Published:Updated:

` தண்ணீர், நூல், அரசமர இலைகள்!' - பெரியகுளத்தில் இப்படியும் ஒரு திருமணம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இதுவரை நடந்திராத புதுமையான திருமணத்தைப் பார்த்து அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

marriage
marriage

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவர் புத்த மதத்தின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய திருமணத்தைப் புத்தமத வழக்கப்படி மிக எளிமையாக நடத்தியிருக்கிறார்.

marriage
marriage

திருமண நிகழ்வின்போது, பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று மஞ்சள் கயிறை மணமகள் கழுத்தில் அணிவித்து சாம்பிரதாயத்தை முடித்தார் மணமகன். பின்னர், புத்தர், அம்பேத்கரின் படங்களுக்கு மணமக்கள் மாலை அணிவித்தனர். இதையடுத்து, துறவிகள் கூறிய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, மணமக்கள் தங்களை புத்த மதத்தில் இணைத்துக் கொண்டு குத்துவிளக்கேற்றினர்.

விழாவில் நெல், பழ வகைகள் இடம்பெற்றன. குடத்தில் தண்ணீரும், தண்ணீரிலிருந்து நூல் இணைக்கப்பட்டு புத்தரின் படத்துக்கு மேலே வைக்கப்பட்டுள்ள அரசமர, இலைகளுக்குள் இணைக்கப்பட்டிருந்தது. இந்த இணைப்பு இவர்களது திருமண உறவை என்றுமே பசுமையாக வைத்திருக்கும் எனத் தெரிவித்தனர். தாலி கட்டியபின் மேடையை விட்டு இறங்கிய மணமக்கள், உறவினர்களின் இருக்கைக்கு நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இதுவரை இப்பகுதியில் இதுபோன்ற புத்த மதக் கொள்கைப்படி திருமணம் நடைபெறாததால், மணவிழாவில் கலந்துகொண்ட அனைவரும், ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

marriage
marriage

மணமகன் பரமசிவத்திடம் பேசினோம். ``நான் ஏற்றுக்கொண்ட புத்தமத வழக்கப்படி மதத் துறவிகளை வைத்து திருமணம் செய்துகொண்டேன். இரு வீட்டார் சம்மதத்தோடுதான் திருமணத்தை நடத்தினோம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.