Published:Updated:

`மூன்று பேய்கள் துரத்தின; கிணற்றில் குதித்தேன்!'- போலீஸாரை அதிரவைத்த புதுக்கடை இளைஞர்

தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலையில் கனவு கண்டதாகவும். அதில் தன்னை மூன்று பேய்கள் துரத்தியதுபோல இருந்தது என்றும். கண் விழித்துப்பார்த்தால் நான் கிணற்றுக்குள் கிடந்தேன் எனவும் கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

கிணற்றில் இருந்து மீட்கப்படும் ஸ்டீபன்
கிணற்றில் இருந்து மீட்கப்படும் ஸ்டீபன்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே ஐரேனிபுரம் அயனிவிளை நாகதேவி கோவில் உள்ளது. இந்தக் கோயில் அர்ச்சகர் இன்று காலையில் கோவில் நடை திறந்து பூஜை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது கோயில் கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டது. இதையடுத்து பூசாரி கிணற்றை எட்டிப்பார்த்தார். கிணற்றில் இடுப்பளவு தண்ணீரில் ஒருவர் தத்தளித்துக்கொண்டிருந்தார்.

கிணற்றுக்குள் ஸ்டீபன்
கிணற்றுக்குள் ஸ்டீபன்

உடனடியாக அர்ச்சகர் அருகில் உள்ள வீட்டில் சென்று விபரத்தைக் கூறினர். ஒவ்வொருவராகத் தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள பொதுக்கள் கிணறின் அருகில் திரண்டுவிட்டனர். இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. புதுக்கடை போலீஸாரும் குழித்துறை தீயணைப்புத் துறையினரும் அங்கு சென்றனர்.

தீயணைப்புத் துறையினர் வலையைக் கட்டி இளைஞரை பாதுகாப்பாக மேலே தூக்கினர். கிணற்றில் இருந்து வெளியே வந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஸ்டீபன் (34) என்றும். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலையில் கனவு கண்டதாகவும். அதில் தன்னை மூன்று பேய்கள் துரத்தியதுபோல இருந்தது என்றும், கண் விழித்துப்பார்த்தால் நான் கிணற்றுக்குள் கிடந்தேன் எனவும் கூறி போலீஸாருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

பேய் துரத்தியதாக கூறும் ஸ்டீபன்
பேய் துரத்தியதாக கூறும் ஸ்டீபன்

இரும்பு கிரில் மூலம் மூடிவைக்கப்பட்டிருந்த கிணற்றை திறந்துவிட்டுதான் அவர் குதித்திருக்க வேண்டும். அப்படி இருந்தும் அவர் உடலில் சிறு காயம்கூட இல்லை. ஏற்கெனவே நாகதேவி கோவில் கிணற்றுக்குள் இதற்கு முன்பு சிலருக்கு புதையல் கிடைத்ததாகத் தகவல் பரவியிருந்தது. எனவே, புதையல் தேடும் ஆசையில் இரவில் அவர் கிணறுக்குள் குதித்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.