Published:Updated:

மாமல்லபுரம் லைட் ஹவுஸ் மூடல்! - தீவிரவாத அச்சுறுத்தல் காரணமா?

Light House
Light House ( Jayavel )

மாமல்லபுரம் லைட்ஹவுஸ் மற்றும் அருங்காட்சியகம் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களைக் காண்பதற்காகத் தினமும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவர்கள், பொழுதுபோக்கும் வகையில் கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியகம், லைட் ஹவுஸ் எனப் பல்வேறு இடங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன.

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களில் லைட் ஹவுஸ் முக்கியமான ஒன்று. லைட் ஹவுஸ் மீது ஏறினால் சுற்றுவட்டார கிராமங்கள், கடற்கரை, கல்பாக்கம் அணுமின்நிலையம் உள்ளிட்டவை தெரியும். கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Light House
Light House
Jayavel

மாமல்லபுரத்தில், பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகிறார்கள். அதுபோல், அருகில் உள்ள கல்பாக்கத்தில் அணுமின்நிலையம் உள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடி அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாமல்லபுரம் லைட் ஹவுஸ் நுழைவு வாயில் மற்றும் அருங்காட்சியகத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காகப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. லைட்ஹவுஸ் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இந்த அறிவிப்பைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

1887-ல் கட்டப்பட்டது மாமல்லபுரம் லைட்ஹவுஸ். 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது மாமல்லபுரம் லைட் ஹவுஸ் மூடப்பட்டது.

Light House
Light House
Jayavel

அப்போதிலிருந்து 18 வருடங்களாகப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2011-ல் மீண்டும் திறக்கப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுவந்தனர். இந்த நிலையில், மீண்டும் லைட்ஹவுஸ் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு