Published:Updated:

`மர்மமாக இறக்கும் கால்நடைகள்; பரவும் காய்ச்சல்!' - பீதியில் மஞ்சக்கரை கிராம மக்கள்

புதுக்கோட்டை அருகே மஞ்சக்கரையில் மர்மமான முறையில் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் இறந்துள்ளதாலும், கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாலும், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இறந்து கிடக்கும் கால்நடைகள்
இறந்து கிடக்கும் கால்நடைகள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மஞ்சக்கரை வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் மர்மமான முறையில் இறந்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியவர் ஒருவர் மர்மக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார்.

இறந்து கிடக்கும் கால் நடைகள்
இறந்து கிடக்கும் கால் நடைகள்

சிலருக்குக் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், தங்கள் பகுதியில் உள்ள குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரிலிருந்துதான் தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதுபற்றி மஞ்சக்கரை மக்கள் கூறும்போது, ``எங்க ஊருக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் அரசு செய்துகொடுக்கவில்லை. முறையான சாலை வசதி இல்லை. தெருவிளக்குகள் இல்லை. மண் சாலை என்பதால், மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியாக மாறி, மக்கள் யாரும் நடந்துகூட செல்ல முடியாத நிலைதான் உள்ளது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், பெரியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குடியிருப்புகளுக்கு நடுவே ஆங்காங்கே சிறு, சிறு குட்டைகள் உள்ளன.

மாசடைந்த குட்டை
மாசடைந்த குட்டை

நீண்ட நாள்களாகவே இவற்றில் தண்ணீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையிலேயே இருக்கிறது. தண்ணீர் செல்வதற்குச் சரியான வரத்துக் கால்வாய்கள் இல்லை. அதனால், சிறிய மழை பெய்தாலும், குட்டைகள் நிரம்பி மழைநீருடன், சாக்கடை நீர் வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. பலருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே எங்கள் ஊரில் உள்ள ஆடு, மாடுகள், கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. குறிப்பாக, ஏராளமான நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

டெங்கு காய்ச்சல்.. நம்பிக்கைகளும் உண்மைகளும்! #VikatanPhotoCards

நாய்களின் இறப்புதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கு. குட்டைகளில் உள்ள நீரை அகற்றக்கோரியும், சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்நடைத்துறை சார்பில் பெயரளவில் மட்டும் முகாம் நடந்தது. கால்நடைகளுக்கும் ஆம்புலன்ஸ் திட்டம் நடைமுறையில் இருப்பதாக, குறைதீர் கூட்டங்களில் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பயன்பாட்டில் எதுவும் இல்லை" என்றனர்.

இறந்து கிடக்கும் ஆடு
இறந்து கிடக்கும் ஆடு

இதுபற்றி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியரிடம் பேசினோம். ``இதுபற்றி தகவல் வந்தவுடன் முதலில் கால்நடை மருத்துவக்குழு அனுப்பப்பட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சுவாசக் கோளாறு காரணமாகக் கன்று ஒன்று இறந்துள்ளது. ஆடுகள், நாய்கள் இறப்பு குறித்து, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு நோய் கண்டறியப்படும். அதற்கு முன்பாகவே, கால்நடைத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பிலான பணிகளும் நடைபெறும்" என்றார்.