Published:Updated:

`இந்தப் பெண்ணை ஏற்கிறேன்; இந்தச் சட்டத்தை அல்ல’ - வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் நடந்த திருமணம்

வண்ணாரப்பேட்டை திருமணம்
வண்ணாரப்பேட்டை திருமணம்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் நடந்த திருமணம் கவனம்பெற்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடக்கும் வண்ணாரப்பேட்டைக்கு விரைந்தபோது, 'NO CAA, NO NPR' என்ற வாசகம் பொறித்த தலைப்பாகை அணிந்த சிறுமிதான் முதலில் கவனம் ஈர்த்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் 4-வது நாளாகத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்திவருகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 50 பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம், போலீஸாரின் தடியடி காரணமாக தமிழக முழுவதும் பரவியது.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் புர்கா அணிந்த பெண்களையும், நெற்றியில் குங்குமம் இட்ட பெண்களையும் காணமுடிந்தது. இரண்டு வீதிகள் முழுவதும் பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை முழுவதும் போலீஸாரைக் காணமுடிந்தது. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பல வீதிகள், ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. பெண்கள், குழந்தைகள் என அனைவரும் போராட்டக்களத்தில் குவிந்திருந்தனர். ஆண்களைவிட அங்கு பெண்களே அதிகம் காணப்பட்டனர். காலியாகக் காணப்பட்ட வீதிகளில் கூட்டம் கூட்டமாக காக்கிகள் சுற்றிக்கொண்டிருந்தனர். போராட்டம் நடைபெறும் இடங்களைச் சுற்றி போலீஸார் பேரிகார்டுகளைக் கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

போராட்டக்களத்தில் இருந்த பெண்களுக்கு மத்தியில், மணப்பெண் கோலத்தில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அங்கு விசாரித்தபோது, ‘அந்தப் பெண்ணின் பெயர் சுமையா. இவருக்கும் ஷயின்ஷா என்பவருக்கும் இன்று திருமண நடப்பதாக இருவீட்டாரும் பேசி முடிவுசெய்திருந்தனர். நாங்கள் இங்கு போராட்டத்தை முன்னெடுத்ததையடுத்து, திருமணத் தேதியைத் தள்ளிவைத்தனர். அதன்பின்னர், நாங்கள் இரு வீட்டாரிடமும் பேசி, போராட்டக்களத்திலே திருமணத்தை வைத்துக்கொள்ளலாமே எதற்கு தள்ளிப்போட வேண்டும் என்றோம். அதையடுத்து, இன்று இவர்களுக்குத் திருமணம் நடக்க உள்ளது’ என்ற விவரத்தைக் கூறினர்.

வண்ணாரப்பேட்டை போராட்டம்
வண்ணாரப்பேட்டை போராட்டம்

மேடையில் மணமகன் ஷயின்ஷா வந்து அமர்ந்ததும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர். மணமகன் மற்றும் மணமகள் இருவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. இருவருக்கும் இஸ்லாமிய முறைப்படி அங்கு திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் மேடையில் தோன்றி, குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினர்.மேடையில் பேசிய மணமகன், ‘ இந்தப் பெண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, இந்த என்.பி.ஆர் சட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த சட்டத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று ஷயின்ஷா கூறியதும் அங்கிருந்தவர்கள் கரகொலி எழுப்பினர். இதையடுத்து, மணமக்கள் இருவரும் போராட்டக்களத்தில் அமர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தொடர்ந்து பதிவுசெய்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு