`ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!’ - மதுரையின் `டிஜிட்டல் மொய்’ திருமணம் #Viral

மொய்வைப்பவர்களின் டேட்டாவைச் சேமித்து வைக்கும் வகையில் மதுரைக்காரர் உருவாக்கிய மென்பொருளையெல்லாம் பயன்படுத்திவந்தார்கள். அது விழா நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.
வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்பவர்கள், மொய்வைக்கும் வழக்கம் தமிழக மக்கள் மத்தியில் முக்கியமானது. அதில் க்யூஆர் கோடு டெக்னாலஜியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள்.

திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா மட்டுமல்லாமல், வைத்த மொய்யைத் திரும்ப வசூல் செய்ய, ஏதாவதொரு பெயரில் நிகழ்ச்சி நடத்தி மொய் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள் சிலர்.
சமீபகாலமாக மொய்வைப்பவர்களின் டேட்டாவைச் சேமித்துவைக்கும் வகையில் மதுரைக்காரர் உருவாக்கிய மென்பொருளையெல்லாம் பயன்படுத்திவந்தார்கள். அது விழா நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

இந்தநிலையில் மொய்வைப்பவர்கள், மொய் வாங்குகிறவர்களின் சிரமத்தைக் குறைக்க, பணப் பறிமாற்ற தளங்களின் கியூஆர் கோடைப் பிரபலபடுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
நேற்று மதுரையில் நடந்த சிவசங்கரி-சரவணன் திருமணத்தில் மொய் எழுதும் இடத்தில் போன்-பே, ஜி-பே போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களின் கியூஆர் கோடு பலகைகளை வைத்திருந்தார்கள்.
இதனால் திருமணத்துக்கு வந்த பலரும் மொபைல் மூலம் மொய் எழுதினார்கள். பணப் பரிமாற்றம் நிகழ்ந்தவுடன், இரண்டு தரப்புக்கும் எஸ்.எம்.எஸ் வந்ததால் திருப்தியடைந்தார்கள்.

சிலர் பழைய முறையில் மொய் எழுதினாலும், பணத்தை எண்ணுவது, அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது, மொய் நோட்டை பாதுகாப்பது போன்ற பிரச்னைகளிலிருந்து ஓரளவு ரிலாக்ஸ் கிடைத்ததாக மணமக்கள் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அது மட்டுமல்லாமல் திருமணத்துக்கு வர முடியாதவர்கள் மொபைல் மூலம் வாழ்த்துகளை மட்டுமல்ல, அழைப்பிதழிலுள்ள கியூஆர் கோடு மூலம் தங்கள் மொய்யை அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மொய் வாங்குவதில் டெக்னாலஜியைப் பயன்படுத்த மதுரைக்காரர்கள் தொடங்கிவைத்திருக்கும் சம்பவம் தமிழகம் முழுக்க வைரலாகியிருக்கிறது.