Published:Updated:

`குமரியில் கொரோனாவால் உயிரிழந்த முதல் நபர்' -தீவிரக் கண்காணிப்பில் மாலத்தீவில் இருந்து வந்த 147 பேர்

ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி கொரோனா வார்டு

குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் நபர் மரணமடைந்துள்ள சம்பவம் மக்களைக் கவலையடைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 4 வயது குழந்தை, 82 வயது மூதாட்டி உள்ளிட்டோரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். முதற்கட்டமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 16 பேரும் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் குமரி மாவட்டத்துக்கு வருபவர்களால் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இரண்டாம்கட்டமாக சென்னையிலிருந்து வந்த 8 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் ஒருவர் அறந்தாங்கியைச் சேர்ந்தவர், ஒரு குழந்தை கேரளத்தைச் சேர்ந்தது. எனவே, அந்த இரண்டுபேரும் அவர்களது ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேருக்கும் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இந்த நிலையில், 54 நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கன்னியாகுமரி அருகே உள்ள மயிலாடி, மார்த்தாண்டபுரம் பகுதிக்கு வந்த 38 வயதுள்ள வழக்கறிஞர் ஒருவருக்கும் அனந்தநாடார் குடி அருகே பாம்பன்விளையைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே கொரோனா உறுதி செய்யப்படும் என மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க மயிலாடி பகுதியைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் கவலைக்கிடமான வகையில் இருந்ததால் கன்னியாகுமரி அழைத்து வந்து சிகிச்சை அளிக்க உறவினர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 9-ம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ம் தேதி இரவு அவர் இறந்தார்.

அவர் இறப்பதற்கு முன்பாக அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் வருவதற்காக அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அவரது பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் வந்தது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை
ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை. எனினும் ஆம்புலன்ஸில் அவருடன் வந்த அவரின் மகளை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். கொரோனா சோதனை முடிவுக்காக மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருந்த முதியவரின் உடல் நாகர்கோவில் மாநகராட்சிக்குச் சொந்தமான புளியடியில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்பட்டது. குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதல் நபர் பலியாகி இருக்கும் சம்பவம் மக்களை கவலையடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், மாலத்தீவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 147 பேர் கப்பல் மூலம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்பட்டு கொல்லங்கோடு, களியக்காவிளை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்துவதற்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு