Published:Updated:

பொதுப்பாதையில் இடையூறு; பாதுகாப்பு தர மறுத்த காவல்துறை!- இறுதிச்சடங்குக்காக நீதிமன்றம் சென்ற கிராமம்

பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்வது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

சிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் நவம்பர் 20-ம் தேதி காண்டீபன் என்பவர் மரணமடைந்தார். இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கான மயானம் ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு வழியாக மயானத்தை அடையலாம். மேலத்தெரு வழியாக ஒரு பாதையும், அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை வழியாக ஒரு பாதையாகவும் செல்லலாம். அந்தப் பகுதியில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்குச் செல்லும்போது அடிக்கடி இடையூறு செய்துவந்துள்ளனர். வழக்கமாக போலீஸார் பாதுகாப்புடன்தான் இறுதிச்சடங்குகள் நடக்கும். ஆனால், இந்த முறை போலீஸார் பாதுகாப்பு தர மறுத்துள்ளனர். இதையடுத்து, காண்டீபனின் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. உடலைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து பாதுகாத்துள்ளனர். இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மரணம்
மரணம்

சிவகங்கை மாவட்டம் மணலூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் காண்டீபனின் உடலை, பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவன். எனது உறவினர் காண்டீபன் நவம்பர் 20-ம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அகரம் ஜோதிபுரம் பிரதான சாலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல இயலாத நிலை உள்ளது. மணலூர் கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பொதுப் பாதையை பயன்படுத்துவதில், பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்துக்கு அகரம் ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

பொதுப்பாதையில் இடையூறு; பாதுகாப்பு தர மறுத்த காவல்துறை!- இறுதிச்சடங்குக்காக நீதிமன்றம் சென்ற கிராமம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்னைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்தார். உடலை மேலத் தெரு வழியாக மயானத்துக்குக் கொண்டுசெல்ல அனுமதி அளித்தும், ஏற்கெனவே இது சம்பந்தமாக நிலுவையில் உள்ள பொதுநல வழக்குடன் இந்த மனுவை இணைத்து பட்டியலிடவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.