Published:Updated:

மேனேஜர் டு துப்புரவுப் பணி! - கோவை எம்.பி.ஏ பட்டதாரியின் உறவுப் பாசம்

எம்.பி.ஏ பட்டதாரி சையத்
எம்.பி.ஏ பட்டதாரி சையத்

கோவை மாநகராட்சி துப்புரவுப் பணிக்காக எம்.பி.ஏ பட்டதாரி ஒருவர், தனது மேனேஜர் பதவியைத் துறந்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 549 துப்புரவுப் பணியிடங்கள் (நிரந்தரப் பணி) காலியாக இருந்தன. இந்தப் பணியிடங்களுக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த நவம்பர் மாதம் நடந்தது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

அப்போதுதான், பி.இ, பி.டெக், பி.எஸ்சி, எம்.எஸ்.சி படித்த பட்டதாரிகளும் இந்தப் பணிக்கு விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்பதுதான் இந்தப் பணிக்காக அறிவிக்கப்பட்டிருந்த தகுதி.

இதனிடையே, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு, பணிநியமன ஆணையை வழங்கினார்.

பட்டதாரிகள் விண்ணப்பம்
பட்டதாரிகள் விண்ணப்பம்

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், பல பட்டாதாரிகளுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.

அதில், எம்.எஸ்சி மாணவி மோனிகா என்பவர் துப்புரவுப் பணியில் சேர்ந்த தகவல் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தில் மேனேஜராகப் பணிபுரிந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரியான சையத் என்பவர் அந்தப் பணியைத் துறந்துவிட்டு, துப்புரவுப் பணியைக் கையில் எடுத்துள்ளார்.

மோனிகா
மோனிகா

இதுகுறித்து சையத்திடம் பேசினோம், “என்னோட சொந்த ஊர் கோவைதான். ஈரோட்ல எம்.பி.ஏ படிச்சேன். ஹைதராபாத்ல ஒரு டேட்டா என்ட்ரி கம்பெனில மேனேஜரா இருந்தேன். கிட்டத்தட்ட 10 வருஷம் அங்க வேலை பார்த்தேன்.

கோவை மாநகராட்சி துப்புரவுப் பணியில் எம்.எஸ்ஸி மாணவி..!

சின்ன வயசுல இருந்தே எனக்கு கவர்ன்மென்ட் ஜாப்ல சேரணும்னு ஆசை. அதே மாதிரி, ஹைதராபாத்ல இருந்ததால, குடும்பத்தையும் நிறைய மிஸ் பண்ணேன். இந்த வேலை மூலமா என்னோட ரெண்டு ஆசையும் ஒண்ணா நிறைவேறிச்சு. எல்லா வேலையுமே நல்ல வேலைதான். நம்ம அணுகுற விதம்தான் எல்லாமே. இந்த நாலு நாள்கள் பணி எனக்கு மன நிறைவக் கொடுத்துருக்கு. ஒவ்வொரு நோய் வரப்பவும், டாக்டர்கிட்ட பல ஆயிரங்கள் செலவு பண்றோம்.

அதத்தடுக்கிற மகத்தான வேலையைப் பார்க்கறதுல எனக்கு பெருமைதான். தினமும் இத நினைச்சுட்டுத்தான் வேலைக்குப் போறேன். ஹைதராபாத்ல இருக்கறப்ப மாசத்துல 4 நாள்தான் என் குடும்பத்தினர பார்க்க முடியும். இப்போ அவங்களோட தினமும் டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுது. பணம் காசு இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும்.

சையது
சையது

அதவிட முக்கியம் நம் உறவுங்களோட ஒண்ணா இருக்கிறது. அந்த விதத்துல எனக்கு ரொம்ப சந்தோஷம். எந்த வேலையா இருந்தாலும், நம்ம திறமையைக் காட்டி மேல வந்தரலாம். அப்படி இந்த வேலைலயும் நான் ஜெயிப்பேன் என்றார்” நம்பிக்கையுடன்...

அடுத்த கட்டுரைக்கு