Published:Updated:

`வயசும் தூரமும் பெருசில்லை!’ - மதுரை டு கும்பகோணம்... தாயைக் காண 250 கி.மீ சைக்கிள் பயணம் செய்த மகன்

அம்மாவுடன் ஜெயகாந்தன்
அம்மாவுடன் ஜெயகாந்தன்

என்மீது அம்மாவுக்கு தனி பிரியம் அவர்மீது நானும் உசுரையே வச்சிருக்கேன். தாராசுரம் செல்ல வேண்டும் என மனது கிடந்து துடித்தது. உடனே, சாப்பிட தயிர் சாதம் தயார்செய்து எடுத்துக்கொண்டு 5 லிட்டர் தண்ணீர், 4 லிட்டர் நீர் மோர் எடுத்துக்கொண்டு, என்னுடைய சைக்கிளிலேயே கிளம்பிவிட்டேன்.

மதுரையைச் சேர்ந்த 58 வயதான ஒருவர், கும்பகோணத்தில் உள்ள 92 வயதான தன் அம்மாவை பார்ப்பதற்காக சைக்கிளிலேயே கிளம்பி வந்ததுடன், கிட்டத்தட்ட 40 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு, தன் அம்மாவை வந்து பார்த்திருக்கிறார். `கொரோனா ஊரடங்கால் என் அம்மா எப்படி கஷ்டப்படுகிறாரோ என தவித்தேன். அவரைப் பார்த்த பிறகே நிம்மதியடைந்தேன்’ என கூறும் அவரின் செயல், அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைக்கிளில் பயணம் செல்லும் ஜெயகாந்தன்
சைக்கிளில் பயணம் செல்லும் ஜெயகாந்தன்

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர், ஜெயகாந்தன் (வயது 58). இவருடைய மனைவி லெட்சுமி. இவர்களுக்கு இரண்டு பெண், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள். மூவருமே பட்டதாரிகள். கும்பகோணத்தில் நெசவுத் தொழில் செய்துவந்த ஜெயகாந்தன், போதிய வருமானம் இல்லாததால் தனது குடும்பத்தினருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். கடந்த நான்கு வருடங்களாக மதுரையில் வசிக்கும் அவர், ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார்.

இந்த நிலையில், ஜெயகாந்தனின் அம்மா சின்னம்மாள் என்பவருக்கு 92 வயதாகிறது. இவர், தாராசுரத்திலேயே வசித்து வருகிறார். மாதம் ஒரு முறை மதுரையிலிருந்து வந்து தன் அம்மாவுக்கு வேண்டியதையும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு, சில தினங்கள் அம்மாவுடன் இருந்துவிட்டு செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜெயகாந்தன்.

மகன் ஜெயகாந்தன்
மகன் ஜெயகாந்தன்

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கால் போக்குவரத்து முடங்கியது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாதம் தன் அம்மா சின்னம்மாளை காண்பதற்கு செல்ல முடியாமல் தவித்திருக்கிறார். உணவு உள்ளிட்டவை கிடைக்காமல் அம்மா என்ன செய்துகொண்டிருக்கிறாரோ என தன் மனைவியிடம் உருகியிருக்கிறார்.

இதையடுத்து, அம்மாவை சந்தித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்த ஜெயகாந்தன், மதுரையிலிருந்து சைக்கிளிலேயே கும்பகோணத்திற்குக் கிளம்பியிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் தடுக்க, `அம்மா அங்க எப்படி இருக்காங்களோ தெரியலை நான் போயே ஆக வேண்டும்’ எனக் கூறிவிட்டு, கடந்த 16 -ம் தேதி அதிகாலை கிளம்பியவர் 17 -ம் தேதி இரவு 10 மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்து, தன் அம்மா முகத்தைப் பார்த்த பிறகே நிம்மதியாகியிருக்கிறார்.

அம்மாவுடன்
அம்மாவுடன்

இதுகுறித்து ஜெயகாந்தனிடம் பேசினோம், ``92 வயசு ஆவதால அம்மாவால் தனியாக எங்கும் செல்ல முடியாது. மாதம் ஒரு முறை வந்து அவரைப் பார்த்துவிட்டு, பொருள்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு செல்வேன். ஊரடங்கு அமலில் இருப்பதால், இந்த மாதம் கிளம்ப முடியவில்லை. அவரிடம் காசு இருந்தாலும் எப்படி பொருள்கள் வாங்குவார்... சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்... அவரை தவிக்க வைத்துவிட்டோமே என நினைக்க, என்னை அறியாமல் கண்கள் கலங்கின.

என் அண்ணன், உறவினர்கள், பேரப்பிள்ளைகள் எனப் பலரும் கும்பகோணத்தில் இருக்காங்க. ஆனா, என்மீது அம்மாவுக்கு தனி பிரியம். அவர்மீது நான் உசுரையே வச்சிருக்கேன். எப்படியாவது தாராசுரம் செல்ல வேண்டும் என மனது கிடந்து துடித்தது. உடனே சாப்பிட தயிர் சாதம் தயார் செய்து எடுத்துக்கொண்டு, 5 லிட்டர் தண்ணீர், 4 லிட்டர் நீர் மோர் எடுத்துக்கொண்டு என்னுடைய சைக்கிளிலேயே கிளம்பிவிட்டேன்.

ஊர் திரும்ப முடியாமல் சிக்கிய மகன்; ஸ்கூட்டரில் 1,400 கி.மீ! -நெகிழவைத்த தாயின் பாசப் பயணம்

என் மனைவியும் பிள்ளைகளும், 'இந்த நேரத்துல ரிஸ்க் எடுக்குறீங்களே...' என கேட்க, 'போகும் வழியில் அடிக்கடி போன் செய்கிறேன்; எனக்கு எதுவும் ஆகாது' என சமாதானம் செய்து விட்டு கிளம்பினேன். சொன்னதுபோலவே இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என் பொண்ணுங்ககிட்ட போன் செய்து அப்பா பத்திரமா போய்கிட்டு இருக்கேன் என தகவல் சொல்வேன். திருச்சி-புதுக்கோட்டைக்கு இடையில் செக்போஸ்ட் ஒன்றில் என்னை மறித்த போலீஸார், இந்த நேரத்தில் எங்க போறீங்க என கேட்டனர்.

நான் விவரத்தைக் கூறியதும், பணியில் இருந்த பெண் எஸ்.ஐ ஒருவர் நெகிழ்ந்து, 'அம்மாவுக்காக இந்த வயசுலேயும் உருகுறீங்களே, உங்க அம்மா கொடுத்துவைத்தவர்' எனக் கூறிவிட்டு, 'இந்த நேரத்தில் போகாதீங்க காலையில் போங்க' என்றதுடன் எனக்கு சாப்பாடும், தங்குவதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார். நான் தயங்க, 'என்னை உங்க பொண்ணு மாதிரி நினைச்சுகங்க' என்று அன்பு காட்டினார்.

சைக்கிள்
சைக்கிள்

''கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தூரத்தை 40 மணி நேரத்தில் கடந்து தாரசுரத்தை அடைந்து, அம்மாவின் முகத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதியே வந்தது. ''எப்படிடா வந்த'' என அம்மா கேட்க, ''சைக்கிள்லேயே வந்துட்டேன்ம்மா'' என்ற என் முகத்தை வருடிக் கொடுத்து கொஞ்சினார். எனக்கு எத்தனை வயசானாலும் எனக்கு அவர் அம்மா, அவருக்கு நான் பிள்ளை. இந்தப் பாசத்திற்கு முன்னால் வயதும் தூரமும் பெருசா தெரியலை. ஏம்மா தனியா கிடந்து கஷ்டப்படுற எங்களோட வந்துடுன்னு கேட்டா, 'அப்பா வாழ்ந்த இடம் இங்கு இருக்கத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு, நிம்மதியும் கிடைக்குது' என்கிறார். மூன்று நாள் அம்மாவோடயே இருந்துவிட்டு, அப்புறம்தான் மதுரைக்கு என் பிள்ளைகளை பார்க்கப் போகணும்” என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு