Published:Updated:

'அவரிடம் நடுநிலை இல்லை!'- ஒழுங்காற்றுக் குழு தலைவருக்கு எதிராகக் கொந்தளிக்கும் காவிரி மீட்புக் குழு

`மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில், காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவரின் பேச்சுக்கு ஏன் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?'

மணியரசன்
மணியரசன்

கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் சட்ட விரோதமாக அணை கட்ட துடிக்கிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார், இதற்குத் துணைபோகும் விதமாகக் கருத்து தெரிவித்துள்ளார். இதை ஏன் தமிழ்நாடு அரசு கண்டிக்கவில்லை என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கேள்வி எழுப்புகிறார்.

காவிரி
காவிரி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், "திருச்சியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்திற்குத் தலைமை வகித்த இதன் தலைவர் நவீன்குமார், நடுநிலையுடன் பேசவில்லை. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரிநீரை கர்நாடகம் தராததை நவீன்குமார் கண்டிக்கவில்லை. மாறாக, கர்நாடகம் வெள்ளக் காலங்களில் தேக்க முடியாமல் திறந்துவிட்ட தண்ணீரை தமிழ்நாடு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மேலும், மேக்கே தாட்டூ அணை கட்டுவது குறித்து கருத்து தெரிவித்த நவீன்குமார், 'காவிரி மேலாண்மை ஆணையம் தடையில்லாச் சான்று கொடுத்தால்தான், மேக்கே தாட்டூவில் அணை கட்ட முடியும். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டத்தில் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து, தகுதி அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என நவீன்குமார் தெரிவித்தார். இவரது கருத்துக்கு தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். ஏன் தமிழக ஆட்சியாளர்கள் வாய் திறக்கவில்லை.

நவீன்குமார்
நவீன்குமார்

மத்திய நீர்வளத்துறை, மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகிய அனைத்துமே தமிழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. மேக்கே தாட்டூ அணைக்கான செயல்திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை, கர்நாடகாவிடம் தாமாகவே கேட்டுப் பெறுகிறது. தற்போது, ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமாரும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதையெல்லாம் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தால், தமிழகம் பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரும்" என்று தெரிவித்தார்.