக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணம் இருந்தது என்கிறார்கள். சீனப் பொருளாதாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்த நகர். ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரை யாங்க்ட்ஸ் மற்றும் ஹான் (Yangtze and Han rivers) என இரு ஆறுகள் வளப்படுத்துகின்றன. தங்கள் நாட்டின் பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தவே, மோடி - ஜி ஜின்பிங் இடையிலான முதல் இன்ஃபார்மல் சந்திப்புக்கு அந்த நகரை சீனா தேர்வுசெய்தது என்கிறார்கள் விமர்சகர்கள்.

மோடி - ஜி ஜின்பிங் வுஹான் சந்திப்பு
மோடி - ஜி ஜின்பிங் வுஹான் சந்திப்பு

பொதுவாக, இருநாட்டுத் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புகள், அந்தந்த நாடுகளின் தலைநகர்களில் நடப்பது வழக்கம். முறையாகத் திட்டமிடப்பட்டு, சந்திப்பில் பேசவேண்டிய விவகாரங்கள் குறித்து முன்னரே விவாதிக்கப்பட்டு, சந்திப்பின் முடிவில் இருநாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கையோடு முடியும், தலைவர்களின் அதிகாரபூர்வ சந்திப்புகள். ஆனால், மோடி - ஜி ஜின்பிங் இடையிலான முதல் இன்ஃபார்மல் சந்திப்பில் இந்த நடைமுறைகள் எதுவுமில்லை. அதிகாரபூர்வ சந்திப்பு போலல்லாமல், திட்டமிடாத விவகாரங்கள் பற்றியும் இந்த சந்திப்பில் பேசலாம். அந்த முறையில் வுஹான் நகரில் நடந்த சந்திப்பில் மோடி - ஜி ஜின்பிங், இந்தியா - சீனா இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினர் எனலாம். இரு நாடுகளுக்கிடையே டோக்லாம் விவகாரம் தொடர்பாகப் பதற்றம் அதிகரித்தநிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது, உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அந்த சந்திப்பில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற சந்திப்புகள் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.

மோடி - ஜின்பிங் சந்திப்பு... புதுப் பொலிவு பெறும் மாமல்லபுரம்!

அந்த வகையில், இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இரண்டாவது சந்திப்பு இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. வாரணாசி, மாமல்லபுரம் உள்ளிட்ட நகரங்களில் இந்த சந்திப்புக்கான இடமாகத் திட்டமிடப்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்னர், காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இந்த சந்திப்பை நடத்த இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன. வுஹானைத் தேர்வு செய்து தங்களின் பொருளாதார பலத்தை சீனா கட்டிய நிலையில், மாமல்லபுரத்தைத் தேர்வு செய்து நமது கலாசார பெருமை குறித்து உலகுக்குக் காட்டும் விதமாகவே மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டது என்கிறார்கள்.

மாமல்லபுரம்
மாமல்லபுரம்

மோடி - ஜி ஜின்பிங் இடையிலான சந்திப்பு, அக்டோபர் 11 முதல் 13-ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்புக்காக, வரும் 11-ம் தேதி 1.30 மணியளவில், சீன அதிபர் ஜி ஜின்பிங் விமானம் மூலம் சென்னை வருகிறார். அந்த நேரத்தில், சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வரும் ஜி ஜின்பிங், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்த பின்னர், மாலையில் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு, மோடி மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோர் ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு மற்றும் கடற்கரைக் கோயில் ஆகியவற்றை சுமார் ஒருமணி நேரம் சுற்றிப் பார்க்கின்றனர். அப்போது, கலை நிகழ்ச்சிகளும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்... ஸ்பாட் விசிட்! (படங்கள்)

அதன் பின்னர், மோடி - ஜி ஜின்பிங் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. 75 நிமிடங்கள் நீளும் இந்தச் சந்திப்பில், இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, சீன அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி, இரவு உணவு விருந்தளிக்கிறார். சந்திப்புக்குப் பின்னர், சென்னை திரும்பும் ஜி ஜின்பிங், மறுநாள் (12-ம் தேதி) மீண்டும் மாமல்லபுரம் செல்கிறார். அப்போது, இருவரும் சுமார் 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசுகின்றனர். அதன்பின்னர், இருநாட்டு அதிகாரிகள் கலந்துகொள்ளும் சந்திப்பு நடக்கிறது.

அதிகாரிகள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு

சந்திப்புக்குப் பின்னர் சென்னை வரும் ஜி ஜின்பிங், சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் சீனா திரும்புகிறார். ஜி ஜின்பிங் வருகையின்போதும் புறப்பாட்டின்போதும், சென்னையில் மற்ற விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், மாமல்லபுரத்தில் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜின்பிங்! - பிரதமரோடு பேசப் போகும் விஷயங்கள் என்னென்ன?

அவர்கள் வருகைக்கு சில நாள்களுக்கு முன், ஐந்து ரதம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்ல இந்திய தொல்லியல் துறை தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகளுடன் சீன பாதுகாப்பு அதிகாரிகளும் ஆய்வு செய்திருக்கிறார்கள். பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், 5,000-த்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

சீன அதிகாரிகள் ஆய்வு
சீன அதிகாரிகள் ஆய்வு

அருணாச்சலப்பிரதேசத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் ராணுவ ஒத்திகை நடவடிக்கைகளுக்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலேவிடம் சீன வெளியுறவுத் துறை இணையமைச்சர் லூ ஜஹோஹி எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். இதனால், ஜி ஜின்பிங்கின் இந்திய வருகை தாமதாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சீன அதிபர் வருகை குறித்து சீனா தரப்பில் இருந்து உறுதி கிடைத்தவுடன் மத்திய அரசு அதிகாரபூர்வமாக இன்று அல்லது நாளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.