Published:Updated:

`ஓடும் ரயிலில் உடைந்த கதவு!’- பெண் பயணிக்காக மயிலாடுதுறையில் நிறுத்தப்பட்ட ரயில்

மன்னார்குடியில் பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ரயில்
ரயில்

மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கி கோதி வரை வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று மதியம் 12.30 மணியளவில் மன்னார்குடியிலிருந்து கிளம்பியது. என்ஜினை அடுத்து இருக்கும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியின் சன்னல் (Emergency exit) இருக்கையில் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் நளாயினி(65) பயணித்துக்கொண்டிருந்தார். ரயில் பேரளம் தாண்டி சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவருக்கு அருகே இருந்த இரும்புக்கதவு கீழே விழுந்தது. இதில் நளாயினிக்குக் காயம் ஏற்பட்டது. அவரது இடது கை விரல்களிலிருந்து ரத்தம் அதிகளவு வெளியேறியத் தொடங்கியது.

ரயில் பணி
ரயில் பணி

இதற்கிடையில் ரயில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இரும்புக்கதவு விழுந்து பயணிக்கு அடிப்பட்டது தொடர்பாக மயிலாடுதுறை நிலைய கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்தினர். இதையடுத்து ரயில் நிலையத்தில் இருந்த மீனாட்சி மருத்துவமனையின் முதலுதவி மையத்திலிருக்கும் செவிலியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நளாயினிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதன்காரணமாக ரயில் புறப்படுவதில் சிறிது தாமதமானது. இதன்காரணமாக அங்கு பயணிகள் கூடினர் “ ஏன் தரமான கதவுகளைத் தயாரிக்க மாட்டீர்களா?” எனக் கேள்விகளை முன்வைத்தனர். ரயில் நிலைய ஊழியர்கள் பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு முதலுதவி சிகிச்சை செய்வதில் கவனம் செலுத்தினர்.

அடுத்தடுத்த ரயில்வே க்ராசிங்குகளுக்கும் ரயில் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். முதலுதவி முடிந்ததும் ரயில் மயிலாடுதுறை நிலையத்திலிருந்து கிளம்பியது. பயணி ஒருவருக்கு ஏற்பட்ட இடரைக் கருத்தில் கொண்டு அதை நிவர்த்தி செய்து உடனடியாகப் பணியாற்றிய ரயில்வே பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்தன.

நிறுத்தப்பட்ட ரயில்
நிறுத்தப்பட்ட ரயில்

விரைவு வண்டிகளில் இருக்கும் பழுதடைந்த சன்னல் கதவுகளை மாற்றவேண்டியதை ரயில்வே நிர்வாகம் கவனத்தில் கொள்ளவேண்டுவது அவசியமான ஒன்றாகும்.