Published:Updated:

மதுக்கூர் டு மன்னார்குடி: முடியாத பாலம் பணி; மூழ்கிய தற்காலிகப் பாதை! - துயரத்தில் 10 கிராம மக்கள்

அண்டமியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்தன.

பட்டுக்கோட்டை, மதுக்கூர் அருகே காட்டாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஆமைவேகத்தில் நடைபெற்றுவரும் நிலையில், புதிய பாலம் கட்டுவதற்காக பாலத்தின் அருகிலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையில் காட்டாற்றில் தண்ணீர் வருவது அதிகமாகி, மாற்றுப்பாதை மூழ்கியதால் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லக்கூடிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டதாக அப்பகுதி மக்கள் புலம்பிவருகின்றனர்.

காட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதை
காட்டாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிகப் பாதை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூலிருந்து அண்டமி வழியாக மன்னார்குடியை இணைப்பதற்கான மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில் அண்டமி என்ற ஊரை, கண்ணன் ஆறு என்கிற காட்டாறு கடந்து செல்கிறது. இதற்காக அண்டமியைக் கடந்து செல்வதற்காக பழைய உயர்மட்ட பாலம் ஒன்று இருந்தது. அதன் வழியாகவே அதைச் சுற்றியுள்ள கிராம மக்களும் பொதுமக்களும் மதுக்கூரிலிருந்து மன்னார்குடி பகுதிக்குச் சென்று வந்தனர்.

இந்த நிலையில் பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. இதையடுத்து பாலத்தின் அருகிலேயே பொதுமக்களும் வாகன் ஓட்டிகளும் செல்வதற்காக மாற்றுப்பாதை ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது பெய்துவரும் தொடர்மழையால் கண்ணன் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இதில் தற்காலிகப் பாதை முழுவதும் மூழ்கிவிட்டது. ஒரு சைக்கிள்கூட செல்ல முடியாத வகையில் தற்போது மாற்றுப்பாதையின் நிலை இருக்கிறது. இதனால் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்லவேண்டிய துயர நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலம் வரும், மக்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்பதைக் கருத்தில்கொண்டு பணியைத் திட்டமிட்டு தொடங்காமலும், பாலப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதுமே மக்கள் கடும் அவஸ்தைக்கு ஆளாவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் புலம்பிவருகின்றனர்.

தண்ணீரில் மூழ்கிய பாதை
தண்ணீரில் மூழ்கிய பாதை

இது குறித்து மதுக்கூர் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மதுக்கூரிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அண்டமி என்ற இடத்தில் கண்ணன் ஆறு என்கிற காட்டாறு கடந்து செல்லும் பகுதியில் பழைய பாலத்துக்கு பதிலாக புதிய உயர்மட்டப் பாலம் சுமார் 7.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுவருகிறது. பாலம் பணிகள் முடியும் வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அதன் அருகிலேயே மாற்றுப்பாதையும் அமைத்திருந்தனர். மண்டலக் கோட்டை, கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, பரவாக்கோட்டை, மேலநத்தம், உள்ளிட்ட சுமார் பத்து கிராமங்களை இணைக்கக்கூடிய பிரதான பாதையாக அந்தப் பாலம் இருந்துவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன் மதுக்கூர் மன்னார்குடியை இணைக்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது. இந்தநிலையில் அண்டமியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆரம்பம் முதலே பணிகள் ஆமை வேகத்தில் நடைப்பெற்றுவந்தன. பணியும். அதற்கான நிதியும் ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் தங்கள் பணி முடிந்துவிட்டதாகக் கருதி அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் பணிகள் குறித்த ஆய்வு உள்ளிட்டவற்றைச் செய்யவில்லை.

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு! - மன்னார்குடி அதிர்ச்சி

பொதுமக்கள் மாற்றுப்பாதையில் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. இதில் காட்டாறான கண்ணன் ஆற்றில் தண்ணீர் செல்லத் தொடங்கியது. இதில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை தண்ணீரில் மூழ்கியது. இதனால் மேலே குறிப்பிட்ட பத்து கிராமத்தினரும், மதுக்கூர் வழியாக மன்னார்குடிக்குச் செல்லும் பொதுமக்கள் எனப் பலரும் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

மாற்றுப்பாதை காட்டாற்றுத் தண்ணீரில் மூழ்கியதால் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்றைக்கு பெட்ரோல் விற்கிற விலையில் தேவையில்லாமல் செலவும் அதிகரிக்கிறது. `எப்ப சார் பாலம் வேலை முடியும்?’ என்று அதிகாரிகள்கிட்ட கேட்டா `இன்னும் குறைஞ்சது 60 நாளாவது ஆகும்’ என அலட்சியமாக பதில் சொல்றாங்க. இனிமேல்தான் மழைக்காலமே தொடங்கவிருக்கிறது. அதற்குள் இந்த நிலை என்றால் இனி வரும் மழைக்கு எங்களோட நிலைமை ரொம்பவே பரிதாபத்துக்குரியதாக இருக்கும் என்பதும் மட்டும் உண்மை” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர் அந்த மக்கள்.

ஆறு
ஆறு

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ``புதிய பாலத்தின் பணிகள் மந்தமாக நடக்கின்றன என்பது தவறான தகவல். கிட்டதட்ட 80 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன. மழைக் காலத்துக்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியதால் பாலத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாற்றுப்பாதையும் தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மண்ணைப் போட்டு தண்ணீரைத் தடுப்பதற்கான முயற்சியும் செய்தோம். பலனிக்கவில்லை. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து தரத்துடனும், அதே நேரத்தில் விரைந்தும் பாலப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு