Published:Updated:

ஓமன்: `மகளால் உயிர் பிழைத்தேன்!’ - மன்னார்குடி இன்ஜினீயரின் கொரோனா அனுபவம்

``நான் எப்ப அழுவுறோனோ, அப்ப நீங்க அழுதுக்கலாம். அதுவரைக்கும் என் நம்பிக்கையைக் குலைச்சிடாதீங்க'னு நொந்துபோய் பேசினேன். ஆனால், நானே மனசுக்குள் நம்பிக்கையை இழக்க ஆரம்பிச்சிட்டேன். வாழ்வா, சாவாங்கற போராட்டம்.’’

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், எளிதாக மீண்டு வருகிறார்கள். ஆனால், ஒரு சிலருக்கோ இது உயிர்வதையாக, மரணப் போராட்டமாகவே அமைந்துவிடுகிறது. இதுபோன்றவர்கள் உயிர் மீண்டு வந்த அனுபவங்கள், மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை டானிக். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் மஸ்கட் அருகே உள்ள ஆயில் கேஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் குடும்பமோ மன்னார்குடியில் வசிக்கிறது. இந்நிலையில்தான், கொரோனா தொற்றின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகி, கடும் துயரங்களை சந்திருத்திருக்கிறார். கடல் கடந்து பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இவரின் குடும்பத்தினரோ, ஒவ்வொரு நிமிடமும், கனத்த இதயத்தோடு கண்ணீரில் தவித்திருக்கிறார்கள். கணேஷின் வைராக்கியமும் தன்னம்பிக்கையும்தான் இவரை கொரோனாவிலிருந்து விடுபட வைத்து, உற்சாகமாகப் பேச வைத்திருக்கிறது.

மன்னார்குடியில் கணேஷ் குடும்பம்
மன்னார்குடியில் கணேஷ் குடும்பம்

இதுகுறித்து நம்மிடம் கணேஷ் போனில் பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ``குடும்பத்தைப் பிரிஞ்சி வாழ்றதே ரொம்ப வேதனையானது. ஆனாலும், குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சு, மனசை தேத்திக்கிட்டுதான், ஓமன்ல வேலைபார்த்துக்கிட்டு இருக்கேன். என் மனைவி, மகன், மகள் எல்லாரும் மன்னார்குடியில் இருக்காங்க. அவங்களும் எப்பவும் என் நினைப்பாவேதான் இருப்பாங்க. எனக்கு சாதாரண காய்ச்சல்னு தெரிஞ்சாலே துடிச்சிப் போயிடுவாங்க. கொரோனாவால் நான் சந்திச்ச ரணங்கள், அவங்களை நிலைகுலைய வச்சிடுச்சு. நான் மறுபடியும் உயிர் பிழைச்சு வருவேங்கற நம்பிக்கையையே அவங்க இழக்க ஆரம்பிச்சிட்டாங்க. என் உடல்ல ஏற்பட்ட ரணங்கள், எனக்கு ஏதோ விபரீதமாக நடக்கப்போகுதுங்கிற, உயிர் பயத்தை ஏற்படுத்திடுச்சு. எது நடந்தாலும் தயார்ங்கற மனநிலைக்குப் போயிட்டேன். இந்த நேரத்துலதான், என் மகள் சொன்ன ஒரு வார்த்தை என்னை உலுக்கி எடுத்து, மன உறுதியோடு போராட வைத்தது” எனத் தற்போது உற்சாகமாகப் பேசும் கணேஷ், அந்தத் துயர தருணங்களை விவரித்தார்.

கொரோனா: `எல்லோரையும் சிரிக்கச் சொல்வோம்; நாங்க அதை மறந்துட்டோம்!’ - கலங்கும் தஞ்சை கேமராமேன்

``ஓமன் நாட்டில் உள்ள ஹார்ட் அல் மில்லா என்ற பகுதியில்தான் இப்ப நான் வசிச்சிக்கிட்டு இருக்கேன். வேலை சம்பந்தமாக, நாலு நாள்கள் மஸ்கட் போயிட்டு வந்தேன். அங்க சிலருக்கு கொரோனானு தெரிஞ்சதும், நான் டெஸ்ட் எடுத்துக்கிட்டேன். கொரோனா பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்துச்சு. உடனடியாக என் மனைவிக்கு தெரியப்படுத்திட்டு, என் உறவினர் ஒருத்தர்க்கிட்ட இதுக்கு என்ன பண்ணலாம்னு ஆலோசனை கேட்டேன். பாரம்பர்ய கை வைத்தியம் எடுத்துக்கிட்டால்தான், இதை உடனடியா முழுமையாகக் குணப்படுத்த முடியும்னு சொன்னார். ஓமன் அரசாங்கம் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குது. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும், வீட்லயே இருந்து சிகிச்சை எடுத்துக்குறதுதான் பல வகைகள்லயும் எனக்கு சரின்னு பட்டுச்சு.

