Published:Updated:

புதுக்கோட்டை: கலெக்டர் ஆபீஸ் வாசலில் தீக்குளிக்க முயன்ற பெண்! கணவர்மீது பரபரப்பு புகார்!

மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்
மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

`என்னை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாகவும், சமாதானமாகச் செல்வதாகவும் போலீஸாரிடம் கூறி என்னை மறுபடியும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.’

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே பாப்பாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரின் மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வெண்ணிலா, தன் இரண்டு மகள்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் திடீரென தான் மறைத்துவைத்திருந்த மண்ணெண்ணெயை உடம்பில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அப்போது, அவரை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடுத்தி நிறுத்தினர். வெண்ணிலா கொண்டு வந்த மனுவில், ``என் கணவர் பாலகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். எங்களுடைய தேவைகளை நிறைவேற்றாததுடன், என்னையும், என் குழந்தைகளையும் பார்க்கக்கூட வருவதில்லை. இது பற்றிக் கேட்டதற்கு என்னையும் என் குழந்தைகளையும் அடித்து விரட்டிவிட்டார்.

விசாரணை
விசாரணை

இதையடுத்து, வேறு வழியின்றி அறந்தாங்கியிலுள்ள என் அண்ணன் வீட்டில் தங்கியிருந்தோம். அங்கும் எங்களை இருக்கவிடாமல் வந்து அடித்து உதைத்துத் துன்புறுத்தினார். இது பற்றி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்தநிலையில், என்னை நல்லபடியாகப் பார்த்துக்கொள்வதாகவும், சமாதானமாகச் செல்வதாகவும் போலீஸாரிடம் கூறி என்னை மறுபடியும் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும், அந்த உறவை அவர் கைவிடவில்லை. அதேநேரத்தில், என்னையும் குழந்தைகளையும் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். அதனால் எங்களுக்குச் சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

சம்பவ இடத்துக்கு வந்த திருக்கோகர்ணம் காவல்துறை அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மேல் விசாரணைக்காக திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அவரை அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் தனது மகள்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு