Published:Updated:

`திருச்சியில் வீடியோ காலால் ரயிலில் தவறவிட்ட ரூ. 2,50,000!' - கரூரில் மீட்டு ஒப்படைத்த இளைஞர்கள்

ரயிலில் 2,50,000 ரூபாய் பணத்தை வைத்துவிட்டு, ரயிலை தவறவிட்ட நெய்வேலி என்.எல்.சி ஊழியருக்காக, குளித்தலை, கரூர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், போலீஸாரோடு சேர்ந்து பணத்தை மீட்டுக் கொடுத்து, அந்த ஊழியரை நெகிழ்ச்சியடையச் செய்திருக்கிறார்கள்.

கரூர் ரயில்வே நிலையத்தில் தயானந்தன்
கரூர் ரயில்வே நிலையத்தில் தயானந்தன்

மங்களூரைச் சேர்ந்தவர் தயானந்தன். இவர் நெய்வேலி என்.எல்.சி-யில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது ஊருக்கு பையில் 2,50,000 ரூபாயோடு பயணித்திருக்கிறார். இரவு 9 மணிக்கு நெய்வேலியிலிருந்து மங்களூர் செல்லும் ரயிலில் சென்றிருக்கிறார். திருச்சி சந்திப்பில் இறங்கிய அவர், மங்களூரில் இருக்கும் தன் மனைவிக்கு வீடியோ கால் செய்து பேசியிருக்கிறார். அப்போது, எதிர்பாராத நேரத்தில் மங்களூர் அதிவிரைவு ரயில் திருச்சி சந்திப்பிலிருந்து புறப்பட்டுவிட்டதால், பதற்றமடைந்திருக்கிறார் தயானந்தன்.

தயானந்தன் அடையாள அட்டை மற்றும் ரயில் டிக்கெட்
தயானந்தன் அடையாள அட்டை மற்றும் ரயில் டிக்கெட்
Vikatan

உடனே, வெளியே வந்த அவர் வாடகை காரில் கரூர் நோக்கி புறப்பட்டார். தன் மனைவிக்கு போன் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு பதற்றமான தயானந்தனின் மனைவி, தனக்குத் தெரிந்த ரயில்வே போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். தன் கணவர் கொடுத்த தகவல்படி, இரண்டாவது பெட்டியில் பையை வைத்துள்ளதாக கூடுதல் தகவலையும் சொல்லியிருக்கிறார். அந்த போலீஸ், கரூர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தந்திருக்கிறார். இதற்கிடையில், தயானந்தன் வந்த காரின் ஓட்டுநர் மதிவாணன் குளித்தலைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவர் குளித்தலையில் உள்ள தமிழ்நாடு இளைஞர் கட்சியின் குளித்தலை நகரச் செயலாளர் கடம்பை பிரபுவுக்கு தகவல் அளித்திருக்கிறார்.

அவரும், அவரது நண்பர் கணேஷும் குளித்தலை சந்திப்புக்குச் சென்றபோது, அங்கு ரயில் நிற்காமல் கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இருந்தாலும், இரண்டாவது பெட்டியை கவனித்த கடம்பை பிரபுக்கு அங்கு பை இல்லாமல் இருப்பது தெரியவந்தது. ஆனால், மூன்றாவது பெட்டியில் தயானந்தன் பணப்பை தொங்கியிருப்பதைப் பார்த்த அவர், பதற்றத்தில் தயானந்தன் பெட்டியை மாற்றிச் சொல்லியிருப்பது தெரியவந்தது. உடனே அந்தத் தகவலை குளித்தலை நகரச் செயலாளர் கடம்பை பிரபு, அவர் சார்ந்த அமைப்பின் மாநில துணைச் செயலாளர் முகமது அலியிடம் தெரிவித்துள்ளார். அதை முகமது அலி, கரூர் நகரச் செயலாளர் லோகேஷுக்குத் தெரிவிக்க, லோகேஷ் தன் நண்பர் கார்த்திக்கோடு உடனடியாக கரூர் ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கு உள்ள ரயில்வே காவல் அதிகாரிகளுக்கு தகவலைச் சொல்லியிருக்கிறார். அவர்கள் உதவியுடன் இரவு 11.30-க்கு கரூருக்கு வருகை தந்த மங்களூர் அதிவிரைவு ரயிலில் மாட்டி வைக்கப்பட்டிருந்த தயானந்தனின் பணப்பை பத்திரமாக மீட்கப்பட்டது.

கடம்பை பிரபு மற்றும் நண்பர்கள்
கடம்பை பிரபு மற்றும் நண்பர்கள்

கரூருக்கு வந்த தயானந்தனிடம் விவரங்கள் சரிபார்க்கப்பட்டபின், அந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, திருச்சியிலிருந்து கரூர் வரைக்கும் 75 கிலோமீட்டர் தூரத்தை பெரும்தவிப்போடு கடந்து வந்த தயானந்தனுக்கு, பணம் பத்திரமாக கிடைத்தது பெரும் மகிழ்வைத் தந்தது. இதற்காக மெனக்கெட்ட தான் வந்த கார் டிரைவர் மதிவாணன், கடம்பை பிரபு, முகமது அலி, லோகேஷ், கார்த்திக், கரூர் ரயிவே போலீஸார் என அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். பின்னர் மாற்று ரயில் மூலம் மங்களூர் புறப்பட்டுச் சென்றார்.

கடம்பை பிரபுவிடம் பேசினோம், ``மதிவாணன் சார் எங்ககிட்ட சொன்னப்ப மணி இரவு ஒன்பதரை. அந்த ரயில் குளித்தலையில் நிக்கும்னு பறந்துகிட்டு போனோம். ஆனா, அதிவிரைவு வண்டிங்கிறதால, நிக்காம போயிட்டு. ஆனால், ரயில் நிக்காம போனாலும், தயானந்தன் சொன்னபடி அவரது பணப்பை இரண்டாவது பெட்டியில் இல்லை, மூன்றாவது பெட்டியில்தான் மாட்டப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டோம். உடனே, தாமதிக்காம எங்க மாநில தலைமை மூலமா, எங்க கரூர் நகர பொறுப்பாளர் லோகேஷுக்குத் தகவல் தெரிவித்தோம்.

கடம்பை பிரபு
கடம்பை பிரபு

அவர் மூலமா கரூர் ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ரயிலில் கூட்டம் நிறைய இருந்ததால், தயானந்தனின் பணப்பையை யாரும் எடுக்கவில்லை. கூட்டம் குறைவாக இருந்திருந்தால், அவரது பணப்பை எளிதாக கொள்ளை போயிருக்கும். ஏதோ ஒரு நல்ல விஷயத்தைச் செய்த திருப்தி ஏற்பட்டிருக்கு" என்றார் மகிழ்ச்சியாக!