Published:Updated:

விழுப்புரம்: சாராயம் கடத்தப் பயன்படுத்திய திருட்டு வாகனங்கள் பறிமுதல்! - எஸ்.பி எச்சரிக்கை

விழுப்புரம் எஸ்.பி பேட்டி

"பள்ளி மாணவர்கள் பேருந்துப் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை காவல்துறை எச்சரிப்பதோடு... சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆசிரியர், பெற்றோரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - விழுப்புரம் எஸ்.பி

விழுப்புரம்: சாராயம் கடத்தப் பயன்படுத்திய திருட்டு வாகனங்கள் பறிமுதல்! - எஸ்.பி எச்சரிக்கை

"பள்ளி மாணவர்கள் பேருந்துப் படியில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை காவல்துறை எச்சரிப்பதோடு... சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆசிரியர், பெற்றோரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." - விழுப்புரம் எஸ்.பி

Published:Updated:
விழுப்புரம் எஸ்.பி பேட்டி

திருட்டுப்போன 12 இரு சக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக நேற்று மாலை விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா. அப்போது பேசியவர், "விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தொடர் கண்காணிப்புப் பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் (எ) அப்பு என்பவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்தபோது  இரு சக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 12 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும், திருடப்பட்ட வாகனங்களைத் தடைசெய்யப்பட்ட சாராயம் கடத்துவதற்குப் பயன்படுத்தக் கொடுத்ததாகத் தெரிகிறது. இது மிகவும் சென்சிட்டிவான விஷயம்.

மீட்கப்பட்ட வாகனங்கள்
மீட்கப்பட்ட வாகனங்கள்

இதில் சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தெரிந்தவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்லலாம். விழுப்புரம் மாவட்டத்தில், மேலும் சில வாகனத் திருட்டு வழக்குகள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அவற்றையும் கண்டுபிடிப்போம். தீபாவளி வருவதையொட்டி பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், கடைவீதி ஆகிய பகுதிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போட்டிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கண்காணிப்பு கோபுரங்கள், சிசிடிவி-களைக்கொண்டு குற்றவாளிகளைக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பிக்பாக்கெட், வழிப்பறி, வாகனத் திருட்டு போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுத்துவருகிறோம். கஞ்சாவுக்கு எதிராக, புதுவை போலீஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம். ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் அருகில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களிடையே போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், பள்ளி அருகேயுள்ள பெட்டிக்கடை போன்ற பகுதிகளில் தணிக்கை செய்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் வைத்திருந்தால், அவற்றைப் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 40 முதல் 50 கடைகளை மூடி சீல் வைத்திருக்கிறோம். கஞ்சாவைப் பொறுத்தவரை, வரும் காலங்களில் அதன் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறோம். இது குறித்து அனைத்துக் காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் பேருந்துப் படிகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துத்துறை மூலமாகக் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும், இது போன்று மாணவர்கள் படியில் பயணம் செய்வதைக் காவல்துறை எச்சரிப்பதோடு... சம்பந்தப்பட்ட மாணவர்களின் ஆசிரியர் மற்றும் பெற்றோரை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.