Election bannerElection banner
Published:Updated:

``ஒரு போலீஸ்காரனா அந்த 300 ரூபாய் அவ்ளோ முக்கியம்னு சொன்னார்!'' - கொல்லப்பட்ட காவலரின் மனைவி

எஸ்.பியிடம் ரொக்கப்பரிசு பெற்ற சுப்பிரமணியன்
எஸ்.பியிடம் ரொக்கப்பரிசு பெற்ற சுப்பிரமணியன்

`` `கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு வந்திருக்கேன். போலீஸ் வேலை எவ்வளவு கம்பீரமான பொறுப்பு மிகுந்த வேலை தெரியுமா? ஒரு போலீஸ்காரனுக்கு முதல்ல டியூட்டிதான் முக்கியம்'ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்” என்கிறார் ரவுடி வெடிகுண்டு வீசியதில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி.

தூத்துக்குடி காவல்துறை மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. ரவுடியைப் பிடிக்கும் முயற்சியில், வெடிகுண்டு வீசப்பட்டு கொல்லப்பட்டுவிட்டார் காவலர் சுப்பிரமணியன். இச்சம்பவம் தமிழக போலீஸ் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏரல் அருகில் உள்ள பண்டாரவிளை கிராமம்தான் காவலர் சுப்பிரமணியனின் சொந்தஊர். ஊர் முழுவதும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வீரவணக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. ஊரின் தொடக்கத்தில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்றோம். மடியில் தன் 10 மாத ஆண் குழந்தை சிவஹரிஷை தூக்கி வைத்துக்கொண்டு, உயிரிழந்த கணவரின் படத்தைப் பார்த்து ஆற்றமுடியாத துயரத்துடன் அழுது கொண்டிருந்தார் சுப்பிரமணியனின் மனைவி புவனேஸ்வரி.

அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பேசினேன். ``எனக்குப் பக்கத்துல இருக்குற சுப்பிரமணியபுரம் கிராமம்தான் சொந்த ஊர். என்னோட சின்ன வயசுலயே அம்மா, அப்பா இறந்துட்டாங்க. அம்மா பெத்த பாட்டியோட வளர்ப்புலதான் படிச்சேன். பெத்தவங்க இல்லாததுனால எனக்கு கல்யாணம் தட்டிப்போச்சு. ஆனா, மனமுவந்து என்னைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டார் என் கணவர் சுப்பிரமணியன். `பெத்தவங்க இல்லேன்னா என்ன.. உனக்கு நான்தான் எல்லாம். எங்க அம்மா, அப்பாதான் உனக்கும் அம்மா அப்பா’ன்னு கல்யாணம் ஆன முதல் நாள்லேயே சொன்னார்.

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன்
உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன்

நாங்க ஒரே வீட்ல நாலு குடும்பமா ஒற்றுமையா வாழ்ந்திட்டிருந்தோம். இப்போ வரைக்கும் ஒரே சமையல்தான். மாமா (சுப்பிரமணியனின் தந்தை) ஒருத்தரின் வரவு செலவுதான். சின்ன வயசுல நான் இழந்த அம்மா, அப்பா பாசம் எனக்கு இங்க முழுமையா கிடைச்சுது. அவரு போலீஸ் வேலைக்குச் சேர்ந்த மறுவருஷம் (2018-ல்) எங்களுக்குக் கல்யாணமாச்சு. நான் எம்.ஏ, எம்.ஃபில் முடிச்சிருக்கேன். வேலைக்குப் போறேன்னு சொன்னப்போகூட `வேண்டாம்மா.. நீ வீட்டுல சந்தோஷமா இருந்தாப் போதும்’னு சொன்னார்.

எஸ்.பி ஆபிஸ்ல டிரைவரா வேலை பார்த்தார். பணிமாறுதலில் ஆழ்வார் திருநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. `கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு வந்திருக்கேன். போலீஸ் வேலை எவ்வளவு கம்பீரமான பொறுப்பு மிகுந்த வேலை தெரியுமா? ஒரு போலீஸ்காரனுக்கு முதல்ல டியூட்டிதான் முக்கியம்'ன்னு சொல்லிட்டே இருப்பார். போன மாசம் சிவகளையில் நடந்த இரட்டைக்கொலை வழக்கில், மூணே மணி நேரத்தில் குற்றவாளிகளைப் பிடிச்ச தனிப்படையில் என் கணவரும் ஒருத்தர். அவர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் சார் ரொக்கப்பரிசு கொடுத்துப் பாராட்டி ஊக்கப்படுத்தினாங்க. அதுல, 300 ரூபாய் இருந்தது. கவருக்குள்ள இருந்து மூணு நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து என்கிட்ட காட்டி அவ்ளோ சந்தோஷப்பட்டார்.

கண்ணீருடன் புவனேஸ்வரி
கண்ணீருடன் புவனேஸ்வரி

`தனிப்படை டியூட்டிக்கு மாறின பிறகு கிடைச்ச முதல் வெற்றிக்கான அங்கீகாரம். இந்த 300 ரூபா எனக்கு அவ்ளோ முக்கியம். எஸ்.பி சாரே தோளில் தட்டி பாராட்டிட்டாங்க'ன்னு வீட்டுல எல்லார்கிட்டயும் சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த மூணு நூறுரூபாய் நோட்டுகளையும் அவருக்கு இஷ்டமான மூணு கோயில்களின் உண்டியலில் போட்டு சாமி கும்பிட்டு வந்தார். வெடிகுண்டு சம்பவம் நடந்த நாள் காலையில், என் கணவரோட ரெண்டாவது அண்ணன் பத்திரகாளிமுத்துவின் மகனுக்கு மொட்டை போடுறதுக்காக தேரிக்குடியிருப்பு அய்யனார்கோயிலுக்கு குடும்பத்தோட போய்ட்டு வந்தோம்.

வீட்ல பையனை மடியில தூக்கி வச்சி விளையாடிக்கிட்டு இருக்கும்போதுதான் போன் வந்துச்சு. உடனே, ``இன்னைக்கு ஒரு ரவுடியை பிடிக்கப் போறோம். எப்படியும் அரஸ்ட் பண்ணிடுவோம். நான் வீட்டுக்கு வர முன்னபின்ன ஆகும்"னு சொல்லிட்டு கிளம்பிப்போனார். இரண்டரை மணிக்கு என் நம்பருக்கு போன் வந்துச்சு. ``வெடிகுண்டு சம்பவத்துல சுப்பிரமணி இறந்துட்டாரு"ன்னு கூடப்போன போலீஸ்ல ஒரு அண்ணன் சொன்னாங்க.

போலீஸார் ஒட்டிய போஸ்டர்
போலீஸார் ஒட்டிய போஸ்டர்

அந்த செய்தியைக் கேட்டு எனக்கு உயிரே போயிடுச்சு. ``எப்படியும் ரவுடியைப் பிடிச்சுடுவோம்"னு அவர் சொன்ன மாதிரியே, அந்த ரவுடி துரைமுத்துவை பின்புறமா போய் பிடிச்சப்போதான், தலையில வெடிகுண்டு பட்டு இறந்ததா சொல்றாங்க. அவர் சொன்னதை செஞ்சுட்டார். எப்போதும் சிரிச்ச முகத்தோட இருக்குற என் கணவரின் முகத்தை கடைசியாக்கூட பார்க்க முடியலை. மூணு மாசம் கர்ப்பமா இருக்குற எனக்கு என் கணவரே மகனாப் பொறப்பார். திரும்பவும் அந்த சிரிச்ச முகத்தை நான் பார்க்கணும்” என்றார் கண்ணீருடன்.

ஊர்க்காரர்கள் சிலரிடம் பேசினோம். ``சுப்பிரமணியனுக்கு சித்தர், பத்திரகாளிமுத்து என்ற அண்ணன்களும், லெட்சுமி என்ற அக்காவும், சிவபெருமாள் என்ற தம்பியும் உண்டு. அவனோட அப்பா பெரியசாமி, பனையேறும் தொழிலாளி. அவருக்கு வயசாகிட்டதுனால, குடும்பப் பொறுப்புகளை மூத்த அண்ணன் சித்தர்தான் கவனிச்சுக்கிறார். அண்ணன்கள் கொத்தனார் வேலை பார்க்கிறாங்க. தம்பி டிரைவரா இருக்கான். சுப்பிரமணியன் சின்ன வயசுலயே ரொம்ப கஷ்டப்பட்டான். பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே லீவு நாட்கள்ல விவசாயக்கூலி வேலைக்குப் போனான். அதுல கிடைக்குற பணத்துல வீட்டுச்செலவுக்கும் கொடுத்துட்டு படிப்புத்தேவைக்கும் காசு சேர்த்துக்குவான்.

சுப்பிரமணியனின் உறவினர்கள்
சுப்பிரமணியனின் உறவினர்கள்

தன்னோட செலவுக்குன்னு வீட்டுல பைசா கேட்டதில்ல. சின்ன வயசுல இருந்தே போலீஸ் ஆகணுங்கிறதுதான் அவனோட விரும்பம். முடி வெட்டினாலும் போலீஸ் கட்டிங் போட்டுக்குவான். போலீஸ் தேர்வுக்கு படிச்சுக்கிட்டு இருக்கும்போதும் வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் போடுறது, லோடு ஆட்டோக்களில் லோடு ஏத்தி இறக்குறதுன்னு வேலைகள் செய்தான். சின்னப் பொருளா இருந்தாலும் சொந்த உழைப்புல வாங்கணும்னு சொல்லுவான். அவன் போலீஸ் வேலைக்கு சேர்ந்தபிறகு, அவனைப்பார்த்து ஊருக்குள்ள நிறைய பசங்க போலீஸ் தேர்வு படிக்கவும், உடல் தகுத்தேர்வுக்கான உடற்பயிற்சியும் செய்ய ஆரம்பிச்சாங்க” என்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு