Published:Updated:

`இனி நான் 3 வேளையும் அரிசி சாப்பாடு சாப்பிடுவேன்...’ - உதவிகளால் நெகிழ்ந்த மாரியப்பன்!

மாரியப்பன் தனது வீட்டில்...
மாரியப்பன் தனது வீட்டில்... ( நா.ராஜமுருகன் )

தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக கையோடு மாரியப்பனுக்கு புதிதாக தனிநபர் ரேஷன் கார்டு ஒன்று வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

``இந்த வயசுல எனக்கு அனுசரணையா யாரும் இல்லை. ரேஷன் கார்டைக்கூட ஏமாத்தி வாங்கிட்டுப்போயிட்டாங்க... பலநாள் வெறும் முருங்கைக்கீரையைச் சாப்பிட்டுக்கிட்டே பசியாத்திக்கிட்டேன்... தலைவலின்னு படுத்தாகூட, ஏன்னு கேட்க நாதியில்லாமக் கிடந்தேன். இப்போ முகமறியாத பலபேர், ஆதரவாவும், அனுசரணையாவும் பேசுறாங்க.... அரிசி, பருப்புன்னு வாங்கிக்கொட்டுத்துட்டுப் போறாங்க...”- கண் கலங்குகிறது மாரியப்பனுக்கு.

ரவி சொக்கலிங்கம் வழங்கிய உதவி
ரவி சொக்கலிங்கம் வழங்கிய உதவி
நா.ராஜமுருகன்

கடந்த ஜூன் 6-ம் தேதி `மூணு வேளையும் முருங்கைக்கீரைதான் சாப்பாடு!’ - துயரத்தில் தவிக்கும் 70 வயது மாரியப்பன்’ என்ற தலைப்பில் மாரியப்பனின் துயர நிலை குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையை வாசித்த பலர், மாரியப்பனுக்கு கரம் கொடுக்க, அரசும் மாரியப்பனை கண் கொண்டு பார்த்திருக்கிறது.

மாரியப்பன் குறித்த கட்டுரையை கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து வாசியுங்கள்.

`மூணு வேளையும் முருங்கைக்கீரைதான் சாப்பாடு!’ - துயரத்தில் தவிக்கும் 70 வயது மாரியப்பன்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தெற்கு அய்யம்பாளையம்தான், மாரியப்பனின் ஊர். சிதைந்த ஓலைக்குடிசை ஒன்றில் வசித்துவருகிறார். கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு அவரின் மனைவி மகேஸ்வரி மறைந்துவிட, அதன்பிறகு தனியாக பரிதவித்து வருகிறார்.

புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம்
புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம்

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது ரேஷன் கார்டை, ரேஷன் கடை ஊழியர்கள் வாங்கிச்சென்றனர். அதன்பிறகு, அவரிடம் திருப்பித்தரவில்லை. இதனால், ரேஷன் அரிசியோ, அரசின் உதவிகளையோ பெறமுடியவில்லை. கொரோனா ஊரடங்கில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் போக, பலநாள் மூன்று வேளையும் வெறும் முருங்கைக்கீரையை மட்டுமே சாப்பிட்டு பசியாற்றி வந்தார். அவரின் இந்த வேதனை நிறைந்த சூழலை விகடன் கட்டுரையில் காட்சிப்படுத்தியிருந்தோம்.

அந்தக் கட்டுரையை வாசித்த பலர், மாரியப்பனுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாரியப்பனை போனில் அழைத்துப் பேசினார். ``உங்களுக்கு யாருமில்லைன்னு கலங்கவேண்டாம். இனிமேல் நான்தான் உங்களுக்கு மகள்" என்று கூறியதோடு, தனது சம்பளத்திலிருந்து மாதாமாதம் மாரியப்பனுக்கு ரூ.1000 தர உறுதி கொடுத்தார். அதோடு, மாரியப்பன் முகவரியை வாங்கி, முதல் தவணையையும் மணியார்டர் மூலமாக அனுப்பி வைத்தார். கூடவே, ஒருமாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்களையும் அனுப்பி வைத்து, `இனி வயிறார சாப்பிடுங்க, அப்பா' என்று கூற, மாரியப்பன் கசிந்து உருகினார்.

ஜோதிமணி வழங்கிய உதவிகள்
ஜோதிமணி வழங்கிய உதவிகள்
நா.ராஜமுருகன்

மதுரையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் என்ற வாசகர், தனது நண்பர்களோடு சேர்ந்து 2,000 ரூபாய் அனுப்பிவைத்தார். துபாயில் வசிக்கும் நெல்லையைச் சேர்ந்த தமிழரான ரவி சொக்கலிங்கம், ஆசிரியை சாய்பிருந்தா என்பவர் மூலமாக இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகளை வழங்கினார். தவிர பண உதவியும் செய்தார்.

மாரியப்பன் குறித்த கட்டுரையை வாசித்த குளித்தலை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் கார்த்திகேயன் மாரியப்பன் வீட்டுக்கே நேரடியாகச் சென்று, இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைச் சாமான்களை வழங்கினார். அதோடு, பண உதவியும் செய்தார். `உங்க நிலை என்னை உருக்கிடுச்சுய்யா. நான் உங்களை காலம் முழுக்க மகனா இருந்து பாத்துக்கிறேன்' என்று கூறி, மாரியப்பனை கண்கலங்க வைத்தார். இது ஒருபுறமிருக்க, இரண்டு வருடங்களாக மாயமாக `மறைந்திருந்த' மாரியப்பனின் ரேஷன் கார்டு பிரச்னையையும் தீர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையைப் படித்த, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கடவூர் தாசில்தார் மைதிலியை அழைத்துப்பேச, வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்று விசாரணை செய்தார்கள்.

கார்த்திகேயன் செய்த உதவி
கார்த்திகேயன் செய்த உதவி
நா.ராஜமுருகன்

விசாரணையில் மாரியப்பனின் ரேஷன் கார்டு, அருணாச்சலம் என்பவரது குடும்ப கார்டாக மாற்றப்பட்டு, அவர்களால் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக, தெற்கு அய்யம்பாளையம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக, அந்த கார்டில் இருந்த மாரியப்பனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. மாரியப்பனின் ரேஷன் கார்டை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள், தவறு செய்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் வட்ட வழங்கல் அதிகாரிக்கு உத்தரவிட்டார் தாசில்தார். கையோடு மாரியப்பனுக்கு புதிதாக ரேஷன் கார்டு வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு, அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. ஓரிரு நாள்களில் மாரியப்பனுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.

கட்டுரை வெளிவந்து மூன்றே நாள்களுக்குள் இவ்வளவு உதவிகளும் கிடைக்க நெகிழ்ந்து போனார் மாரியப்பன்.

"மனைவி இறந்தபிறகு, நான் நடைப்பிணமாயிட்டேன். `இனி யாருக்காக வாழுறது'னு உள்ளுக்குள்ள புழுங்கிக்கிட்டு கிடந்தேன். தலைவலி, காய்ச்சல்னு படுத்தாகூட தொட்டுப் பார்த்து, ஆறுதல் கொடுக்க ஆளில்லாமல் தவிச்சுப்போயிருந்தேன். ரேஷன் கார்டைகூட ஏமாற்றி வாங்கிகிட்டு, `வாங்கலை'னு சாதிச்சுட்டாங்க. இந்தச் சூழல்லதான் நீங்க என்னையப் பத்தி எழுதினீங்க. அதன்மூலமா எனக்கு கிடைச்ச உதவிகளும், உறவுகளா கிடைச்ச மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகளும், ரொம்ப நம்பிக்கையா இருக்கு.

``கர்ப்பிணிக்கு அரிய வகை ரத்தம் தேவைனு நைட் 12 மணிக்கு கால் வந்தது..!" #WorldBloodDonorDay

இனி, நான் மூணு வேளையும் சோறு சாப்பாடு சாப்பிடுவேன். எனக்கு ஒன்னுன்னா வந்து நிக்க பத்துப்பேரு இருக்காங்க. இந்தத் தெம்புலேயே மிச்சக் காலத்தையும் இழுத்துப் புடிச்சு நிம்மதியா வாழ்ந்திருவேன்" என்று நா தழு தழுக்கச் சொல்கிறார் மாரியப்பன்.

அடுத்த கட்டுரைக்கு