கொரோனாவிலிருந்து மீண்ட கணேஷ்
கொரோனாவிலிருந்து மீண்ட கணேஷ்

நான் நினைச்ச நேரத்துல, குடும்பத்துக்கு போன்ல பேசலாம். நம்ம விருப்பப்படி பாரம்பர்ய மருந்துகளை சாப்பிட்டுக்கலாம்னு முடிவெடுத்து வீட்டுக்குள்ளேயே இருந்தேன். ஆரம்பத்துல கடுமையான காய்ச்சல் மட்டும்தான் இருந்துச்சு. அடுத்தடுத்து, பயங்கர உடம்பு வலி, மூச்சுத்திணறல், தொண்டை வலி, கடுமையான இருமல் எல்லாம் சேர்ந்து என் உடல் முழுக்க ரணமாயிடுச்சு. 5 நாள்கள் ஒரு பருக்கைகூட சாப்பிட முடியலை. ஒரு சொட்டு தண்ணீர் குடிச்சாகூட வாந்தி வந்துடும். வாழ்வா, சாவாங்கிற போராட்டம் என்னோட கம்பெனியில் இருந்து, தினமும் சாப்பாடு, பழங்கள், பாதாம், பிஸ்தா, எல்லாம் கொண்டு வந்து வீட்டுக்கு வாசலுக்கு வெளியில வச்சிட்டுப் போயிடுவாங்க. ஆனால், எதையுமே சாப்பிட முடியாது. மூச்சுத்திணறலும் உடம்பு வலியும் அதிகமாயிடுச்சி. அரை நிமிஷம் கூட, என் மனைவிகிட்டயும் பிள்ளைங்களோடும் போன்ல பேச முடியலை. சோர்ந்துபோய் போனை வச்சிடுவேன். அவங்க கதறி அழ ஆரம்பிச்சிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`நான் எப்ப அழுவுறோனோ, அப்ப நீங்க அழுதுக்கலாம். அதுவரைக்கும் என் நம்பிக்கையைக் குலைச்சிடாதீங்க’ன்னு நொந்துபோய் பேசினேன். ஆனால், நானே மனசுக்குள் நம்பிக்கையை இழக்க ஆரம்பிச்சிட்டேன். படுத்த படுக்கை ஆயிட்டேன். எழுந்திரிச்சு 1 அடி கூட நடக்க முடியலை. ஆவி பிடிக்கிற மிஷின்கிட்ட போகுறதுக்கே தரையில ஊர்ந்துதான் போவேன். வெந்நீரை கொதிக்க வச்சு, இஞ்சி, பூண்டு, மிளகு, ஜீரகம், எலுமிச்சைபழம், மஞ்சள் போட்டு, தினமும் மூணு வேளை ஆவிப்பிடிச்சேன். மூச்சுத்திணறல் குறையும். ஆனால், உடல் ரணம் குறையவே இல்லை. உடம்பு மெலிய ஆரம்பிச்சிடுச்சு. குரலும் மாறிடுச்சு. வீடியோ கால்ல என்னைப் பார்த்து என் மகள் கதறிட்டாள். `அப்பா, உங்களை விட்டால் எங்களுக்கு வேற யாருப்பா இருக்கானு அவ அழுத அழுகை என்னை நிலையகுலைய வச்சிடுச்சு. அவளுக்கு 12 வயசாகுது. என்னை இந்த நிலையில பார்த்ததும் அவளுக்கு உடம்பு ரொம்ப சீரியஸாகி, மன்னார்குடியில் ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க.

`கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுக்கு மேலயும் நாம இப்படியே இருக்கக்கூடாது. என் மகள் உயிர் பிழைக்கணும். நமக்கு ஏதாவது ஒண்ணுனா, நம்ம குடும்பம் என்னாகும்னு பதறிட்டேன். அதுக்காகவாவது நாம எழுந்து, பழையபடி நடமாடணும்னு, வைராக்கியமா எழுந்து நடமாட ஆரம்பிச்சேன். ஆவி பிடிக்கிறதை அதிகப்படுத்தினேன். வாந்தி வந்தாலும் பரவாயில்லைனு, வலுக்கட்டாயமாக, சாப்பாடு, பார்லி, முட்டை, பழங்கள்னு சாப்பிட ஆரம்பிச்சேன். வயிற்றுப்போக்கு, மூட்டுவலினு புது பிரச்னை. ஆனாலும், மன உறுதியை இழக்கலை. மனசு சோர்வடையாமல் இருக்க, 24 மணிநேரமும் இளையராஜா பாடல்கள் கேட்டுக்கிட்டே இருந்தேன்.

எங்கயிருந்து எனக்கு அந்தத் தன்னம்பிக்கை வந்துச்சுனே தெரியலை. படிப்படியாகக் குணமாக ஆரம்பிசக்சுது. இது எனக்கு மறுஜென்மம்னுதான் சொல்லணும். செத்து பிழைச்சிருக்கேன். கொரோனா என்னை நிர்மூலமாக்க பயங்கர முயற்சி செஞ்சது. அதிலிருந்து மீண்டு வர, நம்பிக்கைதான் முதல் மருந்து. நம்பிக்கைதான் உயிர். நம்பிக்கைதான் மூலதனம். தன்னம்பிக்கை இருந்தால், நிச்சயமாக இதிலிருந்து மீண்டு வரலாம். இதுக்கு நானே சிறந்த உதாரணம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு